செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; பெட்ரோல் விலை உயர்வு: பிரதமர் தலைமையில் 15-இல் அவசர ஆய்வு

DIN | Published: 13th September 2018 04:34 AM

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (செப்.15) அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலையில் வரலாறு காணாத உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் அணிவகுத்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முக்கிய முடிவுகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய கொள்கை குழு துணைத் தலைவர் ராஜீவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை காலையில் ரூ.72.91 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட ரூபாயின் மதிப்பில் 12.3 சதவீதம் அளவுக்கு ஏற்பட்ட சரிவாகும்.
எனினும், புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி, ரூபாயின் மதிப்பில் 51 காசுகள் உயர்ந்து ரூ.72.18-ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
நாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை மத்திய அரசு குறைக்கக் கூடும் என்றும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீழ்ச்சியின் பாதிப்புகள்: ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக நாட்டின், அந்நிய செலாவணி பரிமாற்றம் தொடர்புடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கான செலவினமும் அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான நுகர்வோர் விலை விகிதம் கடந்த மாதம் 3.69 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். இந்த விலை விகிதம் கடந்த அக்டோபர் மாதம் 3.58 சதவீதமாக இருந்தது.
எல்லாவற்றையும்விட, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதேபோல், நாடெங்கிலும் பொதுமக்களிடமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அதிருப்தி நிலவுகிறது. முழுஅடைப்புப் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்தின.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், மத்திய அரசு அதன் மீது விதிக்கும் கலால் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், வளர்ச்சித் திட்ட செலவினங்களை குறைக்காத நிலையில், மத்திய அரசுக்கான வருவாயை குறைக்கச் செய்யும் வகையில் கலால் வரி குறைப்பை மேற்கொள்ள முடியாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து வருகிறது.
மத்திய பாஜக அரசின் இந்த முடிவு காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
அதேசமயம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளன.
மத்திய அரசும் இதேபோன்று கலால் வரியை ரூ.2 குறைக்கும்பட்சத்தில், ரூ.30,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என நிதியமைச்சகம் கணக்கிட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்த செலவினம் சற்று கூடுதலாக உள்ளது. இதன் எதிரொலியாகவே, பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது.
இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை உச்சத்தை தொட்டது. நாட்டிலேயே குறைவான கலால் வரி விதிக்கப்படும் தில்லியில் அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.87-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97-ஆகவும் இருந்தது.

 

More from the section

பிரதமர் மோடி எப்போதும் டீ விற்றதே கிடையாது: பற்ற வைத்த பிரவீன் தொகாடியா 
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் உள்ளது: தேர்தல் ஆணையம்
இந்தியாவின் திறமையை வெளிநாடுகளில் பரப்பும் தூதுவர்கள்: யாரைச் சொல்கிறார் மோடி? 
2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி: தொழில்நுட்ப நிபுணர் மீது போலீசில் புகார்  
என்னாது.. மீண்டும் அவரைக் காணவில்லையா?? அதிருப்தியில் கட்சியினர்!