வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க, உடல் ஆரோக்யத்துக்கு அடிப்படையான குடல் சுத்தம் பேணும் டயட்!

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| Published: 24th September 2018 01:40 PM

 

மனித உடலில் குடல் சுத்தமாக இருந்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்யம் மேம்படும். நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் இரைப்பையில் செரிக்கப்பட்டு சத்துக்களாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்த பின் எஞ்சும் கழிவுகள் சிறிது, சிறிதாக குடல் வழியே நகர்த்தப் பட்டு இறுதியில் மலக்குடலை அடையும். உணவுப் பொருட்கள் குடலின் வழியே செல்லும் போது அங்கு உணவிலிருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கும் அபாயம் உண்டு. இது சில சமயங்களில் விபரீதமாக குடல் புற்றுநோய்க்கும் இட்டுச் செல்லக் கூடும். எனவே அவ்வப்போது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டியது நமது கடமையாகிறது. குடலை சுத்தம் செய்வது என்றால் மருந்து, மாத்திரைகளால் அல்ல நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மூலமாகவே நமது குடலை சுத்தம் செய்யமுடியும். அந்த உணவுப் பொருட்கள் அனைத்துமே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய விதத்திலானவையே. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்... 

காலிஃப்ளவர், பிரக்கோலி, முட்டைக்கோஸ், நூல்கோல், டர்னிப் போன்ற காய்கறிகள்...

மேற்கண்ட காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் காய்கறிகளில் நார்ச்சத்து மிகவும் அதிகம். இவற்றை உண்பதால் நமது உணவு செரித்தலின் போது மாவுச்சத்து திசுக்களில் தேங்காமல் கரைக்கப்பட்டு நார்ச்சத்து மிகுந்திருப்பதால் குடலின் வழியே எளிதாக நகர்ந்து கழிவுகள் வெளியேறுவது தன்னியல்பாக நடந்தேறுகிறது. இதனால் எஞ்சிய உணவுக் கழிவுகள் குடலில் தேங்கும் நிலை தவிர்க்கப்படுகிறது. மேற்கண்ட உணவுப் பொருட்கள் நார்ச்சத்து மிகுந்தவை மட்டுமல்ல அவற்றில் ஆண்ட்டி ஆக்சிடண்டுகளும் அதிகம். இவை ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை சுத்திகரிப்பதால் மந்தநிலை நீங்கி உடல் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய நிலை கிட்டுகிறது.

பூண்டு...

பூண்டில் உள்ள ஆண்ட்டி பாக்டீரியல், ஆண்ட்டி வைரல், ஆண்ட்டி பாராசிட்டிக் தன்மை குடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதோடு குடலில் உண்டாகக் கூடிய சிறு சிறு புழுக்கள் மற்றும் பூச்சிகளையும் அழிக்கக் கூடிய தன்மை கொண்டது. அது மட்டுமல்ல பூண்டில் உள்ள ஆண்ட்டி ஆக்சிடண்ட்டுகள் உடலின் உட்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டவை. அது மட்டுமல்ல இது உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. அதோடு செரிமானத்தையும் சீராக்குகிறது.

சுத்தமான நீர் மற்றும் உப்பு...

குடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால் அது ஆரோக்யமாக இருக்கும். எப்போதெல்லாம் நீர்ச்சத்து குறைகிறதோ அப்போதெல்லாம் மலச்சிக்கல் ஏற்பட்டு குடலில் தங்கும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். ஆகவே எப்போதும் உணவு உண்டு முடித்த அரைமணி நேரத்தின் பின் போதுமான அளவு தண்ணீர் அருந்த மறக்கக் கூடாது. நீர் அருந்தும் போது நாளில் ஒருமுறையாவது 1 டம்ளர் நீருடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தினால் குடல் சுத்த செயல்முறை சற்று வேகப்படும்.

அவகாடோ...

இதை வெண்ணெய்ப்பழம் என்றும் சொல்வார்கள். இது செரிமானத்திற்கு மட்டுமன்றி குடல் சுத்தத்திற்கும் உதவுகிறது. அவகாடோவில் உள்ள கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தின் ஆரோக்யத்துக்குப் பெரிதும் உதவுகின்றன. இந்தப் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்றுநோயையும் தவிர்க்கும். இதிலிருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து நீரை உறுஞ்சுவதுடன் குடலில் உள்ள இதர பொருட்களுடன் பிணைக்கவும் உதவும்.

