புதன்கிழமை 16 ஜனவரி 2019

போலி பாஸ்போர்ட் மூலம் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

DIN | Published: 12th September 2018 01:12 AM


போலி பாஸ்போர்டை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு 3 நபர்களை கடத்தி சென்றதாக தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜெயப்பிரகாஷ் ரெட்டி என்கிற ஜெகா ரெட்டியை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். 
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ரெட்டி மீது ஆள் மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல், மனித கடத்தல் மற்றும் போலி பாஸ்போர்ட் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹைதராபாத் மார்க்கெட் போலீஸார் கைது செய்துள்ளனர். 
இதுகுறித்து செகந்திராபாத் காவல்துறை துணை ஆணையர் (வடக்கு மண்டலம்) பி.சுமதி கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு தான் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை தவறாக பயன்படுத்தியும், போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகிய 3 பேரின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு 3 நபர்களின் புகைப்படத்தை ஒட்டி, போலி பாஸ்போர்ட் தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து அமெரிக்காவிற்கு 3 நபர்களை கடத்தி செல்ல காரணமாக இருந்ததாக கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். 
பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட தரகர் ஒருவரிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை ஜெயப்பிரகாஷ் ரெட்டி பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஹைதராபாத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு அடையாளம் தெரியாத 3 நபர்களை கடத்தி செல்ல உறுதுணையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 
இதைத்தொடர்ந்து, இந்திய தண்டனையியல் சட்டப்பிரிவு பாஸ்போர்ட் சட்டம் மற்றும் குடியேற்றச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் என்று அவர் தெரிவித்தார். 
மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலும், அமெரிக்கா தூதரகத்திற்கும் தன்னுடைய பதவியை பயன்படுத்தியே இந்த மோசடியில் ஜெயப்பிரகாஷ் ரெட்டி ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

More from the section

சென்னையிலேயே கடுங்குளிர் என்றால் இமாச்சலப்பிரதேசம் எப்படி இருக்கும் பாருங்கள்!
நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்கா பயணம்
மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி