சனிக்கிழமை 23 மார்ச் 2019

இந்தியாவுக்கான தூதரைத் திரும்ப அழைத்து பாகிஸ்தான் ஆலோசனை

DIN | Published: 19th February 2019 01:23 AM


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் வேளையில், இந்தியாவுக்கான தூதரை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கான தூதரை இந்தியா திரும்ப அழைத்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்த எங்கள் நாட்டுத் தூதர் சொஹைல் மக்மூத் அழைக்கப்பட்டுள்ளார். அவர் திங்கள்கிழமை காலை தில்லியிலிருந்து கிளம்பிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மக்மூத் பாகிஸ்தானில் எவ்வளவு நாள்கள் இருப்பார் என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி, பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்த்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மக்மூதை இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பேருந்து சேவை நிறுத்தம்: இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்புப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட அதிகாரி ராகுல் யாதவ் கூறுகையில், மாநிலத்தில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இந்தியாவின் பூஞ்ச்-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியிலுள்ள ராவலாகோட் பகுதிகளுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்புப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 
இது தொடர்பாகப் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே புதன்கிழமை (பிப்.20) நடைபெறும் கூட்டத்துக்குப் பின் முடிவு செய்யப்படும் என்றார்.
பூஞ்ச்-ராவலாகோட் பகுதி வழியாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்படும் பேருந்து சேவை மூலம், வணிகர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு அளித்திருந்த நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது. மேலும், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

More from the section

காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளேன்: அசோக் சவான் ஆடியோ கசிவால் பரபரப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாத ஆத்திரத்தில் சகோதரனை படுகொலை செய்த பயங்கரவாதிகள்