புதன்கிழமை 16 ஜனவரி 2019

சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருப்பது சட்டவிரோதம்

DIN | Published: 12th September 2018 01:24 AM


பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி, தமது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருப்பது சட்டவிரோதம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆன்டிகுவா நாட்டில் தற்போது தலைமறைவாக இருக்கும் அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று சில கேள்விகளை அனுப்பி பதில்களை கேட்டிருந்தது. அதற்கு மெஹூல் சோக்ஸி விடியோ மூலம் அனுப்பியுள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
என் மீதான அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அடிப்படை முகாந்திரமில்லாதவை ஆகும். எந்த காரணமும் இல்லாமல் எனது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இது சட்டவிரோதம் ஆகும்.
கடவுச்சீட்டு துறை அதிகாரிகள் எனது கடவுச்சீட்டை முடக்கியுள்ளனர். இதனால் அதை என்னால் பயன்படுத்த முடியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதியன்று, எனக்கு கடவுச்சீட்டு துறை மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அதில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து, எனது கடவுச்சீட்டை முடக்கியிருப்பதாக கடவுச்சீட்டு துறை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி, மும்பை கடவுச்சீட்டு துறை அதிகாரிக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன். அதில் எனது கடவுச்சீட்டு மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என கோரியிருந்தேன். அதற்கு எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை.
எனது கடவுச்சீட்டு ஏன் முடக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை கடவுச்சீட்டு துறை தெரிவிக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு நான் எப்படி அச்சுறுத்தல் ஆவேன்? கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஒப்படைப்பது என்பதற்கான கேள்வியே இங்கு எழவில்லை என்று அந்த விடியோ பதிவில் மெஹூல் சோக்ஸி குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்தது தொடர்பான விசாரணை தொடங்கப்படும் முன்பு வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். முதலில் அவர்கள், பிரிட்டன் தலைநகர் லண்டனில் தங்கி இருந்தனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி, அன்டிகுவா நாட்டுக்கு சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து, அன்டிகுவா நாட்டில் இருந்து அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
 

More from the section

சென்னையிலேயே கடுங்குளிர் என்றால் இமாச்சலப்பிரதேசம் எப்படி இருக்கும் பாருங்கள்!
நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா பயணம்
மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி