வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

நாட்டு மக்களை நீண்ட நாள்கள் பாஜகவால் ஏமாற்றி கொண்டிருக்க முடியாது: காங்கிரஸ்

DIN | Published: 13th September 2018 01:07 AM


பொது பிரச்னைகளில் நாட்டு மக்களை நீண்ட நாள்கள் பாஜகவால் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
ஜனநாயகம், அரசியலமைப்பு நடைமுறைகள், பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றின் மீது பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ்-கோ மரியாதை கிடையாது. தங்களது சொந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஜனநாயகம், அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு முடிவு கட்ட அவர்கள் விரும்புகின்றனர். ஆர்எஸ்எஸ் தனது திட்டத்தை திணிக்கிறது. அந்தத் திட்டத்தை அமல்படுத்தும் அமைப்பாக பாஜக உள்ளது. அதை அமல்படுத்தும் நபராக மோடி உள்ளார்.
நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்படும் நபராக காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளார். தங்களது குறைகளை ராகுல் கேட்பார் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், மோடி அனைவராலும் விரும்பப்படும் நபராக இல்லை. முதலில் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்ற வேண்டும். தவறான கொள்கைகளை பாஜக செயல்படுத்துகிறது. அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களை அழிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது. அனைவரின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மற்றும் அனைவருக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் அரசுதான் நாட்டுக்கு தேவைப்படுகிறது. இந்த நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து வருகின்றன. தேர்தல்களுக்குள் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணிக்கு வந்துவிடும்.
தேர்தல் பிரசாரங்களில் பேசியபோது, கருப்புப் பணம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, நாட்டு மக்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி பொய்களை மோடி விற்பனை செய்தார். அவர் ஒருபோதும் மக்களுக்கு உண்மைகளை விற்பனை செய்தது இல்லை. இது நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. சில நாள்களுக்கு வேண்டுமானால் மக்களை ஏமாற்றலாம், எந்நேரமும் அவர்களை ஏமாற்றி கொண்டிருக்க முடியாது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து மோடி பேசினார். ஆனால் அதுபோல் அனைத்து தரப்பினரையும் அவர் அரவணைத்து செல்லவில்லை. பிறரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தது கூட இல்லை. மோடியின் செயல்களில் இருந்து பிறரை அரவணைத்து செல்லும் திறன், அவருக்கு இல்லை என்பது தெரிகிறது.
ஜனநாயக அமைப்புகள் மீது நம்பிக்கை கொண்ட நபர்களால் மட்டுமே, அனைவரையும் அரவணைத்து செல்ல முடியும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். ஆனால், இந்த குணநலன்கள் மோடியிடம் இல்லை. இதனால்தான் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். நாட்டின் முதல் பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேருவிடம், அனைவரையும் அரவணைத்து செல்லும் திறன் இருந்தது. இதனால்தான், நமது நாட்டில் ஜனநாயகம் 70 ஆண்டுகளாக தொடர்கிறது. அதேநேரத்தில், மோடியின் சித்தாந்தத்தில் ஜனநாயக கொள்கைகளுக்கு சிறிது கூட இடமில்லை என்றார் மல்லிகார்ஜுன கார்கே.

 

More from the section

கும்ப மேளா கங்கை பூஜையில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
ஹெலிகாப்டரிலிருந்து ஏவுகணை தாக்குதல்: சோதனை வெற்றி
மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகளே முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி
கர்நாடகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. தோல்வி
மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கவில்லை: பி.எஸ்.எடியூரப்பா