புதன்கிழமை 16 ஜனவரி 2019

தண்டனையை குறைக்க வேண்டும்: சாமியார் ஆசாராம் கருணை மனு

DIN | Published: 12th September 2018 01:19 AM


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள சாமியார் ஆசாராம், தனக்கான தண்டனையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில ஆளுநருக்கு அவர் கருணை மனு அனுப்பியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாரம் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. 
அந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஆசாராம் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. 
இந்நிலையில், தனக்கு எதிரான தண்டனையை குறைக்கக் கோரி, ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கிற்கு ஆசாராம் கருணை மனு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த மனு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில உள்துறை அமைச்சகத்தை ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். உள்துறை அமைச்சகம், ஆசாராமின் கோரிக்கை மனு குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு, ஜோத்பூர் மத்திய சிறை நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜோத்பூர் சிறை கண்காணிப்பாளர் கைலாஷ் திரிவேதி கூறுகையில், ஆசாராமின் கருணை மனு குறித்து அறிக்கை தயார் செய்வதற்கு முன்பாக, அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் ஆலோசனைகளை கேட்டுள்ளோம் என்றார்.
ஜோத்பூர் சிறை நிர்வாகம் தயாரிக்கும் அறிக்கையானது, சிறைத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசாராம் தனது கருணை மனுவில், தன்னுடைய வயதுக்கு ஆயுள் தண்டனை என்பது மிக கொடுமையானது என்றும், எனவே, அதனை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

More from the section

டிஜிபிக்கள் நியமனம்: மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
சென்னையிலேயே கடுங்குளிர் என்றால் இமாச்சலப்பிரதேசம் எப்படி இருக்கும் பாருங்கள்!
நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா பயணம்