திங்கள்கிழமை 25 மார்ச் 2019

மீடூ குறித்து மனநல மருத்துவர் ஷாலினி என்ன சொல்கிறார்?

By உமா| Published: 12th October 2018 12:50 PM

 

மீடு ஹேஷ்டேக் உலகளாவிய அளவில் கடந்த ஆண்டு பரபரப்பாகி தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதுதான் தொடக்கம். இனிமேல் தான் இருக்கிறது அசலான போராட்டம் எனும் நிலையில், அண்மையில் சின்மயி வைரமுத்து மீது எழுப்பிய குற்றச்சாட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து வைரமுத்து மறுப்பு தெரிவித்தாலும், அது எடுபடவில்லை என்பதே உண்மை.

கடந்த ஆண்டு ஹாலிவுட்டின் உயரிய விருதான் ஆஸ்கர் விருதை பெறுகையில் பழக்பெரும் நடிகை மெரீல் ஸ்ட்ரீப் மீடூ இயக்கத்துக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகைகள், மீடியாவில் பணிபுரியும் பெண்கள், என அனைத்துத் தரப்பிலிருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கப்படுத்தத் தொடங்கினர். சமூக வலைத்தளங்களில் மீடூ (Metoo#) என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அதில் அனேகம் பெண்களை மனம் திறந்து தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளை பகிரங்கப்படுத்த தைரியம் அளித்தனர். இப்படித் தொடங்கிய இந்த இயக்கம், வைரலாகி, ஆசிய நாடுகள் முழுவதும் பரவி, இந்தியாவிற்கு இந்த ஆண்டு அதுவும் மிகச் சமீபத்தில் தான் வந்துள்ளது. இது குறித்து மனநல மருத்துவர் ஷாலினி அளித்த பேட்டியில் கூறியது,

மீடூ - உலகம் தழுவிய சுனாமி அது. இந்தியாவிற்கு தாமதமாகத்தான் வந்துள்ளது. ஒரு மாதம் முன்னால் பாலிவுட்டிற்கு வந்து, தற்போதுதான் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறது. இதனால் பல ஆண்கள் கலவரத்தில் உள்ளனர். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்கொண்டால் இந்த சமுதாயத்தை எப்படி ஃபேஸ் பண்ணுவது என்று தப்பு செய்த ஆண்கள் பீதியில் உள்ளனர்.

உலக நாடுகள் முழுக்க பெண்கள் இப்படி துணிச்சலாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டதால் கலவரமுற்ற சில ஆண்கள் தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்களை தாக்கவும் எதிர்வினை புரியவும் செய்கிறார்கள். ஏன் 20 வருஷத்துக்கு முன்னால் நடந்ததை இப்போது சொல்கிறீர்கள் என்பதுதான் அவர்களின் முதன்மைக் கேள்வி. அதற்குக் காரணம் அப்போது அதை வெளிப்படுத்த தைரியமோ சூழலோ இல்லை, வாய்ப்புக்களும் இல்லை. இப்போது மீடூ என்ற ஒரு மிகப் பெரிய ஆதரவு அனைத்து பெண்களுக்கும் உள்ளது. ஒட்டுமொத்த பெண்கள் களத்தில் இறங்கவே, ஆண்கள் இதனை எதிர்ப்பார்க்கவில்லை.

சமூகரீதியாக உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களை சீண்ட நினைத்தால் இனி அது நடக்காது. இந்த இயக்கத்தின் மூலம் அத்தகைய ஆண்களின் எண்ணங்களை தரைமட்டம் ஆக்கிவிட்டனர் பெண்கள்.

வைரமுத்துவைப் பொருத்தவரையில், ஆண்டாள் சர்ச்சை என்பது அவரது கருத்துரிமை சார்ந்த ஒன்று என்பதால் அவரை ஆதரித்து சில முன் வந்தனர். ஆனால் ஒரு பெண் இந்த ஆதாரத்துடன் இதனைச் சொல்கிறேன் என்று வெளிப்படையாக கூறும் போது அறிவுள்ள ஆண்கள் யாரும் அவருக்கு ஆதரவு தர முன்வர மாட்டார்கள். காரணம் அவர்களும் அப்படி ஆதரவு தெரிவித்தால் குற்றம் சாட்டப்படலாம். அதனால் தான் பெரும்பாலானவர்கள் மெளனமாக உள்ளனர். இதற்கு சப்போர்ட் செய்தால் அது அசிங்கம், சமூக இழுக்கு. 

பாலிவுட்டில் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தைப் பற்றி ஒரு பெண் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறினார் அவர். தன் தவறுக்கு மன்னிப்பும் கேட்டு, இனி பெண்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்கிறேன் என்று அறிவித்தார். அதுதான் வீரம், மனிதாபிமானம். ஆனால் வைரமுத்து இதனை மறுப்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பு எடுக்க மறுக்கிறார்.

சமூக ரீதியாக உயர்ந்த நிலையில் இருக்கும் ஆண்கள் இனிமேல் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதையே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன் வைக்கின்றன. இனி ஆண்கள் தங்கள் உயர்ந்த அந்தஸ்தை வைத்து பெண்களை வேட்டையாட முடியாது. இனி எந்த பெண்ணும் ஹெல்ப்லெஸ் விக்டிம் கிடையாது. இது வரலாற்றுரீதியாக பெரிய மாற்றம். இது சோஷியல் மீடியா வந்த பிறகு நிகழ்ந்த நல்ல விஷயம். கிராமத்தில் எப்படி பெண்களின் கையைப் பிடித்து இழுத்தால், அதை அவள் வெளியே சொல்லும்போது ஒட்டுமொத்த கிராமமே அவனை சாத்தி எடுப்பதைப் போல, சோஷியல் மீடியாவால் உலகமே ஒரு கிராமமாக மாறி, பெண்களுக்கு நிகழும் வன்முறையை எதிர்த்து கேள்வி கேட்க முடிகிறது. அவ்வகையில் பெண்கள் தங்களின் பிரச்னையை வெளிப்படையாக கூற முடிகிறது. இது மாற்றத்துக்கான காலகட்டம், வரவேற்கத்தக்கதே’ என்றார் ஷாலினி.

Tags : metoo chinmayi vairamuthu dr.shalini ஷாலினி மீடூ வைரமுத்து சின்மயி

More from the section

தோல்வி பற்றிய பயம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மனநல மருத்துவர் கூறும் அறிவுரை!
முழுமையான வாழ்க்கை உடல் சார்ந்தது மட்டுமே என்று எண்ணாதீர்கள்!
இளம் தம்பதிகள் நிறைய பேரிடம் இந்த பிரச்னை உள்ளது
பெற்றோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல்
மனித குலத்தின் வரலாறு தெரியாமலேயே நான் இறக்கப் போகிறேனே!