சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

ஜம்மு காஷ்மீர் டிஜிபி நியமனம்: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

DIN | Published: 12th September 2018 01:18 AM

ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநரை (டிஜிபி) அந்த மாநில அரசு நியமிக்கும் விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசிடம் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது. 
முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதாடுகையில், உச்ச நீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பின்படி, காவல்துறை இயக்குநராக நியமிக்கப்படும் நபர் 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் தொடர வேண்டும்.
இந்நிலையில், ஓய்வுபெறும் கட்டத்தில் இருக்கும் அதிகாரியை, பொறுப்பு இயக்குநராக இடைக்காலத்துக்கு நியமித்து அந்த வாய்ப்பை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாகவே பொறுப்பு இயக்குநர் நியமன நடவடிக்கைக்கு தடை கொண்டு வரப்பட்டது' என்றார்.
அப்போது, ஜம்மு காஷ்மீர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷோயப் ஆலம் வாதிடுகையில், காவல்துறை இயக்குநர் பதவிக்கான நிரந்தர நியமனத்தை மத்திய பணியாளர் தேர்வாணையத்துடன் இணைந்து மேற்கொள்ளும் வரையிலான இடைக்காலத்துக்காகவே பொறுப்பு இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை சூழல்களைக் கையாளுவதற்கு, தலைமை இல்லாத காவல்துறையால் இயலாது. மேலும், வைத் பணிமாற்றம் செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் நிரந்தர காவல்துறை இயக்குநரை நியமனம் செய்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்துடனான கலந்தாலோசனை தொடங்கப்பட்டது' என்றார்.
அப்போது, இந்த வழக்கில் மனுதாரரான பிரகாஷ் சிங் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், மாநில பாதுகாப்பு ஆணையருடன் கலந்தாலோசிக்காமல், ஒரு மாநிலத்தின் காவல்துறை இயக்குநரை மாற்ற இயலாது. மேலும், தற்போது ஜம்மு காஷ்மீர் அரசால் பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, காவலர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டவராவார்' என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறைத் துறை தலைவராக இருந்த தில்பக் சிங்கை, மாநில காவல்துறை இயக்குநராக (பொறுப்பு) நியமித்து அந்த மாநில அரசு கடந்த 6-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. முன்னதாக அந்தப் பொறுப்பில் இருந்த எஸ்.பி. வைத், போக்குவரத்து ஆணையராக மாற்றப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, காவல்துறை இயக்குநர் நியமனத்தை மேற்கொள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரின் பெயர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்புவது அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயம் என்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் கொண்டுவரக் கோரி நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு முறையிட்டது.
 

More from the section

மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள்!: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
சர்வதேச தலைவர்கள் கண்டனம்: இந்தியாவுக்கு துணை நிற்போம் என உறுதி
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மல்லையா மனு
பிணைத்தொகைக்கு வட்டி கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி
ராணுவம், மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் துணை நிற்கும்: ராகுல் காந்தி