திங்கள்கிழமை 25 மார்ச் 2019

ஆர்டிஐ வரம்புக்குள் அரசியல் கட்சிகள்:  ராகுல் காந்தி

DIN | Published: 24th February 2019 03:03 AM

தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்குள் அரசியல் கட்சிகள் கொண்டு வரப்படுவதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இதுகுறித்து அவர் கூறியதாவது:
வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும். இதை நான் முழுவதும் ஏற்கிறேன். இந்த கண்ணோட்டத்தில், அரசியல் கட்சிகளும், மக்களுக்கான அமைப்புதான். அதேபோல், நீதித்துறை, பத்திரிகை, அரசு அதிகாரிகள் ஆகியவைகளும் மக்களுக்கான அமைப்புகள்தான்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் கொண்டு வரப்பட வேண்டும் என்றால், நீதித்துறை, பத்திரிகை, அரசு அதிகாரிகளையும் ஏன் கொண்டு வரக் கூடாது? அனைத்தும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.
அரசியல் கட்சிகளை மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டு வந்தால், அது அரசியல் கட்சிகளை அடிப்படை ரீதியில் பலவீனப்படுத்தும். நாட்டு மக்களையும் பலவீனப்படுத்தும். ஆதலால் அனைத்தையும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றார் ராகுல்.
துணை ராணுவத்தினருக்கு தியாகி அந்தஸ்து: சண்டையில் பலியாகும் துணை ராணுவ வீரர்கள் குறித்த கேள்விக்கு, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், "துணை ராணுவப் படையினருக்கு தியாகி அந்தஸ்து தற்போது அளிக்கப்படவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த அந்தஸ்து வழங்கப்படும். சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், பிஎஸ்எஃப் போன்ற துணை ராணுவப் படைகள்தான், அதிக அளவு உயிரிழப்புகளை சந்திக்கின்றன. ஆனால் அந்தப் படைகளுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்படவில்லை. அது நல்லதில்லை' என்றார்.
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஜூலை மாதம் கட்டித் தழுவியது குறித்த கேள்விக்கு, "பிரதமர் மோடி மீது எனக்கு விரோதம் இல்லை. ஆதலால்தான் அவரை கட்டித் தழுவினேன்' என்றார். அப்போது தமது பாட்டி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், "தாயாரை விட பாட்டி மீது மிக பாசம் வைத்திருந்தேன். தாய் கட்டுப்பாடுமிக்கவர் என்பதால், பாட்டியின் பின்னால் மறைந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தேன். அவர் படுகொலை செய்யப்பட்டது, என்னை மிகவும் பாதித்தது. அதனால் ஆத்திரத்தில் இருந்தேன். அப்போது மேற்குவங்கத்தில் இருந்த எனது தந்தை ராஜீவ் காந்தி, அங்கிருந்து திரும்பி வந்ததும், என்னை கட்டித் தழுவினார். அதன்பிறகு எனது ஆத்திரம் மறைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி மட்டும், இந்தியாவும், இந்திய மக்களும் ஒன்று என்று திட்டவட்டமாக அறிவித்தார் எனில், நாட்டில் நிலவும் வெறுப்பு மறைந்துவிடும்' என்றார்.
 

More from the section

மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நவீன் பட்நாயக்
மாயாவதி ஏன் போட்டியிடவில்லை?: அமித் ஷா கேள்வி
தியாகம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்
பாஜக சார்பில் இதுவரை 306 வேட்பாளர்கள் அறிவிப்பு
பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்