செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

வருமான வரி அதிகாரியை கண்டு ஓடுகிறார் ராகுல்: ஸ்மிருதி இரானி விமர்சனம்

DIN | Published: 12th September 2018 01:19 AM


பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைப்பதற்காக விரைந்து சென்ற ராகுல் காந்தி, வருமான வரித்துறை அதிகாரியை கண்டு பல மைல் தொலைவுக்கு ஓடுகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-12 நிதியாண்டில் தான் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை, அதிகாரிகள் மறுஆய்வு செய்வதற்கு தடை கோரி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியதை விமர்சிக்கும் வகையில் ஸ்மிருதி இரானி இவ்வாறு கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்டு வந்ததும், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானதுமான அசோசியேட் ஜெர்னல்ஸ்' நிறுவனம் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்தபோது, அந்நிறுவனத்தை ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருந்த யங் இந்தியா' இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது.
இதன் மூலமாக அசோசியேட்ஸ் ஜெர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகக் கூறி ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பான விசாரணைக்காக, தனது வருமான வரி கணக்கு விவரங்களை, வருமான வரித்துறையினர் மீளாய்வு செய்வதை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் அண்மையில் நடந்தபோது, மக்களவையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டியணைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை இந்த விவகாரங்களை மையப்படுத்தி விமர்சித்தார். அவர் கூறியதாவது:
பிரதமரை கட்டியணைக்க விரைந்து சென்ற ராகுல் காந்தி, வருமான வரித்துறை அதிகாரியைக் கண்டு ஓடுவது ஏன்? எந்தவொரு இந்தியரும் வருமான வரித்துறை நோட்டீஸை மறுக்க முடியாது. ஆனால், ராகுல் காந்தி வருமான வரித்துறை அதிகாரிகளைக் கண்டு பல மைல் தொலைவுக்கு ஓடுகிறார்.
2011-ஆம் ஆண்டில் யங் இந்தியா நிறுவனத்தை ராகுல் காந்தி நிறுவியபோது, அது லாப-நோக்கமற்ற நிறுவனம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்நிறுவனத்தால் வாங்கப்பட்ட அசோசியேட்ஸ் ஜெர்னல்ஸ் நிறுவனமோ, வர்த்தக ரீதியில் செயல்படுவதாகும்.
தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்ததை வைத்துப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் மிக ஆழமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன என்றார் ஸ்மிருதி இரானி.
வாராக்கடன் அதிகரிப்பு
இரானி மேலும் பேசுகையில், சோனியா காந்தியால் வழிநடத்தப்பட்ட முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, வங்கிக் கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டது. கடந்த 2006-2008 காலத்தில் அரசு சரிவர செயல்படாமல் போனதால் வாராக்கடன் மாபெரும் அளவில் அதிகரித்ததாக அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸின் ஊழலை அவர் சத்தம்போட்டு அறிவித்துள்ளார்'' என்றார்.

More from the section

குல்பூஷணை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகை ரூ.28,000 கோடி: ரிசர்வ் வங்கி முடிவு
இந்தியாவுக்கான தூதரைத் திரும்ப அழைத்து பாகிஸ்தான் ஆலோசனை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ முழுமையாக ஆராய்ந்து விசாரிக்க உத்தரவு
பாலகிருஷ்ண  ரெட்டி மேல்முறையீடு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு