செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

படுத்தபடுக்கையாக இருப்பவர்களின் படுக்கைப் புண் விரைவில் ஆற...!

By டாக்டர் எஸ். சுவாமிநாதன்| DIN | Published: 26th July 2018 11:01 AM


என் மனைவிக்கு 69 வயதாகிறது. 9 வருடம் முன்பு BRAIN STROKE ஏற்பட்டு, ஆபரேஷன் செய்தும் முன்னேற்றமில்லாமல் படுத்தபடுக்கையாக இருக்கிறாள். உணவு,  மூக்குக் குழாய் மூலம் திரவ உணவாக தரப்பட்டு வருகிறது. தற்போது 3 மாதமாக படுக்கைப் புண் (BEDSORE) வந்து அவதிப்படுகிறாள். OINTMENT முதலிய வகைகள் உபயோகப்படுத்தினாலும் முன்னேற்றமில்லை. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் ஏதேனும் உண்டா? 

 - ட.ஒ கமலசேகரன் ,  சென்னை - 64.


உடலில் எந்தப் பகுதியில் புண் ஏற்பட்டிருந்தாலும், அதனால் துன்பப்படுபவர்கள் படுத்திருக்கும் அறையானது தும்பு தூசியற்றதாகவும், கடும் சூரிய வெளிச்சம் வராதவாறும், அதிக அளவில் காற்றோட்டமில்லாதவாறும், படுத்திருக்கும் படுக்கை நல்ல சௌகர்யமாகவும், விஸ்தாரமாகவும், தலையை கிழக்குப் பகுதியில் வைத்து படுத்திருக்கும்விதம் அமைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் ஸýஸ்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில் - அவரைப் பார்க்க வரும் நண்பர்கள், உறவினர்கள், அவர் சுய நினைவுடன் இருக்கும் பட்சத்தில், பேசும் போது இனிமையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய ஆறுதலான அந்தப் பேச்சின் மூலம், அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் துன்பமானது சற்று குறையக் கூடும். புண் உள்ளவர்கள் பொதுவாகவே பகலில் தூங்கக் கூடாது. சுய நினைவுடன் உள்ளவர்கள், படுத்த படுக்கையாக இருந்தாலும், மற்றவர்கள் பேசும் பண்புள்ள பேச்சு, பார்வைக் குறைவு இல்லாதிருந்தால், மகிழ்ச்சி தரும் தொலைக்காட்சி நிகழ்வுகள் ஆகியவற்றின் மூலம் பகல் தூக்கத்தைத் தவிர்த்திட முனைய வேண்டும். ஏனெனில்

பகல்தூக்கம், புண்ணில் அரிப்பையும், உடல் கனம், வீக்கம், வலி, புண்ணிலிருந்து நீர்க்கசிவு, சிவந்த நிறம் ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியைக் கஞ்சியாகவும், உளுந்து, எள்ளு, பட்டாணி, கொள்ளு, அவரை, கீரை வகை சூப்புகள், புளிப்பு, உப்பு, காரச் சுவை, வெல்லம், மாவுப் பண்டங்கள், உலர்ந்த மாமிச சூப்பு, உலர்ந்த கறிகாய்கள், ஆட்டு மாமிசம், நீர்வாழ் பிராணிகளின் மாமிசம், குளிர்ந்த நீர், பச்சைப்பயறுடன் வேக வைக்கப்பட்ட அரிசிக் கஞ்சி, பாயசம், தயிர், பால், மோர் போன்றவற்றை கூழாகவோ, நீர்வடிவத்திலோ அவருக்கு மூக்குக் குழாய் மூலம் கொடுக்கப்படக் கூடாது. இவை அனைத்தும் புண்ணை ஆறவிடாமல், நொச நொசத்த நிலையிலேயே வைத்திருக்கும்.