பச்சை இலைக் காய்கறிகள்...

பச்சைக் காய்கறிகள் என்றால் அவை பெரும்பாலும் கீரை வகைகள் தான். கீரை வகைகள் செரிமானத்தை அதிகரிப்பதோடு குடல் பாதுகாப்புக்கும் உதவுகிறது. இதிலுள்ள கொழுப்பில் கரையக்கூடிய குளோரோஃபில் குடலின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு குடலில் தங்கும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை முடக்கி குடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும். இந்த குளோரோஃபில் குடலை மட்டுமன்றி கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவும்.

நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்...

செரிமான மண்டலமானது ஏராளமான நன்மை வழங்கும் பாக்டீரியாவால் ஆனது. எப்போது செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறதோ அப்போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்யமும் பாதிக்கப்படும். உடலில் குடல் பகுதியில் தான் 80% நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. ஆகவே குடல் ஆரோக்யமாக அமையாவிட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். இதனை சரி செய்வதற்கு நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளான தயிர், ஊறுகாய், இட்லி, தோசை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கற்றாழை...

கற்றாழை மலச்சிக்கல் பிரச்னையை எளிதில் நீக்கி ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேன்மையாக்கும். எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கற்றாழை ஜூஸை அடிக்கடி அருந்துவது நல்லது.

சியா மற்றும் ஆளி விதைகள்...

இவை இரண்டிலுமே நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால் ஆரோக்யமான செரிமானத்தை ஊக்குவிப்பதோடு குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உதவும். இவற்றில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குடல் காயங்களைக் குறைப்பதோடு செல்சுவர்களையும் உறுதிப் படுத்தும். முக்கியமாக இவற்றிலிருக்கும் கரையக் கூடிய நார்ச்சத்து ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்...

 

இவற்றில் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ்களும், ஆண்ட்டி ஆக்சிடண்ட்களும் ஏராளமாக இருப்பதால் ஒருவர் அடிக்கடி பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உண்ணும் போது அவரது குடலியக்கம் சிறப்பாக அமைகிறது.

ஆப்பிள்...

ஆப்பிளில் இருக்கும் பெப்டின் எனும் பொருள் உடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும். அதோடு ஆப்பிளில் நார்ச்சத்தும் அதிகமிருப்பதால் செரிமான மண்டல ஆரோக்யத்துக்கு இது மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. பெப்டின் உடலில் இருந்து அனைத்து வகையான டாக்ஸின்களையும் நீக்கும் சக்தி கொண்டது. எனவே குடல் சுத்தமாக வேண்டும் என்று விரும்புபவர்கள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்கலாம்.

க்ரீன் டீ...

இது எடை குறைப்பில் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை குடல் சுத்தத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆண்ட்டி ஆக்சிடண்டு குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு குடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். அதோடு க்ரீன் டீயில் உள்ள விட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்பு மண்டலச் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பதால் தினமும் ஒரு கப் க்ரீன் டீ அருந்தினால் உங்களது குடல் இயக்கம் சீராக அமையும்.

எலுமிச்சை...

எலுமிச்சை கல்லீரலில் பித்தநீர் உற்பத்தியைத் தூண்டி குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அருந்தும் பழக்கத்தை மேற்கொண்டால் குடலில் மட்டுமல்ல உடலில் உள்ள அத்தனை நச்சுக்களையும் கூட அகற்ற முடியும்.

Tags : BEST 10 FOODS GUT HEALTH SUPER FOODS FOR GUT HEALTH குடல் ஆரோக்யம் மலச்சிக்கல் நார்ச்சத்து உணவே மருந்து குடல் நலம் பேணும் டயட் தினமணி ஹெல்த் dinamani health

More from the section

ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் காபி இது!
கிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி! (விடியோ)
சிறுநீரக செயலிழப்பை சீர் செய்ய சித்தர்கள் கண்டுபிடித்த வீட்டு வைத்தியம்!
பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது இது!
நாவூறும் சுவையில் ஒரு தர்பூசணி அல்வா!