புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

17. குந்தி

By ஹேமா பாலாஜி| Published: 06th September 2018 10:00 AM

 

காரணம் அல்லாது காரியம் இல்லை. புராணங்கள் இதிகாசங்கள் என்று மட்டுமில்லை, நம் இன்றைய காலகட்டத்திலும் கூட காரணங்களைத் தவிர்த்த ஒரு காரியத்தை நாம் அனுபவம் பெற முடியாது. ஒருவருக்கு அநியாயமாக படுவது மற்றவருக்கு நியாயம் ஆகலாம். சிலருக்கு அசூசையாகத் தெரிவது அவர்களுக்கு அவசியமாகலாம். குந்தியைப் பற்றிக் கூறும்முன், இந்தப் பீடிகைகள் அவசியமாகிறது. குந்தி என்றதுமே அநேகருக்கு பாண்டவர்களின் தாய் என்பதைத் தாண்டி கட்டிய கணவன் அல்லாது பஞ்ச பூதங்களால் குழந்தைகளை ஈன்றெடுத்தவள் என்பதும், திருமணத்திற்கு முன்பே சூரியதேவன் மூலம் கர்ணனைப் பெற்றவள் என்பதும் நினைவுக்கு வந்துவிடும்.

குந்தியைக் குறித்து ராஜமாதா என்ற மரியாதையும், ஆறு அதி வீர புத்திரர்களைப் பெற்றும் அவள் அடைந்த துன்பத்துக்காக கொஞ்சம் பச்சாதாபமும் அதே சமயம், அவர்களின் பிறப்பை எண்ணி இதழ் கடையில் சிறிது ஏளனமும் தோன்றாமல் இருக்காது. இத்தனை உணர்ச்சிகளை ஒரு சேர இன்றளவிலும் தோன்ற வைக்கும் குந்தி யார்? எப்படிப்பட்டவள்? சற்றே அலசுவோம்.

யாதவ குல வம்சத்தில் வந்த அரசன் சூரசேனுக்கு மகளாக பிறக்கிறாள் பிருதை. ராஜகுல வாரிசுகள் பிறக்கையில் அழகாகவும் ஆரோக்கியமாகவும் பிறப்பது அதிசயம் இல்லைதான். பிருதை பிறக்கும் போதும் அவ்வாறே இருந்தாள் கூடுதலாக முகத்தில் தேஜஸுடன் ஒருவித அமைதியும் தென்பட்டது. வளர வளர அவையும் அவளுடன் சேர்ந்தே வளர்ந்தன. பிருதையின் சிறுவயதிலேயே சூரசேனனின் உறவினரான குந்திபோஜனுக்கு குழந்தைப்பேறு இல்லை என தத்து கொடுக்கப்பட்டாள். அவள் குந்தி போஜனின் மகளாக குந்தி என பெயர் சூட்டப்பட்டு அருமை பெருமையாக வளர்ந்து வந்தாள்.

அவளுடைய பதின்வயதின் போது அரண்மனைக்கு துர்வாச முனிவர் விஜயம் செய்தார். கோபத்துக்கும் சாபத்துக்கும் பெயர் போன முனிவராயிற்றே. குந்தி போஜனுக்கு அவர் வருகை பெருமையும் மகிழ்ச்சியும் அளித்தாலும் மனதில் மூலையில், தவறு ஏதேனும் நடந்து முனிவர் கோபமடைந்து விடக் கூடாதே என்ற அச்சமும் அதிகளவில் இருந்தது. அதனால் அவரது தேவைகளை தானே நேரில் கேட்டறிந்தான். அவருக்கு வேண்டிய சேவைகளை செய்ய பணியாட்களை ஏவாமல் தன் மகள் குந்தியையே பணித்தான்.

