24 பிப்ரவரி 2019

ஹெச்ஐவி நோயாளிகளுக்கு சமஉரிமை; மீறினால் சிறை தண்டனை: சடடம் அமலுக்கு வந்தது

DIN | Published: 12th September 2018 12:49 AM

ஹெச்ஐவி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், கல்வி நிறுவனங்களிலும், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலும் புறக்கணிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்ட சட்டம் அமலுக்கு வந்தது.
இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு அரசிதழில் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி சி.ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு, ஹெச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்துவிட்ட பிறகும், அதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடாதது ஏன்?' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பியதுடன், அதுதொடர்பான விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் சட்டம், அத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளானோர்களுக்கு சம உரிமை வழங்க வழிவகை செய்துள்ளது.
ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனங்களில் வேலை தர மறுக்கவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிக்கவோ கூடாது. ஹெச்ஐவி பாதிப்பின் நிலையை தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.
நீதிமன்றத்தின் உத்தரவு, ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிக்கக் கூடாது.
ஹெச்ஐவி பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் கருத்துகளை பகிரக் கூடாது. மீறினால், 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.
அவர்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதற்கு தீர்வு காண அமைப்பை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தச் சட்டத்தில் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
 

More from the section

தில்லி புறநகரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: மூவர் கைது
மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் பிஎஸ்எஃப் வீரர்கள்
சுய விளம்பரத்துக்கு அரசு பணம்: கேஜரிவால் மீது குற்றச்சாட்டு
ஆர்டிஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள்:  ராகுல் காந்தி