அவர் படுத்திருக்கும் அறையில் , கிருமிகளின் வரவைத் தவிர்ப்பதற்காக, எந்தவித சலிப்பும் படாமல், கடுகுடன் வேப்பிலை சேர்த்து, நெய் மற்றும் உப்பு பிசறி, அதன் மூலம் புகை உண்டாக்கி, பத்து நாட்களுக்குத் தொடர்ந்து, பகல், இரவு என இரு வேளை காட்ட வேண்டும். அவருடைய தலைப் பகுதியில், வசம்பும் கடுகும் மூட்டையாகக் கட்டிவைப்பதால், உடலில் கிருமிகளின் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

பழைய பச்சரிசி (அறுவடை செய்து 4 - 6 மாதங்களானது)க் கஞ்சியை வெது வெதுப்பாக, 5 -10 மி.லி. திக்தகம் எனும் நெய் மருந்தை உருக்கிச் சேர்த்து, சிறிது இந்துப்புடன் வயிற்றுக்குக் கொண்டு சேர்ப்பதால், புண் விரைவில் ஆற வாய்ப்பிருக்கிறது. முற்றாத, இளைய முள்ளங்கியினால் தயாரிக்கப்பட்ட சூப்பையும் கொடுக்கலாம். மாதுளம் பழச்சாறு, நெல்லிக்கனி சாறு போன்றவற்றை  வயிற்றுக்குக் கொடுப்பதும் நலமே. வெறும் பச்சைப்பயறு சூப்பை, திரவ உணவாகச் செலுத்தலாம்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்துச் தயாரிக்கப்படும் திரிபலை சூரணம், அதிமதுரத்தூள், கருங்காலிக் கட்டை, சிராத்தூள் ஆகியவை சேர்த்து, மொத்தமாக 60 கிராம் (அதாவது, திரிபலை 30 கிராம், அதிமதுரத்தூள் 10 கிராம், கருங்காலிக் கட்டை 20 கிராம்) எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் காய்ச்சி, 250 மிலி ஆகக் குறுகியதும் வடிகட்டி, வெது வெதுப்பாக புண்ணைக் கழுவப் பயன்படுத்தலாம். பஞ்சில் முக்கி, மெதுவாகப் பிழிந்து விட்டால் போதுமானது. சிறிது நாட்கள் தொடர்ந்து காலை, மாலை என இருவேளை கழுவி வர, புண் நன்றாக உலர்ந்துவிட்ட பிறகு, ஜாத்யாதி எனும் நெய் மருந்தை, பஞ்சில் முக்கி, புண் ஆறுவதற்காக வைத்து பிளாஸ்டரால் ஒட்டிவிடலாம். ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இச்சிப்பட்டை, வேப்பம்பட்டை, சரக்கொன்றைபட்டை, புங்கம்பட்டை, ஏழிலைப் பாலைப்பட்டை, வேங்கைமரப்பட்டை ஆகியவை புண்ணை ஆற்றுவதில் தோல்வி அறியாதவை. நுண்ணிய தூளாகப் பொடித்து, புண் மீது தூவி வர, கிருமிகள், துர்நாற்றம் அண்டாது.

நோய் குணமாவதற்காகக் கொடுக்கப்படும் எந்த ஆங்கில மருந்தாக இருந்தாலும் அதனுடன் ஆயுர்வேத மருந்துகளை உடனே சேர்த்துக் கொடுக்கக்  கூடாது. சுமார் 1 -2 மணி நேரம் கழித்துக் கொடுக்கலாம். புண், சீழ், ஊண், நீர் போன்றவை குணமடைய ஆயுர்வேத  மருந்தாகிய ஆரக்வதாதி கஷாயத்தை, சுமார் 15 மி.லி.  எடுத்து, அதில் 60 மி.லி. வெது வெதுப்பான தண்ணீர் கலந்து, காலை மாலை, வயிறு காலியாக உள்ள நிலையில், குழாய் மூலம் செலுத்தலாம். புண்ணில் கிருமிகளை நசித்திடச் செய்யும் வில்வாதி குளிகையை, ஒன்றிரண்டு இந்த கஷாயத்துடன் நன்கு மைய அரைத்துச் சேர்த்தும் கொடுக்கலாம். இது போன்ற கழுவுதல், புகைபோடுதல், நுண்ணிய மூலிகைப் பொடி மருந்துகளைத் தூவுதல், உள் மருந்துகளை உணவுடனோ, தனியாகவோ கொடுத்தல் போன்ற சிகிச்சை முறைகளால் புண் விரைவில் ஆற வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

More from the section

நல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செவித்திறன் குறைந்தால்...?
கண்களை கவனியுங்கள்.. காதலியின் கண்களை அல்ல உங்கள் கண்களை!
பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!