புதன்கிழமை 19 டிசம்பர் 2018

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடாது: சங்கர் சிங் வகேலா வலியுறுத்தல்

DIN | Published: 17th November 2018 02:56 AM


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று குஜராத் முன்னாள் முதல்வரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அவற்றைக் கைவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும். ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் கூட வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கைவிட்டு, மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறியுள்ளன. அதில், பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகள் உள்ளதுதான் இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
காந்தி நகரில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த வகேலா கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் எனது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதற அனுமதிக்க மாட்டேன். கடந்த ஓராண்டில் 9 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன். பாஜகவின் செல்வாக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இறங்குமுகமாகவே உள்ளது. காந்தி நகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான பாஜக மூத்த தலைவர் அத்வானி, மீண்டும் அங்கு போட்டியிட விரும்புகிறார். எனினும், ஆர்எஸ்எஸ் தலைமை கேட்டுக் கொண்டால், அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு என்றார்.
முதலில் பாஜகவில் இருந்த வகேலா, 1996-ஆம் ஆண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 
பின்னர் தனது கட்சியை காங்கிரஸில் இணைத்தார். காங்கிரஸ் சார்பில் குஜராத் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வகேலா, கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்தார். எனினும், அவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

More from the section

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட  மத்திய அரசு அனுமதி தரக் கூடாது: மு.தம்பிதுரை  
குஜராத், முசாஃபர் நகர் கலவரங்களில் தொடர்புடையவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்: கேஜரிவால் வலியுறுத்தல்
18% ஜிஎஸ்டி வரம்பில் 99% பொருள்கள்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
சிபிஐ இடைக்கால இயக்குநருக்கு பதவி உயர்வு
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும்: சுமித்ரா மகாஜன்