புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

காஷ்மீர் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் கருத்து: இந்தியா கவலை

DIN | Published: 13th September 2018 01:08 AM


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழுப்பப்படும் புகார் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்செல் பாச்லெட் கூறியதற்கு இந்தியா கவலை தெரிவித்தது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவரான மிச்செல் பாச்லெட், கடந்த திங்கள்கிழமை காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பேசினார்.
காஷ்மீர் குறித்து மனித உரிமைகள் அமைப்பின் சமீபகால அறிக்கையில் மனித உரிமைகள் தொடர்பாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை மீறல் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து வெளிப்படையான விவாதமும், தீவிரமான ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டியுள்ளது. உலகில் மக்களுக்கு கிடைக்கும் நீதியும், மரியாதையும் காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இரு புறமும் சென்று பார்வையிட அனுமதி கேட்கும் பணியும் தொடர்கிறது. நாங்கள் அந்தப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை வெளியிடுவோம்' என்று மிச்செல் பாச்லெட் தெரிவித்தார்.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் 39-ஆவது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ராஜீவ் சந்தர் பேசியதாவது: கடுமையான சவால்களை இந்த அமைப்பு எதிர்கொண்டு வருகிறது. பயங்கரவாதம்தான் மனித உரிமைகளுக்கு எதிரான மிகப் பெரிய அத்துமீறலாக இருந்து வருகிறது.
நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு மனித உரிமை மீறல் பிரச்னைகளை வெளிப்படையான முறையில் தீர்த்து வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில் அதிக கவனம் எடுத்துக் கொண்டு மிச்செல் பேசுவார் என்று நம்புகிறோம் என்றார் ராஜீவ் சந்தர்.
மிச்செலின் கருத்தை பாகிஸ்தான் நிரந்தரத் தூதர் ஃபரூக் அமில் ஜெனீவாவில் வழிமொழிந்தார்.

 

More from the section

கேரளாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் பொங்கல் வைத்து நூதனப் போராட்டம்
புல்வாமா தாக்குதல் எதிரொலி: ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி அடித்துக் கொலை? 
புல்வாமா தாக்குதலால் காஷ்மீர் மாணவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது: பிரகாஷ் ஜாவடேகர்
ப.சிதம்பரத்தின் மனைவி தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி 'திடீர்' விலகல் 
அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்