செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது: கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 

UNI | Published: 06th March 2018 12:58 PM

 

புதுதில்லி: பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டார். இதற்காக அவருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா ரூ.35 கோடியை கைமாறாக அளித்தது என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை புதிய ஆதாரமாகக் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியிடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் கூட்டாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இருவரிடமும் சுமார் சிபிஐ அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரித்தனர். விசாரணை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தி ங்களன்று புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில் அமலாக்கத்துறை அதற்கு உரிய அதிகாரங்களை மீறி தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிக்கிறது என்றும், எனவே அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவானது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தொடர்பான பிற வழக்குகளுடன்  செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.

அதன்படி இந்த வழக்கானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் எந்த வகையிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம்; இதற்கு முன்பும் அவ்வாறே செயல்பட்டுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையினை ஏற்று இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கை வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அத்துடன் கார்த்தி சிதம்பரம் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து,  விளக்கம் கேட்டு, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Tags : INX media case ED CBI karthichidambaram arrest CBi custody court SC pettion relief notice

More from the section

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை வெளியீடு
நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது லண்டன் நீதிமன்றம்
கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த்
உ.பி. யில் காங்கிரஸ் சுதந்திரமாக போட்டியிடலாம்: மாயாவதி, அகிலேஷ் அறிவிப்பு
கோவா ஆளுநருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரினர்