வியாழக்கிழமை 24 ஜனவரி 2019

பேசும் ஆடைகள்

By ஹாலாஸ்யன்| Published: 25th August 2018 11:15 AM


இந்திய கதைசொல்லும் மரபில், மாய யதார்த்தத்தின் உச்சம் என விக்கிரமாதித்தன் கதையைச் சொல்லலாம். வேதாளம் கேட்கிற கதைக்கெல்லாம் பதில் சொல்லி வேதாளத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பின்னர், அதனோடு ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் விசித்திரங்களை அறியப் பயணப்படுவான். அப்படி ஒரு கதையில், பேசாமடந்தை என்கிற ஒரு வார்த்தைகூடப் பேசாத பேரழகியைjf பேசவைக்கப் போவான்.

அவளைப் பேசவைக்க, வேதாளத்தை ஒவ்வொரு பொருளாக ஏவிவிட்டு பொருட்கள் பேசுவதுபோல் செய்வான். முதலில் இருவருக்கும் இடையேயான திரை பேசும். அவள் திரையை அறுத்து தரையில் இட்டு பேசவிடுவாள். இருட்டில் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்க விளக்குத் திரியைப் பேசவைப்பான். அவள் விளக்கைத் தூண்டி விடுவாள். கடைசியில் அவள் அணிந்திருக்கும் மேலாடையைப் பேச வைப்பாள். அவள் மேலாடையையும்... சரி விடுங்கள். அதன்பின்னால் என்ன ஆகியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் ஆடைகள் பேசுமா? பேச்சு என்றால் மேடைப்பேச்சோ, குசலம் விசாரிக்கிற பேச்சோ அல்ல? தகவல் தொடர்பு. ஆடைகளோடு தொழில்நுட்பத்தின் உதவியோடு நாம் தொடர்புகொள்ள முடியுமா? இந்தத் தேவைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

இன்றைக்கு நாம் wearbles என்றழைக்கப்படும் உடலில் அணியும் மின்னணு உபகரணங்கள் அனைத்துமே தனியாக அணிய வேண்டியவை. இவ்வொன்றையும் தனித்தனியே அணிந்துகொள்வது என்பது சற்றே கடுப்படிக்கும் செயல். மேலும், வெகு சில சாதனங்களைத் தவிர மீதியெல்லாம் தண்ணீருக்குள் போனால் பிராணனை விட்டுவிட்டும். அதனால் வெறுமனே துணிக்குள் மின்னணு உபகரணங்களை வைத்துத் தைத்தல் என்பது வேலைக்கு ஆகாது.

ஆடைகளில் இழையோடு இழையாய், நூலோடு நூலாய் மின்னணு உபகரணங்கள் இருந்து, அவை நீர் பட்டாலும் ஒன்று ஆகாது என்று இருந்தால் எப்படி இருக்கும்.

அப்படிப்பட்ட ஆடைகள் சாத்தியமே என்று நிரூபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். கண்ணாடி இழைகளைத் துணிகளின் ஊடே கொடுத்து நெய்துவிடுவது. கண்ணாடி இழை என்கிற அந்தத் தொழில்நுட்பம் நம்மைச் சுற்றி மிகப்பெரும் வலையாகப் படர்ந்திருக்கிறது. தரைக்கடியில் பதிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் முதல், இன்றைய அதிவேக ஃபைபர்நெட் இணைய இணைப்புகள் என்று எல்லாம் கண்ணாடி இழைகள்தான். முழு அகப் பிரதிபலிப்பு (Total internal reflection) என்கிற மிக மிகச் சுவாரசியமான ஒரு இயற்பியல் கோட்பாடு மூலம் அவை செயல்படுகின்றன.

கம்பி வழித் தகவல் பரிமாற்றத்துடன் கண்ணாடி இழை வழித் தகவல் பரிமாற்றத்தை ஒப்பிட்டால், பின்னதில் பல வசதிகள் உண்டு. மிக முக்கியமானது வேகம். ஒளியின் திசைவேகமான நொடிக்கு மூன்று லட்சம் கி.மீ. என்பது அதன் உச்ச வரம்பு. போதுமே அதற்கு மேல் என்ன வேகம் வேண்டிக்கிடக்கிறது. உண்மையில், இணையம் என்றவுடன் செயற்கைக்கோள்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், உலகின் பெரும்பான்மை இணையத் தகவல் தொடர்பு கடலடி கண்ணாடி இழைக் கம்பிகளின் வழியேதான் நடைபெறுகிறது. கடலடியில் இவற்றைப் பதிக்க, பழுது நீக்க என தனிக் கப்பல்களே உண்டு.

