சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

உங்கள் அம்மாவின் சுவை! இப்படியொரு ஆரோக்கிய உணவகமா?

By  - ஸ்ரீதேவி| Published: 26th September 2018 05:29 PM

கடந்த 12 ஆண்டுகளாக சென்னை, கீழ்கட்டளை பகுதியில் 'உங்கள் அம்மாவின் சுவை' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் நாகலட்சுமி. உணவகம் என்றதும் வழக்கமான சாம்பார், கூட்டு, பொரியல் போன்றவை தானே இருக்கும் இதிலென்ன ஸ்பெஷல் என நினைக்கிறீர்களா? இவர் வழக்கமான கூட்டு பொரியல் வகையறாக்களை முற்றிலும் தவிர்த்து விட்டு முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த ஆரோக்ய உணவுகளை மட்டுமே தயார் செய்து வழங்கி வருகிறார்.

இது குறித்து நாகலட்சுமி நம்முடன் பகிர்ந்து கொண்டவை: 'செவிலியர் படிப்பு முடித்ததும் திருமணம். பின்னர், ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தேன். பின்னர், குழந்தைகள் பிறந்து வளர வளர கணவரின் வருமானமும், என்னுடைய வருமானம் போதவில்லை. எனவே, உபரியாக சிறு வருமானம் ஏதாவது வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இதனால் வீட்டிற்கு அருகிலேயே ஒரு மளிகைக் கடையை தொடங்கினேன். நர்ஸாக இருந்து கொண்டே மளிகைக் கடையும் பார்த்து வந்தேன். இதனால் கடைக்கும், நான் பணி செய்த மருத்துவமனைக்கும் தினமும் 12 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் நர்ஸ் வேலையைத் தொடர முடியாமல் போக, கடையை மட்டுமே கவனித்து வந்தேன். ஆரம்பத்தில் ஓரளவு வருமானம் கிடைத்து வந்தது.

பின்னர், எங்கள் கடை இருந்த பகுதியில் நிறைய ஹோல்சேல் கடைகள் வந்து வந்தன. இதனால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அங்கேயே மளிகைச் சாமான்கள் வாங்க தொடங்கினர். எங்களுக்கு நஷ்டம் ஏற்பட தொடங்கியது. இதனால் சுற்றி இருந்த எல்லாரும் கடையை முடிவிட்டு மீண்டும் நர்ஸ் வேலைக்கே செல் என்று ஆலோசனை வழங்கினர்.

கொஞ்சம் காலம் சொந்த கடையில் சுதந்திரமாக வேலை செய்து பழகி விட்டதால், மீண்டும் வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் கடையில் இருந்த போது குழந்தைகளை பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் இருந்ததால் அதை விட்டு விட மனம் வரவில்லை.

இதனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்த போது, எனக்கு சமையல் நன்றாக வரும். அதனால் சின்னதாக மெஸ் வைக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, வீட்டில் பெட் ரூம் இருந்த பகுதியை உடைத்து தெரு பக்கம் வாசல் வைத்து பெட்ரூமையே மெஸ்ஸாக மாற்றினேன். பின்னர், எனது மெஸ்ஸில் வழக்கமான சாம்பார், கூட்டு, பொரியல் வகைகளை வைக்காமல், மூலிகை சாதங்களான நெல்லிக்காய் சாதம், கொத்துமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், சீரக சாதம், தனியா சாதம், கொள்ளு சாதம், எள்ளு சாதம், இஞ்சி சாதம், பூண்டு சாதம் என என் அம்மா சொல்லிக் கொடுத்த மூலிகை சாதங்களை மட்டுமே செய்து கொடுத்தேன்.

நானே எதிர்பாராத அளவு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக மெஸ் நடத்தி வருகிறேன். சமீப காலமாக மக்கள் ஆரோக்ய உணவு வகைகளை தேடிச் செல்ல தொடங்கியதால் தற்போது முடக்கத்தான் கீரை சாதம், கீழாநெல்லி சாதம், பசலைக்கீரை சாதம், அரைக்கீரை சாதம், சிறு கீரை சாதம், புளிச்சக் கீரை சாதம், மணத்தக்காளி சாதம், சுண்டைக்காய் சாதம், பாகற்காய் சாதம் என வழங்கி வருகிறேன்.

ஆரம்பத்தில் கீரை சாதமா? நல்லா இருக்குமா? என்று கேட்டவர்கள் அதன் சுவையை அறிந்தவுடன் தொடர்ந்து வர ஆரம்பித்தார்கள். தற்போது கீரை சாதத்திற்காக தேடி வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும், 12 ஆண்டுகளாக எங்கள் மெஸ்ஸுக்கு தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். இதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்’ என்றார் நாகலட்சுமி.
 

Tags : green keerai healthy food

More from the section

உங்கள் குரல் இனிமையாக வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்!
வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
தயிரில் இத்தனை இத்தனை நன்மைகளா?
சூப்பர் டேஸ்டியாக சுண்டல் தயாரிக்க ருசிகர டிப்ஸ்!