சனிக்கிழமை 20 ஜூலை 2019

அமர்நாத் யாத்திரையால் காஷ்மீரில் சுற்றுலா பாதிப்பு: பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டு

DIN | Published: 08th July 2019 02:45 AM

அமர்நாத் யாத்திரை வழித்தடத்தில் பொதுமக்களின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது என்று பயண ஏற்பாட்டாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
 அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், காசிகுந்த் என்ற இடத்தில் இருந்து நஸ்ரீ வரை காலை 10 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்களின் வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் அவசரகால வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அமர்நாத் யாத்ரீகர்களின் வாகனங்கள் சென்ற பிறகே, மற்ற வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
 இந்நிலையில், மாநில சுற்றுலா வளர்ச்சித் துறைச் செயலர் ரிக்ஜியான் சம்பீலை காஷ்மீரைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், ஹோட்டல்களின் உரிமையாளர்கள், சுற்றுலா சார்ந்த தொழில்துறையினர் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர். அவரிடம், பொதுமக்களின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிக்ஜியான் சம்பீல் உறுதியளித்தார்.
 இந்தச் சந்திப்புக்குப் பிறகு காஷ்மீர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நஸீர் மீர் கூறியதாவது:
 45 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல், காஷ்மீரில் உள்ள பல ஹோட்டல்களில் ஒரு அறை கூட முன்பதிவு செய்யப்படவில்லை. அமர்நாத் யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற பெயரில், மாநிலத்துக்குச் சுற்றுலா வருபவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஓய்வுக்காக சுற்றுலா வருவோர், காஷ்மீருக்குப் பதிலாக ஜம்மு நகருக்குச் சென்று விடுகின்றனர். இதனால், காஷ்மீரில் உள்ள பயண ஏற்பாட்டு நிறுவனங்களுக்கும், ஹோட்டல்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
 இதேபோல், காஷ்மீர் டிராவல்ஸ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் சித்திக் கூறுகையில், "இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அமர்நாத் யாத்திரை நடைபெறும் 45 நாள்களுக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட வேண்டும்' என்றார்.
 

More from the section

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற பரிசீலனை
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 9 மாதங்களில் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: 5 அதிகாரிகள் பணியிடைநீக்கம்
சோன்பத்ராவுக்கு செல்ல விடாமல் பிரியங்காவை தடுத்து நிறுத்திய போலீஸார்
பிகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி; 9 பேர் படுகாயம்