21 ஏப்ரல் 2019

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது: 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

DIN | Published: 21st March 2019 04:19 AM


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடி (48), லண்டனில் புதன்கிழமை ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடுபவர்களை நாடு கடத்தும் மத்திய அரசின் முயற்சியில், இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. நீரவ் மோடி கைது செய்யப்பட்டிருப்பதை மத்திய அரசு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தி அழைத்து வருவதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளில் பிரிட்டன் அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றார்.
நீதிமன்றத்தில் ஆஜர்: இது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீரவ் தீபக் மோடி (பிறந்த தேதி 24-02-1971), இந்திய விசாரணை அமைப்பின் வேண்டுகோள் மற்றும் லண்டன் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சட்ட நடைமுறைகள் நீதிமன்றத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியிடம் 3 கடவுச்சீட்டுகள், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் குடியேற்ற ஆவணங்களும் இருந்தன. இவற்றில் சில காலாவதியாகிவிட்டன என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜாமீன் நிராகரிப்பு: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவுடன், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிபதி மேரி மேலோனிடம் நீரவ் மோடி தரப்பில் கோரப்பட்டது. அப்போது, அவர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து ஆஜராகாததால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதி, அவரை வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, இதேபோன்று கடன் மோசடி செய்து லண்டனுக்குத் தப்பிய விஜய் மல்லையாவும் இதே சூழ்நிலையை எதிர்கொண்டார். ஆனால், அப்போது அவர் வழக்குரைஞர்களின் ஆலோசனைப்படி தானாக முன்வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால், அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அதே நேரத்தில் அவரை நாடு கடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இதற்கான ஆவணத்தில் கடந்த மாதம் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித் கையெழுத்திட்டு அனுமதி அளித்தார் என்பது 
குறிப்பிடத்தக்கது.
பின்னணி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்பே அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனில் தொழில்:  இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக அந்நாட்டின் தி டெலிகிராம் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது. அதில், லண்டனில் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பில் நீரவ் மோடி வசித்து வருகிறார்; புதிதாக வைர வியாபாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், நீரவ் மோடியின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை தீவிரமாக செயலாற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. ஆனால், இதற்கு அமலாக்கத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், நீரவ் மோடியை நாடு கடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
நீதிமன்றம் ஆணை: இந்நிலையில், அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கடந்த இரு நாள்களுக்கு முன்பு கைது ஆணை பிறப்பித்தது. அதையடுத்து, இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நீரவ் மோடியின் கடவுச்சீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் அவர் பிரிட்டனில் இருந்து வேறு நாட்டுக்கு தப்ப முடியாமல் முடக்கப்பட்டார். மெஹுல் சோக்ஸி,  கரீபியன் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவரை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மும்பையில் உள்ள கருப்புப் பணம் மற்றும் நிதி மோசடித் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நீரவ் மோடியின் மனைவி அமி மோடிக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது. அமி மோடி இப்போது அமெரிக்காவில் உள்ளதாகத் தெரிகிறது.
 

More from the section

சித்தராமையா மீண்டும் முதல்வரா?காங்கிரஸுக்கு பாஜக கேள்வி
சித்தராமையா செல்லவிருந்த காரில் பொம்மை!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்
காஷ்மீரில்  துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக் கொலை
கொள்கை சமரசத்தில் ஆம் ஆத்மி கட்சி