வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஓவைஸி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

DIN | Published: 12th September 2018 01:14 AM

வரவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைஸி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ்- இ- இட்டேஹாட்-உல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியல் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. ஏற்கனவே, எம்எல்ஏக்களாக உள்ள இக்கட்சியை சேர்ந்த 7 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி அறிவித்துள்ளது. 
தெலங்கானா சட்டப்பேரவை கடந்த வாரம் கலைக்கப்பட்ட நிலையில் தற்போது காபாந்து முதல்வராக கே.கே.சந்திரசேகர ராவ் நீடித்து வருகிறார். சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) மற்றும் அதன் கூட்டணி கட்சியான எம்ஐஎம் கட்சியும் சேர்த்து மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் 105 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டு விட்டது. 
இந்நிலையில் டிஆர்எஸ் கட்சியின் மற்றொரு கூட்டணி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அக்கட்சியின் தலைமையால் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. 
அதன்படி ஓவைஸியின் இளைய சகோதரர் அக்பருதீன் ஓவைஸி சந்திரயன்குட்டா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
யகுத்புரா தொகுதியில் சையது அஹமது பாஷா குத்ரி, சார்மினார் தொகுதியில் மும்தாஜ் அஹமதுகான், பகதூர்புரா தொகுதியில் முகமது மௌசாம் கான், மலாக்பேட் தொகுதியில் அஹமது பின் அப்துல்லாஹ் பலாலா, நம்பள்ளி தொகுதியில் ஜாபர் ஹூசைன் மீரஜ், கர்வான் தொகுதியில் கெளசர் மொயினுதீன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அறிவிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மும்தாஜ் அஹமதுகான் மற்றும் அஹமது பாஷா குத்ரி ஆகிய இருவருக்கு மட்டும் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. 
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More from the section

காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
திருப்பதி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்: குடியரசு துணைத் தலைவர் அடிக்கல்
பிப்.26-இல் அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை