புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்

DIN | Published: 12th September 2018 01:28 AM


ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகும்; எனவே, தேர்தல் வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் அயராது பணியாற்ற வேண்டும்' என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில், நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 
மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக வசுந்தரா ராஜே மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தானுக்கு ஒரு நாள் பயணமாக அமித் ஷா செவ்வாய்க்கிழமை சென்றார். பாஜக வாக்குச்சாவடி குழுவினரின் கூட்டம், பாஜகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் என 4 கூட்டங்களில் அவர் பங்கேற்றார். இக்கூட்டங்களில் அவர் பேசியதாவது:
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்கள், 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும். 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி பாஜகவுக்கு முக்கியமானது. இந்த வெற்றியால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜகவை ஆட்சியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது.
தேர்தலுக்கு பின் யார் முதல்வராக பதவியேற்பார்? யார் அமைச்சர் ஆவார்? என்பதை பற்றியெல்லாம் பாஜக தொண்டர்கள் சிந்திக்கக் கூடாது. பிரசாரத்தின்போது, கட்சி சின்னமான தாமரையும், பாரத மாதாவுமே தொண்டர்களின் நினைவில் இருக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணியை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. இந்த கூட்டணி, உத்தரப் பிரதேசத்தில் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், வேறெந்த மாநிலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகவும், மேற்கு வங்க முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவியேற்றால் நாடு எந்த நிலைக்கு செல்லும்? என்ற கேள்வியை முன்வைத்து மக்களிடத்தில் பாஜக தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
ராஜஸ்தானில் பாஜகவை யாராலும் தோற்கடிக்க முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான மாநில அரசின் சாதனைகளை, கிராமங்கள்தோறும் சென்று எடுத்துரைக்க வேண்டும். 
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதல் நடவடிக்கை, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது ஆகிய மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்றார் அமித் ஷா.

ராகுலின் கனவு கலையும்'
உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் கடந்த 2015-இல் பசுவதையில் ஈடுபட்டதாக முகமது அக்லாக் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து சில எழுத்தாளர்கள் தங்களது உயரிய விருதுகளை திருப்பியளித்த விவகாரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: முதலில் தங்களது தலைவர் யார் என்பதையும், தங்களது கொள்கைகளையும் காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். பிரதமராக வேண்டும் என கனவு காண ராகுலுக்கு உரிமை உள்ளது. ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளில் அவரது கனவு கலையும்.
தேர்தல் காலங்களில் அக்லாக் விவகாரம், விருதுகளை திருப்பியளித்தல் போன்ற பிரச்னைகளை உருவாக்க காங்கிரஸ் முயலும். இத்தகைய பிரச்னைகள் நிலவிய காலகட்டங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட பாஜகதான் வெற்றி பெற்றது. அதேபோல், இப்போதும் பாஜக வெற்றி பெறும் என்றார் அமித் ஷா.
வழிபாடு: முன்னதாக, ஜெய்ப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற மோதிதுங்கரி விநாயகர் கோயிலுக்கு சென்று அமித் ஷா வழிபட்டார். அவருடன் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி, ஜெய்ப்பூர் எம்.பி. ராம்சரண் போரா உள்ளிட்டோரும் சென்றனர்.

More from the section

பசுமைப் பட்டாசு தயாரிக்க முதலில் ஒப்புக் கொண்டு இப்போது சிரமம் என்பதா? உச்ச நீதிமன்றம் கேள்வி
தொடரும்  இழுபறி: தேமுதிகவுடன் இன்று மாலை அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு? 
நிலுவைத் தொகையை அளிக்காத விவகாரம்: அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே மிதமான நிலஅதிர்வு
புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு- இந்திய ராணுவம்