வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது: மெஹுல் சோக்ஸி 

ANI | Published: 11th September 2018 03:50 PM

 

தன் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற பொய் என தப்பியோடிய கடன் மோசடி குற்றவாளி மெஹுல் சோக்ஸி செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த விளக்கத்தில் கூறியதாவது:

என் மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற பொய். இதில் எவ்வித ஆதாரமின்றி எனது சொத்துக்களை சட்டவிரோதமாக இணைத்து வருகின்றனர். பிப்ரவரி 16-ஆம் தேதி என்னால் இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி எனது கடவுச்சீட்டை முடக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பிப்ரவரி 20-ஆம் தேதி அதை விடுவிக்குமாறு மும்பை கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் அதுகுறித்து அவர்கள் எனக்கு எவ்வித விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை. என்னால் இந்தியாவுக்கு என்ன அச்சுறுத்தல் என்பதையும் கூறவில்லை. 

முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கு மேல் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிய மெஹுல் சோக்ஸிக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்க வேண்டும் என்று இன்டர்போல் அமைப்பில் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டின் குடிமகனாக சோக்ஸி இருப்பதால், அவர் மீதான "ரெட் கார்னர் நோட்டீஸ்' பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், அவரை நாடு கடத்துவதற்கு அந்நாடு தயக்கம் காட்டி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடன் மோசடியில் தொடர்புடைய முக்கிய நபரான தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ஏற்கெனவே "ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரிட்டனுக்கு, இந்தியாவின் சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Mehul Choksi மெஹுல் சோக்ஸி

More from the section

கும்ப மேளா கங்கை பூஜையில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணை தாக்குதல்: சோதனை வெற்றி
மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகளே முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி
கர்நாடகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. தோல்வி
மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை: பி.எஸ்.எடியூரப்பா