திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம்

By ஹாலாஸ்யன்| Published: 09th June 2018 12:00 AM

 

ஒரு எண்பது வருட காலகட்டத்தில் நிற்காமல் ஓடி, 100 ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் நீச்சல் குளங்களைப் போல, நூறு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவு சுமார் 3.3 பில்லியன் லிட்டர் திரவத்தை இறைக்கும் ஒரு பம்ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், நம் இதயம்தான் அது.

வயிற்றில் கருவாக உருவாகி, முதல் இதயத் தசைகள் உருவானவுடன் துடிக்க ஆரம்பித்து கடைசியில் நிற்கும் வரை ஓடும் ஒரு உறுப்பு. உண்மையில் இது ஒரு உயிரியல் விந்தை. யானை, நீலத் திமிங்கிலம் போன்ற விலங்குகளை கற்பனை செய்து பாருங்கள். பாரோசாரஸ் என்ற பெயரில் 12 மீட்டர் உயரமும் 20 மீட்டருக்கு மேல் நீளமும் கொண்ட டைனோசரின் இதயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எப்படியும் நம் வீட்டு மின் மோட்டார்கள் அளவுக்கு அவற்றின் இதயங்கள் இருந்திருக்கும். வாழும் உதாரணம் ஒட்டகச்சிவிங்கிகள். நமக்கெல்லாம் இதயத்தில் இருந்து மூளை அதிகபட்சம் ஒரு அடிக்குள் வந்துவிட, ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தில் இருந்து மூளை ஆறடி தூரத்துக்கும் மேல் இருக்கும். அவ்வளவு தூரம் அது அழுத்தத்துடன் மூளைக்கு ரத்தத்தை அனுப்ப வேண்டும்.

கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம் இதயம். துல்லியமாகச் சுருங்கி விரிந்து ரத்தத்தை ஓடவைக்கும் அதன் செயல்பாட்டில் சில நேரம் பிரச்னை வரலாம். சிறு மின்சார சமிஞ்கைகள்தான் இதயத் தசைகளை ஓட வைக்கின்றன. அந்த சமிஞ்கைகள் உருவாக்கத்திலோ அல்லது சமிஞ்கைகள் இதயத்தில் பரவுவதிலோ பிரச்னை இருந்தால், இதயம் தன் இயல்பான துடிப்பில் இருந்து மாறிவிடும். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ துடிக்க ஆரம்பிக்கலாம். இரண்டுமே, ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை செல்களுக்கு சரியானபடி கிடைக்காமல் செய்துவிடும். இது அயர்வு, உடல் அசதி முதல் தீவிரமான நிலைகளில் மரணம் வரை கொண்டுபோய்விடும். அம்மாதிரி நேரங்களில் உயிர்காப்பதுதான் பேஸ்மேக்கர் (pacemaker). செயற்கையான மின் சமிஞ்கைகள் மூலம் இதயத்தின் ரத்தம் செலுத்தும் செயல்பாட்டை சரிசெய்யும் கருவி. அதற்கு முதலில் இதயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்க வேண்டும்.

இதயம், மேலிரண்டு கீழிரண்டாக நான்கு அறைகளைக் கொண்டது. மேலிருக்கும் அறைகளுக்கு ஏட்ரியா (atria), கீழிருக்கும் அறைகளுக்கு வென்ட்ரிகிள் (ventricle) என்று பெயர். இடதுபுறம் இருக்கும் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிகிள் இரண்டும் ஒரு தசை வால்வால் பிரிக்கப்பட்டிருக்கும். அதேபோல, வலதுபுறம் இருக்கும் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிகிளும் ஒரு வால்வால் பிரிக்கப்பட்டிருக்கும்.

வலதுபுறம் இருக்கும் அறைகள் ஆக்ஸிஜன் குறைந்த ரத்தத்தைப் பெற்று நுரையீரலுக்கு அனுப்பும். இடதுபுறம் இருக்கும் அறைகள் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தைப் பெற்று உடல் முழுமைக்கும் அனுப்பும். இதில் சுவாரசியமே அந்த ஒழுங்குதான். இதயத்தின் துடிப்பு, அதன் தசைகளுக்கு அளிக்கப்படும் மெல்லிய மின்சாரத்தால் நிகழ்கிறது. இது உற்பத்தி ஆகுமிடம் வலது ஏட்ரியத்தை ஒட்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு சைனோ ஏட்ரியல் முனையம் (Sino Atrial Node) என்று பெயர். அங்கு உருவாகும் மின்சார சமிக்ஞைகள் ஏட்ரியத்தை சுருக்கி, வென்ட்ரிகிளுக்குள் ரத்தத்தைச் செலுத்தும். அதன்பின்னர், அந்த மின் சமிக்ஞைகள் நகர்ந்து வென்ட்ரிகிள்கள் பக்கம் வரும். இப்போது வென்ட்ரிகிள்கள் சுருங்கி ரத்தத்தை இதயத்தை விட்டு வெளியே அனுப்பும். இந்த மின்சமிக்ஞைகள் கச்சிதமாக தேவைக்கேற்ப இயங்கும். சாதாரணமாக இருக்கும் நீங்கள், ஒரு நாய் துரத்தி ஓட ஆரம்பிக்கிறீர்கள் எனில், மூன்றே விநாடிக்குள் துடிக்கும் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு ஈடுகொடுக்கும். ஆனால், சில நேரம் இந்த கச்சிதம் சீர்குலையும். மின் சமிக்ஞைகள் சரியாகப் பயணிக்காததால் இதயம் சீராய்த் துடிக்காது. தேவையான அழுத்தத்துடன் ரத்தம் பயணிக்காது. இது சோர்வு, ரத்த அழுத்தக் குறைவு, ஏன் அரிதாக மரணம் கூட நிகழலாம். அதைச் சரிசெய்யக் கிடைத்த ஆபத்பாந்தவன்தான் பேஸ்மேக்கர்.

சைனோ ஏட்ரியல் முனையம் கொடுக்கத் தவறுகிற மின்சார சமிக்ஞைகளை பேஸ்மேக்கர் கருவி கொடுக்கும். இதன்மூலம் இதயத் துடிப்பை இந்தக் கருவி சரிசெய்யும். மருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எல்லா கருவிகளையும்போல இந்தக் கருவியும் மிகப்பெரிதாக, பார்க்க சற்றே பயமுறுத்தும்படியாக இருந்தது. இது மிக உபயோகமாக இருந்தாலும், நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏதுவானதாக இல்லை. மேலும், அதன் மின்சார சமிக்ஞைகள் போதுமான அளவு வலுவானதாக இல்லை. அதன்பின்னர் துல்லியமாக மின்சார சமிக்ஞைகளை உற்பத்தி செய்யும் கருவிகள் புழக்கத்துக்கு வருகின்றன. ஆனால், அவையும் பெரிதாக இருக்கின்றன. ட்ரான்ஸிஸ்டர்கள் சகஜமாக புழக்கத்துக்கு வரத் தொடங்கியவுடன், பேஸ்மேக்கர்களின் அளவு பல மடங்கு சுருங்கியது. ஆனாலும் அவற்றின் மின்சார இணைப்புகள் உடலுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்லும். இது தொற்று அபாயத்தை உண்டாக்கக்கூடியது. அதன்பின்னர்தான், தற்போது புழக்கத்தில் இருக்கும் உடலுக்குள் பொருத்தக்கூடிய பேஸ்மேக்கர் வருகிறது.