குந்தியும் துர்வாசரின் குணமறிந்து அவர் எள் என்பதற்கு முன் எண்ணெயாய் நின்றாள். அவர் அரண்மனையில் இருந்த காலம் வரை அவருக்கு முகம் கோணாமல் தேவை அறிந்து சேவைகள் செய்தாள். குந்தியின் அர்ப்பணிப்பில் மகிழ்ந்த முனிவர் அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு, 'தாங்களும் என் தந்தையும் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தங்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். தவிர, எதுவும் கேட்காமலேயே எனது தேவைகள் அனைத்தும் நிறைவேறுகின்றன. தங்களிடம் பிரார்த்தித்துப் பெறுவதற்கு எதுவும் இல்லையே!' என்று அச்சிறு பிராயத்திலும் குந்தி பக்குவமாக பதிலளித்தாள். 'தேவைக்கு மேல் சேமிப்பவனை திருடன்' என்கிறது தர்மசாஸ்திரம். இதை, குந்தியும் அறிந்திருந்தாள். ராஜகுமாரியான அவளுக்கு குறிப்பிட்டுக் கேட்கும்படி தேவையும் இருக்கவில்லை.

ஆனால் பிற்காலத்தில் குந்தியின் கணவனுக்கு நேரிடப் போகிற ஆபத்தை ஞானக்கண்ணால் அறிந்து கொண்ட துர்வாசமுனிவர் குந்திக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறார். அந்த மந்திரத்தின்படி, எந்த தேவதையை எண்ணி அழைத்தாலும் அது அவளுக்கு குழந்தை பேற்றைக் கொடுக்கும் என்று சொல்கிறார். இத்தனை சிறிய பிராயத்தில் தனக்கு எதற்கு குழந்தைப் பேறு வரமளிக்கும் மந்திரம் என்று யோசித்தாள் குந்தி. இருப்பினும் முற்றும் உணர்ந்த முனிவர் அருள்வதற்கு ஏதேனும் காரணம் இருக்கும் அதில் தனது நலனும் இருக்கும் என்ற எண்ணத்தில் உபதேசத்தை பெற்றுக் கொள்கிறாள். அது மட்டும் காரணம் இல்லை, கோபத்துக்குப் பெயர் போன துர்வாச முனிவருக்கு மறுபடியும் தன் மறுப்பு எங்கேனும் கோபத்தை வரவழைத்துவிடப் போகிறதே என்ற பயத்திலும் அவரை மகிழ்விக்க, அவரது உபதேசத்தை ஏற்றாள்.

சில காலங்கள் சென்றது. அந்தி சாயும் வேளை சூரியன் தன் பொன் கிரணங்களால் பூமியை தழுவியபடி மறைந்து கொண்டிருந்தான். அரண்மனை உப்பரிகையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குந்தியின் முகத்தில் சூரியனின் இளமஞ்சள் வெயில் படுகிறது. வெளிச்சமும் இருளும் ஒன்றைப் பற்றி மற்றொன்று கலந்திருந்த சந்தியாகாலத்தின் பொன் ஒளியில் மனதை பறிகொடுத்த குந்தி, சூரியனின் அழகில் லயிக்கிறாள். அவளுக்கு அப்போது விளையாட்டாக துர்வாச முனிவர் போதித்த மந்திரம் நினைவுக்கு வந்துவிடுகிறது. தன்னை அறியாமலயே அவள் உதடுகள் மந்திரத்தை உச்சரிக்க, மேற்கில் மறைய வேண்டிய சூரியன் உப்பரிகையில் அவள் முன்னே வந்து நின்று விடுகிறான்.

அவள் மயங்கிய அதே பொன்னொளி வீசிக் கொண்டு தன் முன்னே நின்ற சூரியனைப் பார்த்த குந்தி வாயடைத்து நிற்கிறாள். அவளை அன்புடன் நோக்கிய சூரியன் குந்தி மந்திரத்தால் என்னை அழைத்து விட்டாய். அதன் பலனை உனக்குத் தராமல் என்னால் திரும்ப முடியாது’ என்று சொல்லி தன் அம்சத்தை அவளுள் கருவாக உருவாக்கிச் சென்று விடுகிறான். போகும் முன் ’குந்தி பயப்படாதே, இது நம் சங்கமத்தால் உண்டான கரு இல்லை. மந்திரத்தின் பயனாகவே உதித்த கரு இது. குழந்தை பிறந்ததும் நீ மீண்டும் கன்னியாகி விடுவாய்’ என்று சொல்லிச் செல்கிறான்.

என்னத்தான் ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் பதின்பருவத்தில் மணமாகாமல் கரு சுமப்பதா? ஊர் உலகம் என்ன சொல்லும்? மந்திரம் என்று சொன்னால் யார் நம்புவார்கள்? கற்பு நெறி தவறி நான் தந்திரம் செய்கிறேன் என்றல்லவா நினைப்பார்கள். தன்னால் தன் தந்தைக்கும் குலத்துக்கும் அவப்பெயர் நேருமே எப்படிப்பட்ட மடமையை செய்து விட்டேன் என்று கதறி அழுதாள் குந்தி. அதைக் கண்ட அவளின் அந்தரங்கத் தோழி அவளைத் தேற்றினாள். பின் குந்தி போஜனிடம் இருவரும் நடந்தைதைக் கூறினர். குந்தி போஜன் ஒரு யோசனை செய்தான். அதன்படி குந்திக்கு சுயம்வரம் நடத்தப் போவதாகவும் அதற்கு முன் அவள் 365 நாட்கள் வனத்தில் பூஜை ஒன்றை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தான். பூஜை முடிந்து அவள் அரண்மனை திரும்பும் நாள் சுயம்வரம் நடக்கும் என்றும் அறிவித்து அலங்காரப் பல்லக்கில் சகல வசதிகளுடன் அவளை கானகக் குடிலுக்கு நம்பிக்கையான அந்தரங்க சேடிகள் சிலருடன் அனுப்பி வைத்தான். அங்கு தன் பேறு கால முடிவில் குந்தி கர்ணனைப் பெற்றெடுத்தாள். குழந்தை ஈன்ற மறு நொடியே அவள் சூரியதேவன் கூறியிருந்தபடி தன் கன்னித்தன்மையை பெற்றாள்.  குழந்தையுடன் நாடு திரும்ப முடியாது என்பதால் வேறு வழியின்றி பாதுகாப்பான பேழை ஒன்றில் சூர்ய அம்சத்துடன் சர்வ லட்சணமும் பொருந்திய மகவை அலங்கரித்து, பட்டாடைகள் அணிமணிகளுடன் ஆற்றில் விட்டாள். உயிருடன் தன் குழந்தை எங்காவது யாரிடமாவது சென்று வளரட்டும். அவர்களுக்குப் பரிசாக அந்த ஆபரணங்கள் இருக்கட்டும் என்று மனதை கல்லாக்கிக் கொண்டு குழந்தையைப் பிரிந்து அரண்மனை திரும்பினாள் குந்தி.

எளிதாக இவ்வரிகளையும் காரணங்களையும் அடுக்கிவிட முடிகிறது. ஆனால் உண்மையில் குந்தியின் நிலையும், அச்சமயத்தில் அவளுக்கு ஏற்பட்டிருந்திருக்கும் மன அழுத்தமும் எந்தளவு இருந்திருக்கும் என்பதை வார்த்தைகளில் கூறிவிட இயலாது என்பது தான் உண்மை. நிதானத்தை ஒரு வினாடி இழந்ததால் அது ஏற்படுத்திய நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாத கோழையாய் விதியின் கைப்பாவையாக ஆகிவிட்டாள் குந்தி என்பதே சரி.

கானகத்திலிருந்து அரண்மனை திரும்பியதும் நடந்த சுயம்வரத்தில் பாண்டுவை தன் கணவனாகத் தேர்ந்தெடுக்கிறாள் குந்தி. பாண்டு குந்தியையும் பின் மாத்ரியையும் மணம் புரிகிறான். ஒரு முறை காட்டில் வேட்டைக்குச் சென்ற போது, அவனது அம்பு எதிர்பாராத விதமாக மனைவியுடன் புணர்தலில் ஈடுப்பட்டிருந்த கிண்டாமா என்ற ரிஷியைத் தாக்குகிறது. இதில் ரிஷி இறந்து விடுகிறார். இறக்கும் நிலையில் ரிஷி பாண்டுவை நோக்கி ‘மனைவியுடன் உறவு கொண்டால் உனக்கும் மரணம் நிகழும்’ என்று சாபமிட்டு இறந்துவிடுகிறார். இதனால் வருந்திய பாண்டு தனக்கு வாரிசு கிடைக்காது. இதனால் இந்த அந்தஸ்த்தும், பொறுப்பும் வேண்டாம் என்று சொல்லி நாட்டை விட்டே வெளியேறுகிறான். உடன் குந்தியும் மாத்ரியும் இணைந்து செல்கிறார்கள்.

தனக்கு வாரிசு இல்லை என்று கணவரின் கவலையை போக்க எண்ணிய குந்தி, துர்வாச முனிவர் தனக்கு பகிர்ந்த மந்திரத்தைப் பற்றி விவரிக்கிறாள். அப்பொதுதான் அவளுக்குத் தோன்றுகிறது இந்த இக்கட்டை முன்பே தன் திருஷ்டியில் உணர்ந்து தானோ தனக்கு இந்த வரம் அளிக்கப்பட்டது என்று. அதுதான் காரணம் அல்லாது காரியம் இல்லை என்பது.

அதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டு, வாரிசை பெறும்படி கேட்கிறான். உடன் எமதர்மனை நினைத்து யுதிஷ்டிரரையும், வாயுவை நினைத்து பீமனையும் இந்திரனை நினைத்து அர்ஜுனையும் பெற்றெடுக்கிறாள். தனக்கு கற்பிக்கப்பட்ட மந்திரத்தை மாத்ரியுடன் பகிர, அவளும் நகுலன் சகாதேவன் என இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள்.

ஒரு கட்டத்தில் கிண்டாமாவின் சாபத்தை மறந்து பாண்டு மாத்ரியுடன் உறவு கொள்ள உடனே பாண்டு மரணித்து விடுகிறான். கணவன் இறப்புக்கு தானே காரணமாகிவிட்ட குற்ற உணர்வில் உடன்கட்டை ஏறி மாத்ரியும் இறந்து விடுகிறாள். இப்போது ஐந்து குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு குந்தியைச் சேருகிறது. பாண்டவர்கள் வளர்ந்து அஸ்தினாபுரம் வந்தபின் வாரிசு சண்டை வருகிறது.

குந்தி துரியோதனனால் ஏற்பட்ட அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டாள். மௌனம் கலகத்தை அகற்றும் என்பது தர்மசாஸ்திரத்தின் கூற்று. அரக்கு மாளிகைக்குத் தீயிட்ட துரியோதனனின் சதித் திட்டத்தில் இருந்து புதல்வர்களுடன் தப்பித்த குந்தி, 'ஏகசக்ரா' எனும் நகரில் வசிக்கலானாள். அரசியாக இருந்தாலும் ஒரு வேளை உணவுக்கு பிட்சை வாங்கி உண்ணும் நிலை ஏற்பட்டது குந்திக்கு. அதையும் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

அங்கு வாழ்ந்த மக்கள், பகாசுரன் எனும் அசுரனது கொடுமைகளால் அவதிப்பட்டு வந்தனர். வீட்டுக்கு ஒருவர் என அந்த அசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டும். வண்டி நிறைய உணவுடன் வண்டி ஓட்டிக் கொண்டு வருபவனையும் உணவாக்கிக் கொள்வான் அந்த அசுரன்.

அசுரனை அழித்து அவ்வூர் மக்களைக் காக்க தன் மகன் பீமனை உணவு வண்டியுடன் அனுப்புகிறாள் குந்தி. ஒரு ஷத்திரியத் ஸ்தீரியாக தன் தர்மத்தை நிலை நிறுத்துகிறாள். பீமன் அசுரனை அழித்து மக்களைக் காத்து விடுகிறான். மகாத்மாக்கள் தங்களது துயரத்தை மறந்து, மற்றவர்களது துயரை துடைப்பார்கள் என்று சாஸ்திரம் சொல்லும். குந்தியும் அப்படித்தான். அரச போகமோ, மறுபிறவியற்ற மோட்சமோ வேண்டாம். துன்பப்படுவோரது துயரத்தை நான் ஏற்று, அவர்களை விடுவிக்கும் வாய்ப்புக் கிடைத்தால்... அதுவே எனக்கு மகிழ்ச்சி' என்பது நந்திதேவனின் வாக்கு (‘ப்ராணினாம்... ஆர்த்தினாசனம்’ எனும் வரிகளில் அறிந்து கொள்ளலாம்). இந்த உயரிய பண்பை குந்திதேவியிடமும் காண முடிந்தது.

பாண்டவர்களது அஞ்ஞாதவாச காலத்தில், குந்திதேவி அஸ்தினாபுரத்தில் இருந்தாள். க்ஷத்திரிய தர்மத்தில் நிலைத்து நிற்கும்படி ஸ்ரீகிருஷ்ணர் மூலம் தன் புதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினாள். 'க்ஷத்திரிய குலப்பெண்கள் எதற்காக புதல்வர்களை ஈன்றெடுக்கிறார்களோ... அதை செயல்படுத்தும் தருணம் வந்து விட்டது!' என்று வரப்போகும் போர் குறித்து சூசகமாகத் தெரிவித்தாள் (யதர்த்தம் க்ஷத்ரியா சூதெ தஸ்ய காலோயமாகத:). ஆம், அரசியல் அறிவும் தீர்க்க தரிசனமும் ஒருங்கே குடியிருந்தன குந்தியிடம்.

போர் மூள்கிறது. கௌரவர்களின் பக்கம் இருக்கும் கர்ணன் தன் மகன்தான் என்பதை அறிந்து அவனைக் காணச் செல்கிறாள் குந்தி. அவனிடம் நீயும் பாண்டவர்களுள் ஒருவன் தான் என்றும், ஒரு தாய் வயிற்றில் உதித்த சகோதரர்கள் போரில் அடித்துக் கொள்வது சரியாகாது என்றும் அதனால் தங்கள் பக்கம் வந்து விடும்படி கேட்கிறாள். கர்ணன் அவள் துயரை அறிந்தாலும் தனக்கு ஆதரவாக நின்ற துரியோதனனுக்கு துரோகம் செய்ய மறுக்கிறான்.

தாயின் மனம் நோகா வண்ணம் அவளுக்கு ஒரு வாக்கு கொடுக்கிறான். போரில் தனது இலக்கு அர்ஜுனனே என்றும். போரின் முடிவில் தங்களுக்கு எப்படியும் ஐந்து பிள்ளைகள் இருப்பர். என் தலை விழுந்தால் அர்ஜுனன் இருப்பான் இல்லையேல் நான் உங்கள் மகனாக இருப்பேன் என வாக்களிக்கிறான். எந்த மகன் இறந்தாலும் பெற்ற தாய்க்கு சோகம் தானே.

பாண்டவர்கள் வெற்றி பெற்று அரசாட்சியை ஏற்றாலும் குந்தியால் அரண்மனையில் இருக்க முடியவில்லை. சகோதரர்களாக ஒன்றாக பாண்டவர்களும் கௌரவர்களும் வாழ்ந்திருந்த அரண்மனையில், தன் பிள்ளைகள் 100 பேரையும் இழந்து தவிக்கும் திருதிராஷ்டிரன் மற்றும் காந்தாரியை வனவாசம் போக விட்டுவிட்டு தான் மட்டும் அரண்மனையில் சுகித்திருக்க விரும்பவில்லை குந்தி. அவளும் அவர்களுடன் கானகம் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டாள்.

அவளைத் தடுத்து தங்களுடன் இருக்கச் சொல்லிய பிள்ளைகளிடம்  ‘நீங்கள் க்ஷத்திரிய தர்மத்தில் ஊன்றி இருக்கவும். அறத்தை நிலைநாட்டி நல்லாட்சியை அமைப்பதற்காகவும்தான் இத்தனை சிரமங்களும். எனக்கு அரச போகங்களில் பற்று இல்லை. தவத்தில் ஆழ்ந்து கணவனுடன் இணைய விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டாள்.

பொறுப்பு, பொறுமை, வாய்மை, பிறரது துன்பத்தைத் தீர்க்கத் துடிக்கும் நல்ல மனம், இக்கட்டான தருணங்களையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம், தீர்க்கதரிசனத்துடன் கூடிய அறிவுரைகள் வழங்கும் திறன்... என்று பெண்ணினத்துக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் குந்தி.

இசைக்கலாம்...

Tags : kunthi Mahabharatham Pandavas குந்தி மகாபாரதம்

More from the section

30. சச்சி பௌலோமி
29.  யமி வைவஸ்வதி
28. கார்கி வாசக்னவி
27. மைத்ரேயி
26. ஜாபாலா