வியாழக்கிழமை 21 மார்ச் 2019

10. ஓடிப்போன ஓஓ...டிபிஎம்எஸ்

By ஜெ. ராம்கி| Published: 19th June 2018 12:00 AM

 

OODBMS என்பது RDBMS குடும்பத்தின் புதுவரவாக வந்ததும், டேட்டாபேஸ் உலகில் நிறைய மாற்றங்கள் வரும் என்று நினைத்தார்கள். ஆரக்கிள், இன்ஃபோமிக்ஸ், சைபேஸ், ஐபிஎம் நிறுவனங்கள் ஏற்கெனவே சந்தையில் வலுவாக இருந்த ஆர்டிபிஎம்எஸ்ஸை புதுவரவுக்கு ஏற்றபடி மாற்றியமைத்தார்கள். ஆனாலும், ஓஓடிபிஎம்ஸ்ஸின் படுதோல்வியை தவிர்க்க முடியவில்லை.

சாப்ட்வேர் அப்ளிகேஷன் உலகம் என்பது வித்தியாசமானது. பயனாளிகள் மத்தியில் மைக்ரோசாப்ட் உச்சத்தில் இருந்தது. சாப்ட்வேரை பொறுத்தவரை ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு அறிமுகமானால், காப்பியடித்து அதைவிட சிறப்பான ஒன்றை அறிமுகப்படுத்துவார்கள். விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் பிரபலமாக இருந்த 90-களின் ஆரம்பத்தில், லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை டோர்வால் (Torvalds) அறிமுகப்படுத்தினார். ஓப்பன் சோர்ஸ் என்னும் வார்த்தை அதற்குப் பின்னர்தான் பிரபலமானது.

சாப்ட்வேர் உலகத்தில் நடைபெற்ற மாற்றங்களெல்லாம் டேட்டாபேஸ் ஏரியாவில் சாத்தியமில்லை. டேட்டாபேஸை பொறுத்தவரை புதிய கண்டுபிடிப்புகள் குறைவுதான். அப்படியே ஏதாவது வந்தாலும் போட்டி எதுவும் இருக்காது. டேட்டாபேஸ் சந்தை என்பது ஒரு சில நிறுவனங்களால் ஆளப்பட்டு வந்தது. மேலும், அங்கே மாற்றங்களை உடனடியாக அமலுக்குக் கொண்டுவருவது சிரமம்.

ஓஓடிபிஎம்எஸ் மாற்றங்களையும் அமலுக்குக் கொண்டுவர சில ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆரக்கிள், இன்போர்மிக்ஸ் நிறுவனங்கள், ஏற்கெனவே உள்ள ஆர்டிபிஎம்ஸ் டேட்டாபேஸ் சிஸ்டத்திலேயே புதிய மாற்றங்களை அமல்படுத்தினார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

டேட்டாபேஸ் அப்கிரேட் என்பது அப்போதெல்லாம் பெரிய விஷயம். அப்ளிகேஷனுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், பிஸினஸில் எந்தத் தடங்கலும் இல்லாமல், குறைந்த செலவில் சிஸ்டத்தை அப்கிரேட் செய்தாக வேண்டும். பல நிறுவனங்கள் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பதில்லை. ஏற்கெனவே உள்ளதை வைத்து சமாளிப்போம் என்கிற மனநிலைதான் பல ஐ.டி. நிறுவனங்களிடம் இருந்தது.

ஓஓடிபிஎம்எஸ் ஏன் எடுபடவில்லை என்பதற்கு முன்னுக்குப் பின் முரணான செய்திகள் உண்டு. புதிய மாடலில் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தன. ஆனால், அமலுக்குக் கொண்டுவந்து பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. பொதுவாகவே, டேட்டாபேஸ் என்பது அப்ளிகேஷன் டெவலப்பருக்கு மட்டும் வசதியாக இருந்தால் போதாது. ஒரு நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான தகவல்களைச் சேமிக்கவும், எப்போது வேண்டுமானாலும் பெற்றுத்தரவும் தயாராக இருக்க வேண்டும்.

OODBMS அறிமுகமானபோது கற்றுக்கொள்ள சிரமமாக இருந்தது. ஜாவா, சி++ தெரிந்திருந்தால் கற்றுக்கொள்வது சுலபம். அதேபோல், ஆரடிபிஎம்ஸ் தெரியாமல் நேராக ஓஓடிபிஎம்எஸை கற்றுக்கொள்வதும் சிரமம். இவைதவிர, வேறு சில பாதகமான அம்சங்களும் உண்டு. டேட்டாபேஸ் சிஸ்டத்தின் வேகம் குறைவாக இருந்தது. ஆனால், இவையெல்லாம் சிறிய நிறுவனங்களின் அப்ளிகேஷனுக்கு மட்டும்தான் குறையாகத் தெரியும். பெரிய நிறுவனங்களின் அப்ளிகேஷன் பேக் எண்ட் டேட்டாபேஸாக ஓஓடிபிஎம்எஸ் பயன்படுத்தப்பட்டபோது, ஆர்டிபிஎம்ஸைவிட பத்து முதல் 100 மடங்கு வரை வேகம் அதிகமாக இருந்த்து. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் சிறிய அளவிலான அப்ளிகேஷனை பயன்படுத்திக்கொண்டிருந்ததால் பெரிய அளவில் எடுபடவில்லை.

ஒரு மருத்துவமனையை எடுத்துக்கொள்வோம். அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், அவர்களது அப்பாயிண்ட்மெண்ட், நோயாளிகளின் எண்ணிக்கை, பெட், மருந்தகம், ஊழியர்கள் என, இதற்கான டேட்டாபேஸை வடிவமைப்பதில் துல்லியமும், துரிதமும் தேவை. ஏதாவது ஒரு சின்ன பிசகு நேர்ந்தால்கூட விளைவுகள் மோசமானதாக இருந்துவிடும். மருத்துவமனை மாடலை வடிவமைப்பதும், அதை நடைமுறையில் அப்டேட் செய்வதும் எளிதாக இருந்தாக வேண்டும்.

ஆப்ஜெக்ட் மாடலை வடிவமைப்பதில் நிறைய சிக்கல்களும் இருந்தன. திறமையும் அனுபவமுள்ள புரோகிராமர்கள் மட்டுமே ஆப்ஜெக்ட் மாடலை சிறப்பாக வடிவமைக்க முடியும். ரிலேஷனல் மாடலில் உள்ள பல விஷயங்கள் ஆப்ஜெக்ட் மாடலுக்குக் கொண்டுவந்து, அவற்றை மாற்றி வடிவமைப்பதில் சிக்கல் இருந்த்து. நிறைய Query சப்போர்ட் செய்வதிலும் பிரச்னை இருந்தது.

பிஸினஸ் விஷயங்களில் முடிவெடுப்பது, நடப்பதை அறிந்துகொள்வது, நடக்கப்போவதை கணிப்பதெல்லாம் டேட்டாபேஸால் மட்டுமே சாத்தியம். இதற்கு டேட்டாபேஸ் சிஸ்டம் எளிதாக அணுகும்படி இருந்தாக வேண்டும். ஆனால், OODBMS புரோகிராமிங் வட்டாரத்தில் பிரபலமாக இருந்ததே தவிர, மற்றவர்களுக்கு விருப்பமானதாக இல்லை. ஆனாலும், பின்னாளில் non-relational டேட்டாபேஸ் மாடலுக்கு OODBMS அச்சாரமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

(தொடரும்)

Tags : ஆர்டிபிஎம்ஸ் ஓஓடிபிஎம்எஸ் டேட்டாபேஸ் ஐபிஎம் விண்டோஸ் ஆரக்கிள் சாஃப்ட்வேர் database IBM oracle oodbms software query windows

More from the section

24. நாளை என்னும் நாள், நமதே!
23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்!
22. டிஸ்கவரி இன்ஃபர்மேடிக்ஸ்
21. மறைந்து நின்று பார்க்கும் மர்மம்
20. கூகுளாண்டவர் என்னும் எட்டாவது வள்ளல்!