21 ஏப்ரல் 2019

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலுக்கு எதிராக உத்தரவு  

DIN | Published: 04th December 2018 06:33 PM

 

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டுவருமான வரிக் கணக்குகளை மறுமதீப்பீடு செய்யலாம் என  வருமான வரித்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. .

காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ‘அசோசியேடட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தின் சொத்துகளை ‘யங் இந்தியா’ என்ற நிறுவனத்தின் மூலம் பெற்றதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சம் கொடுத்து முறை கேடாகக் கையகப்படுத்தியதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார்

இந்தக் குற்றச்சாட்டை சோனியா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனை வரும் மறுத்துள்ள நிலையில், சோனியா, ராகுல் உட்பட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரிக் கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டுமென்று அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆஸ்கார் பெர்னான்டஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஆஸ்கார் பெர்ணான்டஸின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்  வருமான வரிக் கணக்குகளை ஆய்வுசெய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. 
இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சோனியா காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதி ஏ.கே. சிக்கிரி தலைமையில் நீதிபதிகள் அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் 2011-12-ம் ஆண்டு வருமானவரிக் கணக்குகளை மீண்டும் வருமானவரித்துறை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், எந்தவிதமான உத்தரவும் இப்போது பிறப்பிக்க இயலாது. வருமானவரித்துறையும் எந்தவிதமான உத்தரவும் பிறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. 

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 2019, ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Tags : congress sonia rahul national herald young india ED inspection delhi HC permission

More from the section

சித்தராமையா செல்லவிருந்த காரில் பொம்மை!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்
காஷ்மீரில்  துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக் கொலை
கொள்கை சமரசத்தில் ஆம் ஆத்மி கட்சி
நட்சத்திரத் தொகுதி!