செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் தலையிட முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்

DIN | Published: 13th September 2018 01:10 AM

 

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைப்பது என்பது மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவு என்றும், அந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூஜா மகாஜன் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை இஷ்டம் போல் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலின்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் 22 நாள்களுக்கு நிறுத்தி வைத்திருந்தன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வே காரணம் என்று மத்திய அரசு தவறான தகவலை பரப்பி வருகிறது. ஆனால், கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தால் அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படுவதில்லை. இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் முன்பு வழக்குத் தொடுத்தேன். அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசை அணுகும்படி கேட்டுக் கொண்டு, எனது வழக்கை தள்ளுபடி செய்தது. இதன்படி, மத்திய அரசை நான் அணுகினேன். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. பெட்ரோல், டீசலை அத்தியாவசிய பொருள்களாகக் கருத்தில் கொண்டு, அதற்கு நியாயமான விலையை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வது என்பது மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவு. இதில் பெரிய அளவில் பொருளாதார பிரச்னைகள் உள்ளன. நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். மத்திய அரசே நியாயமான விலையை நிர்ணயம் செய்யலாம்.
இந்த விவகாரத்தில், நீதிமன்றங்கள் அரசுக்கு ஆணை பிறப்பிக்க முடியாது' என்றனர். அதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், மத்திய அரசிடம் அளித்த மனுக்களுக்கு எந்தவித பதிலும் இல்லை என்று தெரிவித்தார். அதையடுத்து, அந்த மனுவுக்கு மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், மனுவின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

More from the section

மோடியின் உத்தரவுக்கேற்ப செயல்படுகிறார் கிரண் பேடி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
குல்பூஷணை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு
மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகை ரூ.28,000 கோடி: ரிசர்வ் வங்கி முடிவு
இந்தியாவுக்கான தூதரைத் திரும்ப அழைத்து பாகிஸ்தான் ஆலோசனை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சிபிஐ முழுமையாக ஆராய்ந்து விசாரிக்க உத்தரவு