சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

சொகுசு விடுதியில் கொலைவெறித் தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ புகார்; அப்போ தடுக்கி விழுந்ததெல்லாம் பொய்யா?

DIN | Published: 22nd January 2019 12:57 PM

 

கர்காடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் அளித்த புகாரின் அடிப்படையில், கம்பளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொகுசு விடுதியில் நடந்த மோதல் குறித்து கட்சி ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே நடந்த மோதலில், காயமடைந்த ஆனந்த் சிங், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரது கண்களில் ரத்தக் கட்டு ஏற்பட்டு, மூக்கில் ரத்தம் வழிய, நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததாக மருத்துவமனை அறிக்கை கூறியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜகவினர் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுக்கும் வகையில், பெங்களூரு அருகே உள்ள பிடதியில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

மேலும் படிக்க :
 கேளிக்கை விடுதிகளில் மீண்டும் உலா வரும் கர்நாடக அரசியல்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு பல்லாரி மாவட்டம், விஜயநகரா தொகுதியைச் சேர்ந்த ஆனந்த்சிங்குக்கும், கம்பளி தொகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆனந்த்சிங்குக்கு தலை, கண், வயிறு, தோள் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ஏற்பட்ட கைகலப்பு மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திங்கள்கிழமை கம்பளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: கேளிக்கை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. விஜயநகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் எனக்கு அண்ணனை போன்றவர். அவரை நான் தாக்கவில்லை. அவர் கீழே விழுந்ததால் காயமேற்பட்டுள்ளது. என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டால், ஆனந்த்சிங்கின் குடும்பத்தினருக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். கேளிக்கை விடுதியில் பீமாநாயக் எம்.எல்.ஏ.வுக்கும், ஆனந்த்சிங்குக்கும் தகராறு நடந்திருக்கலாம். ஆனந்த்சிங்குடன் நான் தகராறில் ஈடுபடவில்லை என்றார் அவர்.

காங்கிரஸ் தலைவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க கணேஷ் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கணேஷ் மீது புகார் அளிக்க ஆனந்த்சிங் குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. அவர்களை புகார் அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியினர் சமாதானப்படுத்தி வந்தனர். ஆனால், இறுதியில், கணேஷ் மீது ஆனந்த் சிங் தரப்பில் கொலை முயற்சி புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், சொகுசு விடுதியில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

Tags : Karnataka Congress brawl Ganesh attack Anand Singh

More from the section

சிதம்பர ரகசியம்: மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா?
13 ஆயிரம் கிராமங்களின் மண் உடன் தயாராகும் ஜாலியன்வாலாபாக் நினைவுச் சின்னம்!
அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
கர்நாடகா: பெங்களூருவில் கண்காட்சிக்கான வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து
வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை மோடி அரசு ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது: ராகுல்