24 பிப்ரவரி 2019

நீதிமன்றத்தின் சிறு பிழையால் 11 நீதிபதிகளை சந்தித்து 41 ஆண்டுகள் நடந்த வழக்கு!

DIN | Published: 11th September 2018 12:38 PM


வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில், கட்டண ரசீது ஒன்றை பதிவு செய்ய நீதிமன்றம் தவறியதால் ஏற்பட்ட வழக்கு 11 நீதிபதிகளைச் சந்தித்து 41 ஆண்டுகள் நடந்து வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1977ம் ஆண்டு சொத்துப் பிரச்னை தொடர்பான வழக்கில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கங்கா தேவிக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பின் நகலைப் பெற நீதிமன்ற வழக்குக் கட்டணமாக ரூ.312ஐ செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஏற்கனவே தாம் ரூ.312 செலுத்திய நிலையில், அதனை நீதிமன்றம் பதிவு செய்து கொள்ளாததால், தற்போது மீண்டும் பணம் செலுத்த முடியாது என்று கங்கா தேவி கூறியிருந்தார். இது தொடர்பாக நீதிமன்றம் கங்கா தேவிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. 1977ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு சுமார் 11 நீதிபதிகளைக் கடந்து 41 ஆண்டுகளுக்குப் பிறகு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி முடிவுக்கு வந்தது.

அதில், நீதிமன்றப் பிழையால் தவறு நேர்ந்திருப்பதாகவும், கங்கா தேவி பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பைக் கொண்டாட காங்கா தேவி உயிரோடு இல்லை. அவர் கடந்த 2005ம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். இதனால், வழக்கின் தீர்ப்பைக் கொண்டாட நீதிமன்றத்தில் யாருமே இல்லை. தீர்ப்பின் நகல் அவரது குடும்பத்தாருக்கு விரைவு தபாலில் அனுப்பப்பட்டது.

இப்போது வேண்டுமானால் 312 ரூபாய் பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், சுமார் 41 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.312 என்பது மிகப்பெரிய தொகைதான். ஏற்கனவே தான் செலுத்திய தொகையை திரும்ப செலுத்தச் சொன்னதால், மறுத்ததால், கங்கா தேவி மீது நீதிமன்றக் கட்டணத்தைக் கட்டாததாக வழக்குத் தொடரப்பட்டு 11 நீதிபதிகள் அதனை விசாரித்தும் உள்ளனர். 

இந்த நிலையில், நீதிபதி ஜெய்ஸ்வால், விசாரணையை தூசு தட்டி, கங்கா தேவி ஏப்ரல் 9ம் தேதி 1977ம் ஆண்டு பணத்தை செலுத்தியிருப்பதைக் கண்டுபிடித்து, கங்கா தேவியின் குடும்பத்துக்கு மன நிம்மதியை அளித்துள்ளார். நீதிமன்றக் கோப்பில் செய்யப்பட்ட ஒரு சிறு பிழையே இந்த வழக்குக்குக் காரணம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

Tags : #uttarpradesh women won case after death small mistake of court failure of the court

More from the section

தில்லி புறநகரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: மூவர் கைது
மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பிஎஸ்எஃப் வீரர்கள்
சுய விளம்பரத்துக்கு அரசு பணம்: கேஜரிவால் மீது குற்றச்சாட்டு
ஆர்டிஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள்:  ராகுல் காந்தி