புதன்கிழமை 23 ஜனவரி 2019

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆயத்தம்

DIN | Published: 13th September 2018 12:44 AM


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதற்கு முன்பு, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டிலும், கிராம ஊராட்சிகளுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டிலும் தேர்தல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அந்த ஆண்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதால் தொடர்ந்து 5 மாதங்கள் பதற்றமான சூழல் நிலவியது. அதன் பிறகு அங்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழல் அமையவில்லை.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவுக்கு (35ஏ) எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும், அதுவரை உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும், தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூறி வருகின்றன.
இந்நிலையில், இவ்விரு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, உள்ளாட்சித் தேர்தலை நடத்துதற்கு மத்திய அரசு ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:
சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.3,000 கோடி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு ரூ.1,300 கோடி என அந்த மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மொத்தம் ரூ.4,300 கோடி வழங்க வேண்டும் என்று 14-ஆவது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, அந்த தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, கீழ்நிலையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாமல், மத்திய அரசு அளிக்கும் நிதியை பயன்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியாது. இதற்காகவே, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புகிறது. அந்த தேர்தலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர் என்றார் அவர்.

 

More from the section

சித்தகங்கா பீடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: ஊடுருவல் தொடர்பான போட்டியை நடத்தியது காங்கிரஸ்- பாஜக குற்றச்சாட்டு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: தில்லி போலீஸாரிடம் தேர்தல் ஆணையம் புகார்
கடமை உணர்வு குறைந்து, உரிமை உணர்வு மேலோங்கிவிட்டது: பிரதமர் மோடி
சபரிமலை தொடர்புடைய மனுக்கள் 30ஆம் தேதிக்கு பிறகு விசாரணை: உச்சநீதிமன்றம்