வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பாகிஸ்தான் பயணம்: ஒரு புகைப்படத்தினால் மீண்டும்  சர்ச்சை வளையத்தில் சிக்கிய சித்து 

DIN | Published: 29th November 2018 01:35 PM

 

புது தில்லி: கர்தார்பூர் வழித்தட அடிக்கல் நாட்டு விழாவுக்காக பாகிஸ்தானுக்கு பயணம் செய்த பிரபல கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து, அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தினால் மீண்டும்  சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

பாகிஸ்தானின் கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கமாகும். 

எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. 

இந்த வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நிராகரித்துவிட்டார். இந்த விழாவானது புதனன்று கர்தார்பூர் நகரில் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியா சார்பாக மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா  தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.  

சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சித்துள்ள பாஜக,'இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Tags : india pakistan kartarpur gateway ceremony imran khan navjot singh sidhu khalistan gopal singh chawla photo controversy

More from the section

வாராணசியில் மோடி மீண்டும் போட்டி: 184 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு பின்னடைவு
அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, கந்தூரி தேர்தலில் போட்டியில்லை
அரக்கோணத்தில் சிக்னல் பணிகள்: ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாறுதல்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு