வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

புயல் பாதிப்பிற்கு புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்பதற்காக நிவாரண உதவிகளை திருப்பி அனுப்பக் கூடாது

DIN | Published: 05th December 2018 12:59 PM

 

மதுரை: கஜா புயல் பாதிப்பிற்கு புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்பதற்காக நிவாரண உதவிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அரசு நிவாரண உதவிகளை மேற்கொன்டு வருகிறது. பல்வேறு தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்பதற்காக நிவாரண உதவிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. 

புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படுவதில்லை என்று கூறி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில் கூறியுள்ளதாவது:

புதுக்கோட்டைப் பகுதியைப் பொறுத்த வரை கஜா புயல் பாதிப்புக்குளான பகுதிகளில் நிவாரண உதவிகள்  சரியாக வழங்கப்படுவதில்லை. புயலால் மரங்கள் அல்லது கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்று அதிகாரிகளிடம் தெரிவித்தால் அதற்கு உரிய புகைப்பட ஆதாரங்கள் கோரப்படுகிறது. அவ்வாறு புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்றால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் திருப்பி அனுப்பப்படுகிறது. அத்துடன் மின் விநியோகம் மற்றும் குடிநீர் வசதிகளும் சரி செய்யப்படவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனுவானது புதனன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டன.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:

புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தகுதி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யவும், ஒரே நபர்களுக்கு மீண்டும் மீண்டும் நிவாரண உதவிகள் கிடப்பதை உறுதி செய்யவுமே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கபப்டுகின்றன. அத்துடன் புயல் பாதித்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் 100% சரி செய்யப்பட்டு விட்டது. களத்தில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். எனவே இன்னுமொரு வாரத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக்கி விடும். 

இவ்வாறு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைக்கேட்ட பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

புயல் பாதிப்புக்கு உள்ள பகுதிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் புதுக்கோட்டை ப்குதியினைப் பொறுத்த வரை கஜா புயல் பாதிப்பிற்கு புகைப்பட ஆதாரங்கள் இல்லை என்பதற்காக நிவாரண உதவிகளை திருப்பி அனுப்பக் கூடாது. ஆய்வுக்கு பின் வழங்க வேண்டும். 

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  

Tags : tamilnadu cyclone kaja relief materials pudukkottai PIL refusal photo proof madurai HC order

More from the section

வாராணசியில் மோடி மீண்டும் போட்டி: 184 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு பின்னடைவு
அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, கந்தூரி தேர்தலில் போட்டியில்லை
அரக்கோணத்தில் சிக்னல் பணிகள்: ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாறுதல்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு