புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

1. போடா வெளக்கெண்ணெ

By நாகூர் ரூமி.| Published: 20th August 2018 10:00 AM

 

நான் அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். என் வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். அவன் வடிவேலு மாதிரி பயங்கர கருப்பா இருப்பான். வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரின் கிண்டலுக்கும் அடிக்கடி இலக்காவான். அவன் ஏதாவது சொன்னால், அவனை வெறுப்பேற்ற மாணவர்கள், ‘போடா வெளக்கெண்ணெ’ என்று சொல்வார்கள். கூப்பிடும்போதும், ‘டேய் வெளக்கெண்ணெ, இங்க வா’ என்றுதான் கூப்பிடுவார்கள். அதுதான் அவன் பெயராக ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. அவன் உண்மையான பெயர் என்ன என்று என்னால் இன்றுவரை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அவனை நினைத்ததும் விளக்கெண்ணெய் மட்டுமே மனதில் பிசுபிசுவென ஒட்டிக்கொண்டு வருகிறது!

‘விளக்கெண்ணெய்’ என்று சகவகுப்பு மாணவர்கள் சொன்னதும் அவன் முகம் சுண்டிப்போகும். முகத்தில் ஒரு சோக எண்ணெய் வடியும். அது வெளக்கெண்ணெயா என்று எனக்குத் தெரியாது. அவனுக்கு ஏன் விளக்கெண்ணெய் என்று மாணவர்கள் பட்டப்பெயர் வைத்து அழைத்தார்கள் என்றும் எனக்கு அப்போது தெரியாது. அவன் அப்பா விளக்கெண்ணெய் வியாபாரம் செய்து வந்தார் என்று பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன்.

‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை / என்ன விற்றான் என அறிய வைக்கும் சொல்’ என்று ஒரு புதிய திருக்குறளையே எழுதவைத்துவிட்டான் அவன்!

அந்த பருவத்தில் நான் விளக்கெண்ணெயைப் பார்த்ததுகூடக் கிடையாது. அது எப்படி இருக்கும், என்னென்ன செய்யும், ஏன் அதை விற்கிறார்கள், ஏன் அதை வாங்குகிறார்கள் என்று எதுவுமே தெரியாது. ஒரு மாணவனைக் கிண்டல் செய்யப் பயன்பட்ட ஒரு பொருள் அது என்று மட்டும்தான் அதைப்பற்றி நானறிவேன்.

ஆனால் ஆண்டுகள் பல வழிந்தோடி, நான் ‘சீனியர் சிடிசன்’ ஆன பிறகு அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு வந்தது. அதுவும் அனுபவப்பூர்வமாக! எனது நீண்டகாலப் பிரச்னை ஒன்றுக்கு அது தீர்வாக அமைந்தது. அதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நான் கழிவறைக்குள் போனால் ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவேன்! காரணம், வெளியில் வர குறைந்தது கால் மணி நேரம் ஆகும்! ரொம்ப காலமாக எனக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தது. அது என் பிரச்னை மட்டுமல்ல. அது ஒரு இந்தியப் பிரச்னை என்றே சொல்லலாம். ஏன், உலகளாவிய பிரச்னை என்றும் சொல்லலாம். ஆனால், இந்தியப் பாரம்பரியத்தில் உள்ளது மாதிரி, இந்தப் பூமியில் எங்குமே சுலபமான தீர்வுகள் இருக்க முடியாது என்று நாம் நம்புகிறேன். அவ்வளவு அற்புதமான பூமி இது. இங்கே பிறந்திருக்கும் நாம் அந்தவகையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.

காலையில் எழுந்ததும், மூன்று தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைக் குடித்தால் வயிறு, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் சுத்தப்படுத்தப்படும்; மலம் எளிதாக, உங்களை எந்த விதத்திலும் கஷ்டபடுத்தாமல் நன்றாக வெளியேறும் என்று நண்பர் ஹீலர் பாஸ்கர் பேசியதைக் கேட்டேன். எனக்கு அவர் மீது நம்பிக்கை உண்டு. எனவே முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.

உடனே காரியத்தில் இறங்கினேன். மறுநாளே நான் பணிபுரிந்த ஊரிலிருந்த ஒரு செக்குக்குச் சென்று ஒரு பாட்டில் விளக்கெண்ணெய் வாங்கி வந்தேன். லேசான மஞ்சள் நிறத்தில் அது இருந்தது. விரலை விட்டுப் பார்த்தேன். கொழகொழ வழவழவென்றிருந்தது! முட்டைக்குள் கைவிட்ட மாதிரி.

ஹீலர் பாஸ்கர் சொன்னதுபோல ஒருநாள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மூன்று தேக்கரண்டி விளக்கெண்ணெய்யை யாருக்கும் தெரியாமல் குடித்தேன். குடித்து சுமார் அரை மணி நேரம் இருக்கும். கழிவறைக்கு ஓடு என்று வயிறு உத்தரவு கொடுத்தது. போனேன். என் வாழ்வில் அப்படி ஒரு கழிவு வெளியேற்றத்தை அதுவரை நான் கண்டதில்லை. ஒரு ‘ஹோஸ் பைப்’ வைத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தால் எப்படி இருக்கும்?! அப்படி வெளியானது எல்லாம்! ஆனால் வயிற்றுப்போக்கில் வருவது போலல்ல. உண்மையைச் சொன்னால் அது ஒரு சுகானுபவமாக இருந்தது. உள்ளே இருக்கும் குடல்கள் எல்லாம் சுத்தமாவதை நேரில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

பல ஆண்டுள் வாழ்ந்த வீட்டைக் காலிசெய்தது போல் என் உடலுக்குள் ஒரு மகத்தான வெறுமையை உணர்ந்தேன். விளக்கெண்ணெய்க்கும் ஹீலர் பாஸ்கருக்கும் மானசீகமாக நன்றி சொன்னேன். கழிவு வெளியேற்றத்துக்கு எனிமா கொடுக்கலாம் என்று என் சில நண்பர்கள் சொன்னார்கள். பாஸ்கர்கூட அதைச் சொன்னார். எனிமா கொடுத்துக்கொள்வதற்கான உபகரணத்தையும் நண்பர்களிடமிருந்து நான் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் அதில் ஒரு பிரச்னை இருந்தது. அதை தனியாக ஒருவரே செய்துகொள்ள முடியாது! அதோடு, என்னைப்போல அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற சமாசாரங்களெல்லாம் உள்ள ஆணாக நீங்கள் இருந்தீர்களேயானால் – அப்படி இருப்பது அபூர்வம்தான், தெரியும். அப்படி பல பெண்களே இருப்பதில்லை என்பதும் எனக்கும் தெரியும் - அது இன்னும் சவாலான விஷயமாக மாறிவிடும். எனிமா எடுத்துக்கொள்வது உங்களுக்கு மானப்பிரச்னையாகிவிடும்!

ஆனால், மகாத்மா காந்தி இந்த விஷயத்தில் ஒரு ‘எக்ஸ்பர்ட்’ ஆகவும், ஒரு சர்வாதிகாரி போலவும் இருந்துள்ளார் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு! ஆமாம். அவர் தனக்கு எனிமா கொடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் தன்னோடு இருந்தவர்களுக்கும் அவரே எனிமா கொடுத்தார்! அதில் அவர் மனைவி, பேத்தி என பெண்களும் உண்டு! அதைப்பற்றி பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதும்போது, ‘lucky old man’ என்று எழுதினார். அது குஷ்வந்த் சிங்கின் குறும்புதானே தவிர காந்தியைப் பற்றிய உண்மை அல்ல! மகாத்மா தன் பேத்தியோடு நிர்வாணமாக பக்கத்தில் ஒரே பாயில் படுத்து, செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுகின்றனவா என்று பரிசோதனை செய்ததற்கும் இதற்கும் தொடர்பு ஒன்றும் இல்லை! முன்னது உடல் தூய்மை பற்றியது. பின்னது மனத்தூய்மை பற்றியது.

நான் எனிமா பயன்படுத்தாதன் காரணம் என் வெட்க உணர்வுதான். என் மனைவியே அதைச் செய்துவிட ஒப்புக்கொண்டாலும் எனக்கு அதில் உடன்பாடில்லை. மகாத்மாவுக்கு இருந்த துணிச்சல் என்னிடம் இல்லை. அல்லது என்னிடம் இருக்கும் அளவு வெட்க உணர்வு அவரிடம் இருக்கவில்லை என்றும் சொல்லலாம்!

விளக்கெண்ணெய் வைத்தியம் ஒருவகையில் மர்ம ஸ்தானத்தையும், மானத்தையும் காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும்! அன்றிலிருந்து விளக்கெண்ணெய் மீது எனக்கு ஒரு காதலே ஏற்பட்டுவிட்டது! அதுபற்றிக் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். அசத்தலான தகவல்கள் கிடைத்தன!

விளக்கெண்ணெய் என்றாலே குழந்தைகள் அலறிய காலம் ஒன்றுண்டு. இப்போது எந்தக் குழந்தையும் அலறாது. காரணம், விளக்கெண்ணெய் என்றால் என்னவென்றே அதற்குத் தெரியாது. தாய்மார்களுக்கு மட்டும் தெரியுமா என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது! அந்தக் காலத்தில் மலமிளக்கியாக மட்டுமே அது பெரும்பாலும் கொடுக்கப்பட்டது. எந்த வயது குழந்தைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு கொண்டவர்களே அதைச் செய்தார்கள். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பதைப்போல, காத்திரம் அறிந்து எண்ணெய்விடத் தெரிந்தவர்களாகவே அந்தக்கால பெரியவர்கள், பெற்றோர்கள் இருந்துள்ளார்கள்.

அளவு தெரியாமல் விளக்கெண்ணெய்யை அதிகமாகக் கொடுத்தால் என்னாகும் என்று தெரியுமல்லவா? பிய்த்துக்கொண்டு போய்விடும். இதைத் தெரிந்தோ என்னவோ சர்வாதிகாரி முசோலினி ஒரு காரியம் செய்தான். என்ன காரியம் தெரியுமா? ஆச்சரியம் ஆனால் உண்மை என்ற தலைப்பின் கீழ் வரும் விஷயம்தான் அது. அவனால் பிடிக்கப்பட்டு கைதிகளாக இருந்த தன்னுடைய எதிரிகளுக்கு இரண்டு விதமான தண்டனைகளை முசோலினி கொடுத்தானாம். ஒன்று குண்டாந்தடியால் அடிப்பது. இன்னொன்று மிக அதிகமான அளவு விளக்கெண்ணெய்யை அவர்களுக்குக் கொடுப்பது! எவ்வளவு கொடூரமான ‘சைக்கோ’வாக அவன் இருந்திருக்கிறான் என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

விளக்கெண்ணெய் பற்றி கிடைத்த தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஏனெனில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் பல விஷயங்களும் அதில் உண்டு. அதைப்பற்றி பெண்கள்தான் சொல்ல வேண்டும். உதாரணமாக, கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகளை, குறிப்பாக ஃபைப்ராய்ட் எனப்படும் நார்க்கட்டிகளை விளக்கெண்ணெய் கரைக்கிறது என்றும், மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது என்றும், தாய்மார்களுக்கு பால் நிறைய சுரக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் நான் சொல்ல முடியாதல்லவா?! ஆனால் நம் வீட்டில் உள்ள பெண் பெரிசுகளால் சொல்ல முடியலாம்.

என்னென்ன வகையில் விளக்கெண்ணெய் மனிதனுக்கு உதவுகிறது என்று ஒரு சின்ன பட்டியல் தருகிறேன் பாருங்கள் -

கி.மு. 2000-லிருந்து விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற தகவல் எனக்கு மிகுந்த ஆச்சரியமூட்டியது. ஆயுர்வேதத்தில் இது ‘கந்தர்வ ஹஸ்தம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘தேவலோகத்திலிருந்து வந்த மருந்து’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உடல் முழுக்க விளக்கெண்ணெய்யில் ‘மசாஜ்’ செய்வதை ஆயுர்வேதம் ‘அப்பியாங்கம்’ என்று அழைக்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் ஒரு சர்வரோக நிவாரணியாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது வரலாறு.

கரம், சிரம், புறம் நீட்டாதீர் என்று பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். விளக்கெண்ணெய்க்கும் இப்படி ஒரு குறிப்பு உள்ளது. ஆமம், கபம், மலம் இம்மூன்றுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் அது. ‘ஆமம்’ என்பது நச்சு நீக்கத்தையும், கபம் என்பது நீர்த்தேக்கத்தையும், மலம் என்பது கட்டிதட்டிப்போய் வெளியில் வராமல் தேங்கிவிடும் கழிவுகளையும் குறிக்கிறது.

வழவழ கொழகொழ இல்லாமல், விளக்கெண்ணெய் பற்றி எனக்குத் தெரிந்ததை கொஞ்சம் விளக்கிவிட்டேன். இதைப்படித்துவிட்டு ‘போடா வெளக்கெண்ணெ’ என்று நீங்கள் என்னைத் திட்டமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!

இன்னும் உண்டு…

Tags : விளக்கெண்ணெய் மலச்சிக்கல் மருத்துவம் சிகிச்சை castor oil treatment constipation

More from the section

22. பால் மாறாட்டம் - 2
21. பால் மாறாட்டம்
20. சொர்க்க உணவு
19. சொல்லாததும் உண்மை
18. தம்மபதம் - 5