இடதுபுற தோள் எலும்புக்கு அடியில் பேட்டரியும், மின்சார அளவைக் கட்டுப்படுத்தும் மின்சுற்றுகளும் உள்ள கைக்கடிகாரத்தின் அளவே உள்ள கருவி பொருத்தப்படும். அதிலிருந்து வயர்களை சப்க்ளேவியன் வெயின் (subclavian vein) என்று அழைக்கப்படுகிற நேரடியாத இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்கிற ரத்தச் சிரையின் வழி இதயத்தின் வலது வென்ட்ரிகிளுக்குள் செலுத்திவிடுவார்கள். வயரின் முனையில் இருக்கும் உலோக முனை, மின்சாரத்தைப் பாய்ச்சி இதயத்தைத் துடிக்கச் செய்யும். அதன் பேட்டரியை உடலுக்கு வெளியில் இருந்தே மின்தூண்டல் (induction) மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.

நமக்கு இதயத்தில் இருக்கும் சிக்கலுக்கு தகுந்தாற்போல் பேஸ்மேக்கரில் வகைகள் உண்டு. எத்தனை வயர்களைக் கொண்டு எத்தனை இடத்தில் மின்சாரம் பாய்ச்சுகிறோம் என்பதைப் பொருத்து பிரிக்கிறார்கள். சாதாராணமாகப் பயன்படுத்தும் பேஸ்மேக்கர்களில் ஒற்றை வயர், வலது வென்ட்ரிகிளுக்குள் போய் மின்சாரம் பாய்ச்சும். இரட்டை வயர் கொண்டவை, ஆரிக்கிளுக்கு ஒன்று, வென்ட்ரிகிளுக்கு ஒன்று என பாய்ச்சும். வெகு அரிதான, இரண்டு வென்ட்ரிகிளும் வேறு வேறு அளவில் துடிக்கும் நோயான வென்ட்ரிகுலார் டிஸ்ஸிங்ரொனிக்கு (ventricular dyssynchrony), பைவென்ட்ரிகுலார் பேஸ்மேக்கர் (biventricular pacemaker) என்ற இரு வென்ட்ரிகளுக்கும் தலா ஒரு வயர் கொண்ட பேஸ்மேக்கர்கள் பயன்படுகின்றன.

இதைத்தவிர, எல்லா நேரங்களிலும் மின்சாரம் பாய்ச்சுபவை, இதயம் சரிவர இயங்காமல்போகையில் மட்டும் பாய்ச்சுபவை என்றும் பிரிவு உண்டு. பின்னதில், இதயத்தின் இயல்பான மின்சார இயக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்பு உண்டு.

பேஸ்மேக்கர்கள் இதய நோயாளிகளின் வரப்பிரசாதம். வாழ்நாளை வருடக்கணக்கில் நீட்டிக்கக்கூடிய சஞ்சீவி மருந்து. அன்றாட வேலைகளை எந்தவிதச் சிக்கலும் இன்றிச் செய்யத் துணைபுரிவது. வெகு சிலர், பேஸ்மேக்கரின் உதவியுடன் மாரத்தான்கள் ஓடுகிறார்கள். மலையேறுகிறார்கள். தோளில் இருந்து வயர்கள் அனுப்பாமல் நேரடியாக இதயத்துக்குள்ளேயே செலுத்தக்கூடிய பேஸ்மேக்கர்களைச் சோதித்துக்கொண்டிருக்கிறார்கள். மூன்று காப்ஸ்யூல் மாத்திரை நீளமே இருக்கிற இவை, நேரடியாக சப்க்ளேவியன் வெயின் வழியாக இதயத்துக்குள் இறக்கிவிடப்பட்டவுடன் செயல்புரியத் தொடங்கிவிடும். அரைமணியில் பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்டு திரும்ப வந்துவிடலாம். காத்திருப்போம்.

Tags : பேஸ்மேக்கர் இதயம் ரத்த ஓட்டம் வென்ட்ரிகிள் pacemaker heart blood ventricle atria ஏட்ரியா இதயத் துடிப்பு மின்தூண்டல் induction battery பேட்டரி சிரை vein

More from the section

வெயிட்டா ஒரு லைட்
பறவையும் புல்லட் ரயிலும்
கையில் மிதக்கும் கனவா நீ!
மலேரியாவும் சுத்து மிட்டாயும்..!
எரிபொருள் மின்கலன் (Fuel Cell)