திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

பெட்ரோல், டீசல் விலைகள் ராக்கெட்டில் பறக்க யார் காரணம்?

DIN | Published: 12th September 2018 11:48 AM

 

புது தில்லி: கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் அனைவரும் அவரவர் ராசிக்கு என்ன பலன் என்று தினமும் பார்க்கிறார்களோ இல்லையோ பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தைப் பற்றி விசாரிக்க தவறுவதில்லை.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைத்து கொள்ள பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த போது, இப்படி தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று நிச்சயம் மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் உயர்ந்தால், நிச்சயம் ஒரு நாள் குறையும் என்றுதான் நினைத்திருப்பார்கள். (ஆனால் நடந்தது வேறு)

சரி.. பெட்ரோல், டீசல் விலை ஏன் இப்படி கன்னாபின்னாவென்று உயருகிறது. காரணம் யார்? மத்திய அரசு சொல்வது போல முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளா? காங்கிரஸ் கட்சி சொல்வது போல மத்திய அரசா? இல்லை கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமா என்று கேட்பவர்களுக்கு இதோ சில காரணங்கள்.

அதாவது பெட்ரோல், டீசல் விலைகளை மொத்தமாக 5 காரணிகள் தீர்மானிக்கின்றன. சர்வதேச அளவில் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை வாங்கும் விலை(1). கச்சா எண்ணெய் இறக்குமதி விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு இணைந்து இந்த விலையை தீர்மானிக்கிறது.

இரண்டாவது, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோல் பங்குகளுக்குக் கொண்டு வர ஆகும் போக்குவரத்து செலவு. எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இதனுடன் ஒரு குறிப்பிட்டத்  தொகையை லாபமாக(2) வைத்து பெட்ரோல், டீசல் டீலர்களுக்கு விற்பனை செய்கிறது.

இதனுடன் மத்திய அரசு விதிக்கும் சுங்க வரியும் (3)சேர்ந்து கொள்கிறது. டீலர்களின் கமிஷன் தொகை(4), மாநில அரசு பெட்ரோலுக்கு விதிக்கும் வாட் வரி(5) என 5 காரணிகள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இதில் வாட் வரி மட்டும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் நிலவுகிறது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மேற்கண்ட 5 விஷயங்களில் எது உயர்த்தப்பட்டாலும் உயரும். ஆனால், எது குறைந்தாலும் அது பெட்ரோல், டீசல் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் மற்ற காரணிகள் பார்த்துக் கொள்ளும். இதனால்தான் பெட்ரோல், டீசல் விலைகள் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப உயருகிறதே தவிர, குறையும் போது விலை குறையாமல் இருப்பதற்குக் காரணம்.

அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சியா? மத்திய அரசா யார் காரணம் என்றால் இரண்டு விதமாக பதில் சொல்லலாம். வெறும் சதவீதத்தில் வைத்து மட்டும் பார்த்தால் நேற்று பாஜக சொன்னது போலத்தான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அதாவது 2004 - 2014ம் ஆண்டு காலத்தில் விலை உயர்வு என்பது 11.2 சதவீதமாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சியில்  அது வெறும் 3.25 சதவீதமாகவே இருக்கிறது.

புள்ளி விவரமும், மக்கள் சந்திக்கும் நிதர்சனமும் பொருந்தவில்லை என்று நினைத்தால் அதுவும் உண்மைதான்.

அதாவது, பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியக் காரணியாக இருப்பது கச்சா எண்ணெய் விலைதான். 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் காச்சா எண்ணெய் ஒரு பேரல் 36 டாலராக இருந்தது. ஆனால் 2011ல் அது 111 டாலர்களாக உயர்ந்தது. அப்போதும் பெட்ரோல் விலை அதிகபட்சமாக 2013ம் ஆண்டு செப்டம்பரில்தான் ரூ.76.06 ஆக உயர்ந்தது. இந்த விலை உயர்வு முழுக்க முழுக்க கச்சா எண்ணெய் விலை உயர்வால் மட்டுமே ஏற்பட்டது.

ஆனால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் ரூ.80க்கு விற்கப்படும் நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 68 டாலர்கள்தான். ஆனால், பெட்ரோல், டீசல் விலைக்கும், கச்சா எண்ணெய்க்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி.. அதற்குக் காரணம் 2014ம் ஆண்டு நவம்பர் மற்றும் ஜனவரி 2016க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் மத்திய அரசு சுங்க வரியை 9 முறை உயர்த்தியிருப்பதுதான்.

இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் எதிரொலி பெட்ரோல், டீசல் விலைகள் மீது விழ முடியாமல் மத்திய அரசு தடுத்துவிட்டது என்பதே தற்போதைய குற்றச்சாட்டு.
 

More from the section

பிரிவினைவாத தலைவர்கள் பாதுகாப்பு வாபஸ்: ஜம்மு-காஷ்மீர் அரசு அதிரடி
ரிசர்வ் வங்கி குழுவுடன் ஜேட்லி இன்று ஆலோசனை
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் புல்வாமா போன்ற சம்பவங்கள் தொடரும்: ஃபரூக் அப்துல்லா
பயங்கரவாதத் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படும்
மியூனிக் மாநாட்டில் புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முறையீடு