வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

குல்பூஷணை உடனடியாக விடுவிக்க வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு

DIN | Published: 19th February 2019 01:26 AM


குல்பூஷண் ஜாதவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை. அந்த விசாரணையை சட்டவிரோதமானதாக அறிவிக்க வேண்டும். குல்பூஷணின் மரண தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இந்தியா வாதிட்டது.
குல்பூஷண் விவகாரம் தொடர்பான 4 நாள் விசாரணையை சர்வதேச நீதிமன்றம் திங்கள்கிழமை தொடங்கியது. அதில் இந்தியாவின் சார்பில் ஆஜரான ஹரீஷ் சால்வே, வெளிநாட்டு கைதிகள் விவகாரத்தில் வியன்னா மாநாட்டு விதிகளை பாகிஸ்தான் மீறியதாகக் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும் வாதாடியதாவது: குல்பூஷணுக்கு எதிரான இந்த வழக்கு பாகிஸ்தானின் வார்த்தை ஜாலம் அடிப்படையிலானதே தவிர, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள குல்பூஷணுக்கென வழக்குரைஞர் நியமிக்கப்படாமல், அவருக்கான சட்ட உதவி மறுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமானது: ஒரு வெளிநாட்டு கைதிக்கு, வாழ்வதற்கும், அவர் மீது நியாயமான விசாரணை நடைபெறுவதற்கும், நீதி பெறுவதற்கும் உரிமை உள்ளது.
உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மேற்கொண்ட வழக்கு விசாரணையை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். குல்பூஷண் ஜாதவ் உளவு நடவடிக்கைகளிலோ, பயங்கரவாதச் செயல்களிலோ ஈடுபட்டதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதையும் பாகிஸ்தான் வழங்கவில்லை.
குல்பூஷண், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் தனது நெருக்குதலால் அவரை அவ்வாறு சொல்ல வைத்திருக்கலாம் என தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் தனக்கான பிரசார உத்தியாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
வியன்னா மாநாட்டு விதிகள்: வெளிநாட்டு கைதிகள் மீதான விசாரணை விவகாரத்தில், வியன்னா மாநாட்டு விதிகளை பாகிஸ்தான் மீறியுள்ளது. அந்த விதியின்படி, வெளிநாட்டு கைதிக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளும்போது அவருக்கென வழக்குரைஞர் வசதி உடனடியாக செய்து தரப்பட வேண்டும். 
அத்துடன், வியன்னா மாநாட்டு விதி 36-ன் படி, ஒரு நாடு மற்றொரு நாட்டு குடிமகனை கைது செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அதுதொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், குல்பூஷண் கைது தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.
பாகிஸ்தானில் குல்பூஷண் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற தகவலும் இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. பரஸ்பரம் இரு நாட்டு குடிமகன்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு வழக்குரைஞர் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வியன்னா மாநாட்டு விதியின் கீழ், வெளிநாட்டு கைதிகளுக்கு வழக்குரைஞர் வசதி செய்து தரப்பட வேண்டியதை, இதற்கு முன்பு 2 வழக்கு விசாரணைகளின்போது சர்வதேச நீதிமன்றமே உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குல்பூஷணை கைது செய்து 3 மாதங்களுக்குப் பிறகே அவருக்கு வழக்குரைஞர் வசதியை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. அந்த 3 மாதங்கள் தாமதத்துக்கான போதுமான விளக்கத்தை பாகிஸ்தான் அளிக்க வேண்டும். குல்பூஷணை 2016 மார்ச் மாதம் கைது செய்த பாகிஸ்தான், சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு ஏப்ரலிலேயே அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
குல்பூஷணுக்கு வழக்குரைஞர் உதவியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இந்தியா, மே, ஜூன், ஜூலை என 3 மாதங்களில் 13 முறை பாகிஸ்தானுக்கு நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியது. ஆனால், பாகிஸ்தான் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குல்பூஷணுக்கான சட்ட உரிமை என்ன என்பதை பாகிஸ்தான் அவருக்கு தெரிவிக்கவில்லை. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கவும் பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
குல்பூஷண் விவகாரத்தில் இணை விசாரணைக் குழு நடத்திய விசாரணை தொடர்பாக எந்தவொரு தகவலையும் இந்தியாவுக்கு தெரிவிக்காத பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தகவலை மட்டும் இந்தியாவிடம் தெரிவித்தது.
சுதந்திரமானது அல்ல: பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றங்கள் சுதந்திரமான விசாரணை அமைப்பு அல்ல. அந்த நீதிமன்றங்கள் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தால் கண்டனத்துக்குள்ளானவை. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2 ஆண்டுகளில், வெளித் தெரியாத வகையிலான விசாரணையின் மூலமாக பொதுமக்கள் 161 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அத்தகைய நீதிமன்றத்தால் குல்பூஷண் வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது மரண தண்டனையை ரத்து செய்து, குல்பூஷணை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹரீஷ் சால்வே வாதாடினார்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர், உளவு நடவடிக்கை மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

பாக். நீதிபதிக்கு மாரடைப்பு
குல்பூஷண் வழக்கு விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் அமர்வில் இருந்த பாகிஸ்தானுக்கான இடைக்கால நீதிபதிக்கு திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, தஸ்ஸாதுக் ஹுசைன் கிலானி  (69) என்ற அந்த நீதிபதி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உடல் நலமுடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்ற விதிகளின்படி, வழக்கில் தொடர்புடைய நாட்டைச் சேர்ந்த நீதிபதி, விசாரணைக்கான அமர்வில் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாடு தனக்கான இடைக்கால நீதிபதியை நியமித்துக்கொள்ளலாம்.

More from the section

வாராணசியில் மோடி மீண்டும் போட்டி: 184 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு பின்னடைவு
அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, கந்தூரி தேர்தலில் போட்டியில்லை
அரக்கோணத்தில் சிக்னல் பணிகள்: ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாறுதல்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு