வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN | Published: 12th September 2018 12:48 AM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதற்குத் தகுந்த பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் நோக்கி அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஃபுர்கான் ரஷீத் மற்றும் லியாகத் அகமது என்ற இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்களாவர். முக்கியமாக, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஆள் கடத்தல் தொடர்பாகவும், சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகவும் லியாகத் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மேலும், கடந்த சனிக்கிழமை ஹுரியத் குழு ஆதரவாளரான ஹகிம்-உர்-ரஹ்மான் என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும், லியாகத்துக்குத் தொடர்பு இருந்தது. 
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமை மதியம் ஒப்படைக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
திருமண வீட்டில் சோகம்: இதனிடையே, செவ்வாய்க்கிழமை லியாகத்தின் சகோதரியின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், லியாகத்தின் மரணச் செய்தி குடும்பத்தினரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில், குடும்பத்திலிருந்து பிரிந்து, லியாகத் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். திருமணத்துக்காக வீட்டுக்கு வந்த உறவினர்கள், தற்போது லியாகத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் நிலைமை ஏற்பட்டு விட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது' என்றனர்.

More from the section

காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
திருப்பதி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்: குடியரசு துணைத் தலைவர் அடிக்கல்
பிப்.26-இல் அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை