திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

செல்ஃபியும் சிசிடியும்

By ஹாலாஸ்யன்| Published: 05th May 2018 12:00 AM

 

உதடு குவித்து ஒரு க்ளிக், ஒரு பக்கம் ஒயிலாய்த் திரும்பி இரு விரல் உயர்த்தி ஒரு க்ளிக். கேமராக்கள் நம் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டன. தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு கொஞ்சம் கீழ பாருங்க, மேல பாருங்க, தோள இறக்குங்க, ஸ்மைல் ப்ளீஸ் என்பதில் இருந்து, கேமராக்களை யார் வேண்டுமானாலும் வாங்கிக் கற்றுக்கொள்ளுமாறு மாறி இருக்கின்றன. கேமரா தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய மைல் கல், அதை படச்சுருள்களின் சிக்கலான பிடியில் இருந்து டிஜிட்டலாக மாற்றியதுதான். இந்த மாற்றம்தான், இதை சாமானியர்களுக்கு இவ்வளவு நெருக்கமாக மாறியதற்குக் காரணம். சொந்தமாக லேப் வைப்பதெல்லாம் சாத்தியமில்லைதானே.

படச்சுருள்களில் நாம் படங்களை வேதிப் பொருட்களாகச் சேமிக்கிறோம். தங்கம் அல்லது வெள்ளியின் புரோமைடு உப்பை செல்லுலாய்ட் எனப்படும் ப்ளாஸ்டிக் மேலே பூசிவிடுவார்கள். ஒளி படுகையில், ஒளியின் பிரகாசத்துக்கு ஏற்ப படச்சுருளில் இருக்கும் புரோமைடு உப்பு தங்கமாகவோ வெள்ளியாகவோ மாறும். ஆனால், படச்சுருள்களை ஒளி புகாதவாறு வைத்துக்கொள்ள வேண்டும். தீரத் தீர மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். டிஜிட்டல் கேமராக்கள் இந்த எல்லாச் சிக்கலையும் தீர்த்தன. சரி, டிஜிட்டல் கேமராக்கள் எப்படி இயங்குகின்றன? அவை படங்களை என்ன மாதிரி சேமிக்கின்றன.

படங்கள் பூஜ்ஜியம் - ஒன்றுகளாக மாற்றப்பட வேண்டும். ஆனால், அது எப்படி சாத்தியப்படுகிறது? விடை ரொம்ப எளிமையானது. சோலார் பேனல்களின் இயக்கமும், டிஜிட்டல் கேமராவின் இயக்கமும் அடிப்படையில் ஒன்றுதான். சோலார் பேனல்களில் ஒளி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு நேரடியாக மின்கலங்களில் சேமிக்கப்படுகிறது. அதேபோல்தான், டிஜிட்டல் கேமராக்களிலும். ஆனால், உற்பத்தி ஆகும் மின்சாரம் அளக்கப்பட்டு டிஜிட்டலாக மாற்றிச் சேமிக்கப்படும். கேட்பதற்கு மிக மிக எளிதாக இருக்கும். ஆனால், இது சோலார் பேனல்கள் மாதிரி மொத்தமாக இவ்வளவு மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்று சொன்னால் போதாது.

ஒரு டிஜிட்டல் படத்தில் மிகச்சிறிய அலகு பிக்ஸெல் (pixel) எனப்படும். Picture element என்பதன் சுருக்கமே பிக்ஸெல். உங்கள் கணினியில் ஏதேனும் ஒரு படத்தைத் திறந்து நன்றாக ஸூம் செய்து பார்த்தால், ஏதோ ஒரு கட்டத்தில் படத்தில் சதுரம் சதுரமாகத் தெரிய ஆரம்பிக்கும். அந்தச் சதுரம்தான் பிக்ஸெல். ஒவ்வொரு பிக்ஸெலும், படம் என்ன நிறம் எவ்வளவு பிரகாசம் ஆகியவற்றைச் சேகரித்து வைத்திருக்கும். அந்த பிக்ஸெல்கள்தான் படம் என்னும் சுவற்றின் செங்கல்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஆனால், சோலார் பேனல்களின் அமைப்பை அப்படியே பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் உண்டு. உருவாகும் மின்சாரத்தை அளப்பதில் சோலார் பேனல்களில் பெரிய கட்டுப்பாடுகள் தேவையில்லை. ஆனால், புகைப்படம் எடுக்கும்போது சிலிகான் சில்லில் உருவாகும் மின்சாரத்தை அப்படி ஏனோ தானோ என்று அளந்தால், புகைப்படம் முழுக்கக் கோடுகள் தெரியும். மொத்தப் புகைப்படமும் கெட்டுவிடும்.

இந்த பிக்ஸெல்களை உருவாக்குவதில்தான், டிஜிட்டல் கேமரா வடிவமைப்பின் பிரமிப்பு அடங்கியிருக்கிறது. ஒளியை மின்சாரமாக மாற்றுகிற ஒரு சிறிய சிலிகான் சில்லுக்கு சி.சி.டி. (CCD) என்று பெயர். கஃபே காஃபி டே அல்ல, சார்ஜ் கப்ளிங் டிவைஸ் (Charge Coupling Device). ஒரு 1005 சுத்தமான சிலிகான் பரப்பு. அதன் கீழ் சில ஆக்ஸைடு அடுக்குகள் கொண்டது இந்த சில்லு. இதற்கு, ஒளி பட்டவுடன் அதை மின்னேற்றமாக Charge மாற்றக்கூடிய திறன் உண்டு. இந்தச் சுத்தமான சிலிகான் பரப்பின் மேல், உலோகத்தை சன்னமான இழைகளாகப் பதிக்கிறார்கள். அதற்கு செங்குத்தாக மின்கடத்தாப் பொருளையும் இழைகளாகப் பதிக்கிறார்கள். இப்போது மொத்த சிலிகான் சில்லும் உலோக இழை மற்றும் மின் கடத்தாப் பொருள் இழைகளால் கட்டம் கட்டப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட ஒரு சிலிகான் சில்லுதான் கேமராக்களில் இருக்கிறது.

அது செயல்படும் விதத்தை ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முயலுவோம். தண்ணீர் பிடிக்கும் குவளைகளை பல வரிசைகளாக அடுக்கிவைப்போம். ஒவ்வொன்றிலும் வேறு வேறு அளவு தண்ணீர் இருக்கிறதென வைத்துக்கொள்வோம். ஆனால், நம்மிடம் ஒரே ஒரு குவளையில்தான் அளவீடுகள் இருக்கிறது. அதை வைத்துதான் மொத்தக் குவளையையும் அளக்க முடியும். ஆனால், அந்தக் குவளை ஏதோ ஒரு மூலையில் சங்கிலி போட்டுக் கட்டி வைக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். எளிதான, குழப்பமில்லாத வழி என்னவெனில், ஏதேனும் ஒரு மூலையில் இருக்கும் வரிசைக் குவளைகளை ஒவ்வொன்றாக அளக்கலாம். பின்னர், இரண்டாவது வரிசையில் இருக்கும் குவளைகளில் இருக்கும் நீரை இப்போது காலியாக இருக்கும் வரிசைக்கு மாற்றி, மறுபடியும் ஒவ்வொன்றாக அளக்கலாம். இந்தச் செயல்பாடு துரிதமாக நிகழ வேண்டுமெனில், இரண்டு பக்கமும் அளக்கும் குவளைகளை வைக்கலாம்.

கேமராக்கள் இதைத்தான் செய்கின்றன. நாம் பட்டனை அழுத்தும்போது, அந்தச் சிறிய சிலிகான் சில்லின் பரப்பில் லென்ஸின் வழியே வெளிப்புற ஒளி விழுகிறது. இப்போது விழும் ஒளியின் அளவுக்கு ஏற்ப அதன் பிக்ஸெல் கட்டங்களில் மின்னேற்றம் உண்டாகிறது. அந்தச் சில்லின் ஒரு புறம் இருக்கும் ஒரு ரிஜிஸ்டர் மூலம், ஓரமாக வரிசையில் இருக்கும் பிக்ஸெல்களின் அளவீடுகள் ஒவ்வொன்றாக அளக்கப்பட்டு நினைவகத்தில் சேமிக்கப்படுகிறது. பின்னர், அடுத்த வரிசையின் மின்னேற்றம் அலுமினியம் இழைகளுக்குச் செலுத்தப்படும் மின்சாரத்தின் திசையை மாற்றிக்கொடுப்பதன் மூலம் ஓர வரிசைக்கு நகர்த்தப்படுகிறது. இப்படியே மொத்த சில்லிலும் உருவான மின்னேற்றம் அளக்கப்பட்டு படமாகச் சேமிக்கப்படுகிறது. வேகம் அதிகம் வேண்டுமெனில், இரண்டு ரிஜிஸ்டர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிற்க. இது வெறும் ஒளியின் அளவை மட்டும்தான் அளவெடுக்கிறது. ஆகவே, இது சேமிக்கும் படம் வெறும் கருப்பு வெள்ளையாக மட்டும்தான் இருக்கும். வண்ணப் புகைப்படங்களுக்கு இந்த சில்லின் மேலே ஒளி விழும் முன்னர், வண்ண வடிகட்டிகள் மூலம் ஒளி வடிகட்டப்பட்டு பின்னரே சில்லின் மேலே விழுகிறது. பின்னர் சில கணினி நிரல்கள் கணக்குப்போட, வண்ணப் படங்கள் தயாராகிறது.

அடுத்தமுறை, செல்ஃபியின்போதும், ஃபிலிம் ரோலில் 36 எக்ஸ்போஸ் கவலையில்லாமல் டிஜிட்டல் கேமராவில் கண்டதையும் ‘சுட்டுத்தள்ளும்’ போதும் சிசிடிக்கும் நன்றி சொல்லுங்கள்.

Tags : செல்ஃபி போட்டோ பிக்ஸெல் டிஜிட்டல் சிசிடி selfe photo digital camera ccd pixel கேமரா

More from the section

பேசும் ஆடைகள்
லேசர் - இல்லாத பிரச்னைக்கான ஒரு நல்ல தீர்வு!
பாக்டீரிய சோலார் பேனல்கள்
நித்தியமும் லித்தியம்!
பேஸ்மேக்கர் - இதய நோயாளிகளின் வரப்பிரசாதம்