இந்தக் கண்ணாடி இழைக் கம்பிகளை அப்படியே நூல் நூற்பதுபோலத் தயாரித்துவிட முடியாது. அதன் தயாரிப்பு முறை சற்றே வித்தியாசமானது. ஒரு விரல் உள்ளே போகக்கூடிய அளவு கண்ணாடிக் குழாய்களை முதலில் தயாரிப்பார்கள். இதற்குப் ப்ரீஃபார்ம் (preform) என்று பெயர். இந்தப் ப்ரீஃபார்மை நெட்டுக்குத்தாகத் தொங்கவிட்டு, முனையில் இருந்து ஒரு சாண் தள்ளி, அப்படியே நெருப்பைக் காட்டி நெகிழவைப்பார்கள். ஒரு சாண் கண்ணாடியில் எடை நெகிழ்ந்த பகுதியில் இருக்கும் கண்ணாடியை அப்படியே மெல்லிய கண்ணாடி இழையாக இழுக்கும். மீதமிருக்கும் குழாயையும் இப்படி வெப்பத்தால் நெகிழ்த்தி இழையாக்கிவிடுவார்கள். இப்படித்தான் கண்ணாடி இழைகள் தயாரிக்கப்படுகின்றன. வெறும் கண்ணாடியில் ஆனதால், இவை நீர் புகாதவையாக இருக்கின்றன.

இந்தப் ப்ரீஃபார்மில் விரல் புகும் அளவு இடம் இருக்கும்போதே மிக மெல்லிய தாமிரக் கம்பிகளையும், நுண்ணிய எல்.ஈ.டி. விளக்குகள் மற்றும் ஒளியை உணரக்கூடிய கருவிகள் (light detectors) ஆகியவற்றைப் பதித்து இழையாக மாற்றும்போது கண்ணாடிக்குள் பொதித்துவிட முடியும். இந்த இழையைத்தான் விஞ்ஞானிகள் சோதனை முறையில் தயாரித்து வெற்றியடைந்திருக்கிறார்கள்.

இந்த இழைகளை விசைத்தறியில் கொடுத்து ஆடை இழைகளோடு நெய்வதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படித் தயாரித்த ஒரு ஆடையை மீன் தொட்டியில் இருக்கும் நீரில் போட்டு, இழைக்குள் இருக்கும் ஒளி உணரும் கருவிக்கு சமிக்ஞைகள் அனுப்பியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் இருந்தாலும் கருவி தரமாக வேலை செய்திருக்கிறது. பத்து முறை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்தெடுத்த பின்பும் கச்சிதமாக வேலை செய்திருக்கிறது. நம்மூரின் அடித்துத் துவைக்கும் முறைக்கு ஒத்துவருமா என்று தனியாகச் சோதனை நடத்த வேண்டும்.

இதன்மூலம் உடலின் வெப்பநிலை, கொஞ்சம் முயன்றால் ரத்தச் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஒளி மூலமாகக் கண்காணித்து தகவல்கள் அனுப்புமாறு செய்ய முடியும். சங்கேத சமிக்ஞைகளை அனுப்புவதற்காக, ராணுவ வீரர்களின் உடையில் இந்தக் கருவிகளைப் பொருத்தி அனுப்பி தகவல்களைப் பெற முடியும். செய்முறை சாத்தியமானால், பயன்பாடுகள் பலவிதம். இந்தத் தொழில்நுட்பம் வெகு விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags : பேசும் ஆடைகள் கண்ணாடி இழை நெசவு வேதாளம் விக்கிரமாதித்தன் மின்னணு உபகரணங்கள் ஃப்ரீபார்ம் preform technology talking dress optical fibre

More from the section

லேசர் - இல்லாத பிரச்னைக்கான ஒரு நல்ல தீர்வு!
பாக்டீரிய சோலார் பேனல்கள்
நித்தியமும் லித்தியம்!
பேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம்
செல்ஃபியும் சிசிடியும்