சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

நல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

By டாக்டர் எஸ். சுவாமிநாதன்| DIN | Published: 08th November 2018 12:00 AM

தற்காலத்தில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், முக்கியமாகப் பெண்மணிகள் முழங்கால் மூட்டு தேய்வு காரணமாக மிகவும் துன்பப்படுவதைக் காண்கிறோம். இப்போதெல்லாம் KNEECAP REPLACEMENT SURGERY என்ற அறுவைச் சிகிச்சையும் சகஜமான நிவாரணம் ஆகியுள்ளது.

இயற்கையான முழங்கால் மூட்டிற்கு மாற்றாக உலோகத்திலான KNEECAP பொருத்தப்படுகிறது. மிகவும் அதிகச் செலவு வைக்கும் இத்தகைய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களும் திரும்பவும் திரும்பவும் அந்த செயற்கை KNEECAP- ஐ மாற்ற வேண்டி இருப்பதாகச் சொல்கிறார்கள் . உடல் எடை அதிகரித்துள்ளதே இதற்கான காரணம் என்பது உண்மையா? மரச்செக்கில் ஆட்டிய இயற்கையான நல்லெண்ணெய் வெறும் வயிற்றில் உட்கொள்வது பற்றி ஆயுர்வேதத்தில் தகவல்கள் உண்டா?

- சுப்ர. அனந்தராமன், சென்னை.

வழுவழுப்பை மூட்டுகளில் ஏற்படுத்தக் கூடிய தன்மையுடைய பொருட்களை வகைப்படுத்தி அவற்றைச் சீராக உட்கொள்வதையும், அதே வழுவழுப்பை வெளிப்புறமாக மூட்டுகளில் தடவி வருவதையும் வழக்கமாக்கிக் கொண்டால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகளிலிருந்து தக்கதொரு பாதுகாப்பை நாம் பெற முடியும். உளுந்து, எள்ளு, பால், கோதுமை, ஆளி விதை, மாமிசசூப்பு, அறுபதாம் குறுவை அரிசி (கார அரிசி), நெய், வெந்தயம், நல்லெண்ணெய், வெண்பூசணி, சுரைக்காய், வெள்ளரி, திராட்சை, மாதுளம்பழம், பேரீச்சம்பழம், இந்துப்பு போன்றவை நெய்ப்பை மூட்டுகளில் ஏற்படுத்தித் தருபவை. இவற்றிலுள்ள பசையை ஜாடராக்னி எனும் பசித்தீயில் வேக வைத்து குடல் வழியாக உறிஞ்சப்பட்டு, சிலேஷக கபம் எனும் மூட்டுகளை வழுவழுப்பாக வைத்திருக்கும் தோஷத்திற்கு ஏற்றாற்போல் மாறி சேர்க்கப்பட்டால், மூட்டுகளில் உராயும் தன்மையானது தவிர்க்கப்படும். இதைச் செய்வதற்கு ஆதார பூதமாக பசித்தீ இருப்பதால், மூட்டுகளில் வலியோ வீக்கமோ காணப்பட்டாலும் ஆரம்ப சிகிச்சை என்பது பசியை நேர்படுத்தி, குடல் சுத்தமாக ஆக்கப் பட்டபின்னரே, மூட்டுகளுக்கு சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பது ஆயுர்வேதத்தின் கூற்றாகும். இதிலுள்ள சிரத்தைக் குறைவே, பலருக்கும் பல வகைகளில் உபாதைகளைத் தோற்றுவிக்கின்றது.

உடல் எடை அதிகரித்தவர்களுக்கு மூட்டுகள் விரைவாக கல கலத்துப் போவதற்குக் காரணமாக, மூட்டுகளில் உள்ள ஜவ்வு வெளிப்பிதுங்குவதாலும், ஜவ்வு கிழிவதாலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளன. அமர்ந்த நிலையில் தெரியாத கஷ்டம், நிற்கும் நிலையிலோ, நடக்கும் நிலையிலோ, மூட்டுகளில் ஏற்படுத்தும். இந்த நிலை மாற, தொடர்ந்து நெய்ப்பை அப்பகுதிக்கு தருவது ஒன்றே வழியாகும். ஆனால், இதிலுள்ள கஷ்டம், நெய்ப்பைத்தரும் பல பொருட்களும், உடல் பருமனை மேலும் வளர்க்கும் என்பது தான்.

அதனால் உடல் பருமனைக் குறைக்கும் வராதி கஷாயம், வரணாதி கஷாயம், குக்குலுதிக்தகம் கஷாயம், கைசோர குக்குலு, த்ரயோதசாங்க குக்குலு போன்ற மாத்திரைகள் அடிக்கடி சாப்பிடப்பட வேண்டியவை. இதன் மூலம், உடல் லேசாவதுடன், மூட்டுகளிலுள்ள ஜவ்வுகள் வீக்கம், வலி போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடும். அதன் பிறகு, மூலிகை தைலத்தைக் கொண்டு, வறட்சி அடைந்துள்ள மூட்டுகளின் மீது இளஞ்சூடாகத் தடவி 1/2 மணி நேரம் ஊறலாம். பிறகு துடைத்து விடலாம். பிண்ட தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம், முக்கூட்டு தைலம் ஆகியவை இந்த ஏற்பாட்டிற்காக பயன்படுத்தத் தேவையானவை.

ஊடுருவும் தன்மை, செரிமானமாவதற்கு முன்பாகவே உடலில் பரவிவிடும் குணம், தோலின் வலிமை, கண்பார்வை சக்திக்கு வலுவூட்டுதல் (வெளி உபயோகத்தினால்), சூடான வீர்யம், தேய்த்துக் குளிப்பதால் உடல் மெலிந்தவர் பருப்பதும், உள் உபயோகத்தினால் பருத்தவர் இளைப்பதும், மலத்தை இறுக்குவதும், குடல் கிருமிகளை அழிப்பதும், மூலிகைகளால் காய்ச்சப்பட்டதும் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயனளிக்கக் கூடிய நல்லெண்ணெய், மனிதர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் தான் ! 
(தொடரும்) 

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) 
செல் : 94444 41771

 

More from the section

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செவித்திறன் குறைந்தால்...?
கண்களை கவனியுங்கள்.. காதலியின் கண்களை அல்ல உங்கள் கண்களை!
பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!
தலைபாரத்தைக் குறைத்திடும் விரலி மஞ்சள்!