புதன்கிழமை 20 மார்ச் 2019

சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க பாகிஸ்தான் வலியுறுத்தல்

DIN | Published: 22nd February 2019 02:40 AM


குல்பூஷண் ஜாதவை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று தி ஹேகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத செயல்களை தூண்டியதாகவும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை (48) பாகிஸ்தான் அரசு கடந்த 2016-இல் கைது செய்தது. அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி, 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. 
2017-ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி விசாரணை நடைபெற்று வருகிறது. குல்பூஷண் ஜாதவின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வாதாடியது. குறிப்பாக, ஈரானுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்த அவரை, பாகிஸ்தான் கடத்திக் கொண்டு வந்து தண்டனை விதித்ததாகவும் இந்தியா குற்றம்சாட்டியது.
இந்நிலையில், வியாழக்கிழமை பாகிஸ்தான் தரப்பு வழக்குரைஞர் கவார் குரேஷி தனது இறுதி வாதத்தை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஏற்க முடியாத கோரிக்கை என நிராகரிக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி, இறுதியில்தான் குல்பூஷணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது சந்தேகத்துக்கு இடமின்றி தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த விவாதத்தின்போது காஷ்மீர் பிரச்னை குறித்தும் பேசிய பாகிஸ்தான் வழக்குரைஞர், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்த ஆதாரங்களைத் தருமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரியுள்ளது. 
ஏனெனில், இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா தவறாகக் குற்றம்சாட்டி வருகிறது என்றார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியான அப்துல்குயாவி அகமது யூசுஃப், வழக்கின் தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

More from the section

கோவா: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறது பாஜக
லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்
வேட்பாளர்கள் தேர்வு: பாஜக மத்திய தேர்தல் குழு மும்முரம்
எப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர் பாரிக்கர்: மோகன் பாகவத் புகழஞ்சலி
கர்நாடகத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு