செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

ஹைதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த இருவர் கைது

DIN | Published: 12th September 2018 02:29 AM
மீட்கப்பட்ட தங்கப் பொருள்களுடன் ஹைதராபாத் காவல் துறை ஆணையர் அஞ்சானி குமார்.


தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் பழங்கால பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், 2 பேரை போலீஸார் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொருள்களும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டன.
இதுகுறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
கௌசே பாஷா (23), அவரது உறவினர் முகமது முபீன் (24) ஆகியோர் ஹைதராபாதின் ஹிமயாத்சாகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். சவூதி அரேபியாவுக்கு பணி தேடி சென்ற முகமது முபீன், பாகிஸ்தானியரை தாக்கியதாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டவர். அவருக்கு எதிராக 15 கொள்ளை வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹைதராபாதுக்கு வந்த முபீன், நிஜாம் அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு விலை மதிப்பில்லாத பொக்கிஷங்களை கண்ட அவர், அவற்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார். 
கௌசே பாஷாவுடன் இதுதொடர்பாக முபீன் கலந்தாலோசித்தார். இருவரும் இணைந்து சில பொருள்களை அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர். வைரம், ரூபி கற்கள் பதிக்கப்பட்ட பண்டைய கால பொருள்கள் சர்வதேச அளவில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்து கொள்ளைச் சம்பவத்தில் இறங்கினர்.
கடந்த 2-ஆம் தேதி இரவு அருங்காட்சியகத்துக்கு அவர்கள் இருவரும் சென்றனர். முபீனின் இடுப்பில் கயிறை கட்டி மறுமுனையில் பாஷா அதை பிடித்துக் கொண்டு, மெதுவாக அருங்காட்சியகத்தின் 3-ஆவது கலைக்கூடத்துக்குள் அவரை இறக்கினார்.
உள்ளே சென்று இறங்கியவுடன் அவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தினார். பின்னர், தங்கத்தால் செய்யப்பட்ட டிபன் பாக்ஸ், தங்க ஸ்பூன் உள்ளிட்ட சில பொருள்களை பைக்குள் வைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்தார்.
கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளையும், முகமூடி அணிந்தும் இருவரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தபோது, செல்லிடப்பேசியையும் அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.
அருங்காட்சியகத்தின் வளாகத்துக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இருசக்கர வாகனத்தில் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றது பதிவாகியிருந்தது.
அதை வைத்து அவர்களின் அடையாளத்தை கண்டுபிடித்து தேடி வந்தோம்.
ஹைதராபாதிலிருந்து மும்பை செல்ல முயன்றபோது அவர்களுடைய இருசக்கர வாகனம் பழுதடைந்திருக்கிறது. அங்கிருந்து பேருந்தில் மும்பை சென்று இந்தப் பொருள்களை விற்க முயற்சி செய்திருக்கின்றனர். எனினும், அங்கு அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, ஹைதராபாதுக்கு திரும்பினர். அப்போது, போலீஸாரிடம் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரித்ததன் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில், ஓரிடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீட்டோம் என்று அஞ்சனி குமார் தெரிவித்தார்.
அருங்காட்சியகத்தில் இருக்கும் பண்டைய காலப் பொருள்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று 7-ஆவது நிஜாமின் பேரன் நவாப் நஜஃப் அலி கான் ஹைதராபாத் காவல் ஆணையருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார்.


 

More from the section

பிரதமர் மோடி எப்போதும் டீ விற்றதே கிடையாது: பற்ற வைத்த பிரவீன் தொகாடியா 
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் உள்ளது: தேர்தல் ஆணையம்
இந்தியாவின் திறமையை வெளிநாடுகளில் பரப்பும் தூதுவர்கள்: யாரைச் சொல்கிறார் மோடி? 
2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி: தொழில்நுட்ப நிபுணர் மீது போலீசில் புகார்  
என்னாது.. மீண்டும் அவரைக் காணவில்லையா?? அதிருப்தியில் கட்சியினர்!