திங்கள்கிழமை 25 மார்ச் 2019

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: ராகுல் உத்தரவாதம்

ENS | Published: 22nd February 2019 11:31 PM


மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை உலகின் எந்தப் படையாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். 

திருப்பதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார். அப்போது, பேசிய அவர் 

"ஆந்திர மக்களின் தேவையும் உரிமையுமான மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்காததை எண்ணி பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும். அரசியல் மற்றும் தலைமைப் பண்பின் முக்கியமான விஷயமே, கொடுத்த வாக்குறுதி. தாம் அளித்த வாக்குறுதியை செயல்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இல்லையென்றால், அது பயனற்றது.  

பிரதமர் மோடி தெரிவித்த அனைத்துமே பொய். தன்னை பாதுகாவலராக்கக் கோரி தான் உங்களிடம் கேட்டார். பிரதமர் ஆக்க சொல்லி அல்ல. ஆனால், இன்று பாதுகாவலர் திருடன் ஆகிவிட்டார்.   

5 ஆண்டுகளுக்கு முன், திருப்பதியில் நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திர மாநிலத்துக்கு 5 கிடையாது,  10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார். 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். வேளாண் விளை பொருள்களுக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார். இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை இந்தியா என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், அவை அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், இது கார்ப்ரேட்டுகளுக்கு நல்ல காலம். ரஃபேல் ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானி ரூ. 30,000 கோடி பலனடைந்தார். 

ஆனால், நாங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று தெரிவித்தோம். அதை செயல்படுத்தினோம். 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ரூ.70,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய ஆட்சியில், கார்ப்ரேட்டின் ரூ. 3.5 லட்சம் கோடியை மோடி மன்னிப்பார். ஆனால், ஏழை விவசாயிகளின் கடன்களை மன்னிக்க மாட்டார். 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். ஆனால், அதை இரண்டே நாளில் அமல்படுத்தினோம். 

தன்னை தானே தேசியவாதி என்று சொல்லிக்கொள்ளும் இந்திய பிரதமர் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற பிறகும், தேசியப் பூங்காவில் தனக்கு தானே ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். கேமிராக்களுக்கு முன் சிரித்துக் கொண்டிருந்தார். 

தன் உயிரையே தியாகம் செய்த இளைஞர்களின் குடும்பத்தினர் வலியை அவர் உணரவில்லை.     

புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்தவுடன் படப்பிடிப்பை நிறுத்திக்கொண்டு, உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அவர் ஏன் முன்வரவில்லை?

பிறகு, ஆந்திரா மற்றும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை உலகின் எந்தப் படையாலும் தடுக்க முடியாது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. ஆனால், பிரதமரின் அர்ப்பணிப்பாக மாநிலத்தின் தேவை பூர்த்தி செய்யப்படும்" என்றார். 

முன்னதாக, சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்தடைந்த ராகுல் காந்தி திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

More from the section

மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நவீன் பட்நாயக்
மாயாவதி ஏன் போட்டியிடவில்லை?: அமித் ஷா கேள்வி
தியாகம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்
பாஜக சார்பில் இதுவரை 306 வேட்பாளர்கள் அறிவிப்பு
பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்