புதன்கிழமை 20 மார்ச் 2019

பயங்கரவாதம் தொடர்பான ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நிர்மலா சீதாராமன்

DIN | Published: 19th February 2019 09:17 PM

 

இந்த பயங்கரவாத தாக்குதல்களால் இந்திய ராணுவத்தின் மன உறுதி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

புல்வாமா பயங்கரவாத சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அதிகளவிலான தகவல்களைப் பெற்று வருகிறோம். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்று தெரியாது.

ஏனென்றால் இந்த கொடூர சம்பவத்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்டுள்ள கோபத்துக்கும், ஏமாற்றத்துக்கும் ஆறுதல் தெரிவிக்க வார்த்தைகள் போதாது. அதுமட்டுமல்லாமல் இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பதிலடி வழங்க நம்முடைய பாதுகாப்பத்துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார்.

இந்த தாக்குதல் மட்டுமல்லாமல், மும்பையில் ஏற்பட்ட தாக்குதலில் கூட அன்றைய மற்றும் இன்றைய மத்திய அரசுகள் பாகிஸ்தானுக்கு தேவையான ஆதாரங்களை வழங்கியுள்ளன. அவற்றுக்கெல்லாம் பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

இந்திய சட்டதிட்டங்களுக்குட்பட்டு நீதிமன்றங்கள் மூலம் மும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் முதன்மை நீதிமன்றம் கூட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை.

இந்த பயங்கரவாத தாக்குதல்களால் இந்திய ராணுவத்தின் மன உறுதி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் கடமையைச் செய்யத் தயாராக உள்ளனர். நாட்டு மக்கள் இந்திய பாதுகாப்புத்துறைக்கு அளித்துள்ள ஆதரவு, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது என்றார். 

More from the section

கோவா: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறது பாஜக
லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்
வேட்பாளர்கள் தேர்வு: பாஜக மத்திய தேர்தல் குழு மும்முரம்
எப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர் பாரிக்கர்: மோகன் பாகவத் புகழஞ்சலி
கர்நாடகத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு