செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

13. நன்மைக்கும் தீமைக்குமான  போராட்டம்

By கே.எஸ். இளமதி.| Published: 22nd August 2018 10:00 AM

                

சென்ற வாரத்தில் ‘கண்ணாமூச்சி’ ஆட்டத்தில் உள்ள ‘மறைத்தல்’ தொழிலைப் பற்றிப் பார்த்தோம்.

அதைப் பற்றி நண்பர் புஷ்பராஜிடம் சொன்னபோது அவர் பக்குவமில்லாத சின்னப் பிள்ளைகளுக்குத் தத்துவம் மிக்க விளையாட்டுக்களை ஏன் வைத்தார்கள் முன்னோர்கள் என்று கேட்டார்.

சின்னப் பிள்ளைகளைச் சிறுமைப்படுத்திச் சிந்திக்காதீர்கள் புஷ்பராஜ். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’. ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். சின்னப் பிள்ளைகள் அர்த்தம் தெரியாமல்தான் விளையாடுவார்கள். ஆனால் வளர்ந்த பிறகு அவர்கள் விளையாண்டதற்கெல்லாம் அர்த்தங்களைப் கண்டுபிடிப்பார்கள்.

சின்ன வயதில் ஒளிந்திருப்போரைக் கண்டுபிடித்து விளையாடியிருப்பார்கள். வளர்ந்த பிறகு வாழ்க்கையின் புதிர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கு மாறியிருப்பார்கள்.

அவர்களைப் பால்யப் பருவத்திலேயேப் பக்குவப்படுத்தும் விளையாட்டுக்கள் அவை. அவர்களையும் அறியாமலேயே ஆராய்ந்தறியும் நிலைக்கு அவர்கள் மாறிக்கொள்வார்கள்.

அது போல வளர்ந்த பிறகும் விளையாட்டுக்கள் இருந்தால் நல்லதில்லையா? என்றார் நண்பர் புஷ்பராஜ்.

நல்லதுதான். ஆனால் நம் கண் எதிரே எத்தனையோ நல்லவற்றை வைத்திருக்கிறான் இறைவன். நாம்தான் கண்டும் காணாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றேன்.

புரியவில்லையே என்றார் புஷ்பராஜ்.

அப்போது தொலைவிலிருந்து நீண்ட ‘விசில்’ சத்தம் கேட்டது.

அப்படியே நின்று விட்டேன்.

என்ன நின்றுவிட்டீர்கள்? என்று கேட்டார் நண்பர்.

இந்த விசில் சத்தம் பள்ளியிலிருந்துதானே வருகிறது?

ஆமாம். நம்ம ஊர் அரசுப் பள்ளியில் ‘கூடைப் பந்தாட்டப் போட்டி’ நடந்து கொண்டிருக்கிறது தெரியாதா? என்றார்.

அங்குதான்  உங்கள் கேள்விக்கான பதிலும் காத்திருக்கிறது, வாருங்கள் அங்கு போவோம் என்றேன்.

அங்கு என்ன காத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என்றார்.

வாருங்களேன் போய்த்தான் பார்ப்போமே என்றேன்.

நமக்குப் பள்ளிப் பருவம் போய்விட்டது. விளையாட்டுக் காலங்களும் நம்மிடமிருந்து விடைபெற்று வருடங்கள் ஆகிவிட்டன. இனிமேல் எதற்கு இதெல்லாம். வாருங்கள் எங்காவது ‘பார்க்’கில் போய் உட்கார்ந்திருந்து விட்டு, வீட்டுக்குப் போவோம் என்றார் புஷ்பராஜ்.

பார்க்கில் போய் உட்காருவதை விட பள்ளி மைதானத்தில் போய் விளையாட்டைப் பார்த்தால் ஏதாவது ‘க்ளு’ கிடைக்குமே என்றதும் யோசித்தார் புஷ்பராஜ்.

இருவருமே அரசுப் பள்ளி மைதானத்தைச் சென்றடைந்தோம். சுற்றிலும் கூட்டம் நின்று கொண்டு கைதட்டி ஆரவாரித்து விசிலடித்தபடிப் பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தினரை விலக்கிக் கொண்டு போய் நின்றோம்.

கூடைப் பந்தாட்டப் (பேஸ்கட் பால்) போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

இரண்டு அணிகள் கடும் போட்டியிட்டு விளையாண்டு கொண்டிருந்தன.

ஒரு அணியானது கூடைப் பந்தைத்  தனது  அணியின்  பக்கமாகத் தள்ளிக்கொண்டே போய்த் தாவிப் பறந்து தங்களது கூடைக்குள் போட்டுக்கொண்டிருந்தது.

எதிரணியோ பந்தைப் போட விடாமல் தட்டிப் பறித்துத்  தங்களது அணிப் பக்கமாகத்  தள்ளிக்கொண்டு போய்த் தங்கள்  கூடைக்குள்  போட்டுவிடத் துணிந்துக்கொண்டிருந்தது. 

ஒரே பந்தைக் குறி வைத்து இரண்டு அணியினரும் தத்தமது கூடைகளில் போட்டுக்கொண்டு வெற்றி பெற முனைந்துகொண்டிருந்தார்கள்.

ஒரே பந்து இரண்டு பக்கமும் மாறி மாறித் தள்ளப்படுவதை அனைவரது’இரு விழிப் பந்து’களும் இப்படியும் அப்படியுமாக மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த விளையாட்டுக்குள் ஒரு அர்த்தம் இருந்தாக வேண்டும். அந்த அர்த்தம் புரிகிறதா? என்று கேட்டேன்.

இரண்டு ‘டீம்’ ஆடுது. அதில் திறமையுள்ள ‘டீம்’ ஜெயிக்கும், அவ்வளவுதானே  என்றார்  புஷ்பராஜ்.

அது வெளிப்படையான  காரணம். ஆனால் அதற்குள்ளே இன்னொரு காரணமும் இருக்கிறது.

அது என்ன காரணம்? என்றார் புஷ்பராஜ்.

மனதில் நல்ல எண்ணம், தீய எண்ணம் என்ற இரண்டு வகை எண்ணங்கள் இருக்கின்றன. அந்த இரண்டு எண்ணங்களுக்கும் இடையே சதாகாலமும் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. அதுதான் இங்கே எனக்குப் பந்தாட்டமாகத் தெரிகிறது என்றேன்.

ஓ! அப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதோ?

ஆம். தேவ அசுரப் போராட்டங்களைப் பற்றிப் புராணங்களில் படித்திருப்பீர்களே? மனிதப் பிறப்பின் மறைபொருளே இந்தப் போராட்டம்தான். இரண்டு வகை எண்ணங்கள் மனிதனைப் படாதபாடு படுத்துகின்றன. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்தப் போரில் அசுரர்கள்தான் முதலில் வென்றார்கள். அடுத்த போரில் தேவர்கள் வென்றார்கள். ‘தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும். தர்மம் வெல்லும்’ என்பதுதானே மகாபாரதக் கதையின் மகத்துவம்! அதுதான் அனைத்து விளையாட்டுக்களின்  தாத்பர்யம்!

நன்மைக்கும் தீமைக்கும் ஒரு யுத்தம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அதில் தீமை வெல்வது போல இருக்கும். ஆனால் அது நிலைக்காது. நன்மைதான் இறுதியில் வெல்லும்.

சரி, அதற்கும் இந்த விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம்?

விளையாட்டின் ஒரு அணியை ‘நல்வினை’ என்றும் இன்னொரு அணியைத் ‘தீவினை’ என்றும் எண்ணிப் பாருங்கள், ஒரு பேச்சுக்காக.

புஷ்பராஜ் புருவங்களைச் சுருக்கி விளையாட்டைக் கூர்ந்துப் பார்த்தார்.

புரியவில்லையே? ஒரு பக்கம் ‘கெட்டவர்’களும் இன்னொரு பக்கம் ‘நல்லவர்’களும் ஆடுகிறார்களா?

அப்படிச் சொல்லவில்லை. விளையாடுபவர்களுக்கு அப்படி ஒரு வேஷம் போட்டுப் பாருங்கள் விளங்கும்!

வேஷமா என்ன சொல்கிறீர்கள்?

ஒரு அணி நமக்கு வேண்டாத அணி, அது எதிர்மறை அணி. அதாவதுப் பகை அணி. இன்னொரு அணி நமக்கு வேண்டிய அணி. நேர்மறை அணி. அதாவது நமக்கு நட்பு அணி! எதிர்மறை எண்ணம் நம்மை வீழ்த்தி அதாவது நேர்மறை அணியை வீழ்த்தி தன்னை வெற்றி பெற்ற எண்ணமாக நிரூபிக்க முயலும்.

நல்ல எண்ணமோ நம்மைக் காப்பாற்றி அதாவது, எதிரணியிலிருந்து மீட்டுத் தன்னை வெற்றி பெற்ற எண்ணமாக நிலைநாட்டத்  துடிக்கும்.

இன்னும் சரிவரப் புரியவில்லையே?

சரி, இப்படிச் சொன்னால் புரியும். விளையாட்டு வீரர்கள் என்ற வகையில் இரண்டு அணிகளும் ஒரே அணிதான். அவர்கள் போட்டியிட்டு விளையாடுவதற்காக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். அதாவது விளையாட்டுக்காகப் ‘பொய்’ப் பகைவர்களாகியிருக்கிறார்கள்.

அவர்களை நம் மனதுக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். மனம் என்பது ஒன்றுதான். ஆனால் அந்த மனதுக்குள் இரண்டு வகையான எண்ணங்கள் இருக்கின்றன அல்லவா?

புஷ்பராஜ் புரிந்துவிட்ட மகிழ்ச்சியில் புருவங்களை உயர்த்திப் புன்னகை பூத்தார்.

ஒரே மனதுக்குள் இரண்டு வகைப் போராட்டங்கள்.

கூடைப் பந்து விளையாடுபவர்கள் எல்லோரும் ஒருவரே.  அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற தாக்கத்தில் தங்களுக்குள் கற்பனையாகப் பிரிந்திருக்கிறார்கள். யாரும் நிரந்தரப் பகைவர்கள் இல்லை. ஒருவரை ஒருவர் பகையாளிகளாகப் பாவித்துக்கொண்டு விளையாண்டால்தான் வெற்றி பெற முடியும்.

அதுபோல நல்ல எண்ணத்துக்கும் கெட்ட எண்ணத்துக்கும் நடக்கின்ற போராட்டம்தான் வாழ்க்கை. இதில் மனம் எதைத் தேர்ந்தெடுக்கிறது என்பதுதான் மர்மம்.

சரி, இதில் பந்துகளைத் தூக்கிப் போடும் கூடைகள் எதற்கு?

அதிலும் அர்த்தம் இருக்கிறது புஷ்பராஜ். ஒரு பக்கத்துக் கூடை சொர்க்கம். இன்னொரு பக்கத்துக் கூடை நரகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். தீவினைகள் நம்மை சொர்க்கத்தின் பக்கம் செல்ல விடாமல் தட்டிப் பறித்துக் கொண்டுபோய் நரகத்தில் தள்ளிவிடுகிறது! நல்வினைகள் தீவினைகளிலிருந்து தட்டிப் பறித்துக் கொண்டுபோய் சொர்க்கத்தில் தள்ளிவிடுகிறது. ஒரு நல்ல காரியம் நடந்திருக்கும். உடனே ஒரு கெட்ட காரியம் நடக்கும்.  ஒரு கெட்ட காரியம் நடந்திருக்கும். அடுத்து ஒரு நல்ல காரியம் தேடிவரும். சாதாரணமாக நம் வாழ்க்கையில் இதைப் பார்க்கலாம் புஷ்பராஜ்.

நல்வினையும் தீவினையும் நம்மைப் பந்தாடுகின்றன என்று சொல்லுங்கள்.

ஆமாம்.

விளையாட்டு வினையாகிவிட்டது. இந்த வம்பே வேண்டாம். இத்தனை பேர் பார்க்கிறார்கள். யாராவது உங்களைப் போல இதற்கு அர்த்தம் கற்பிக்கிறார்களா? வாருங்கள் போவோம் என்று கூட்டத்தை விட்டு வெளியேறினார் புஷ்பராஜ். அவரது கையைப் பிடித்து மீண்டும் இழுத்தேன்.

அந்த சமயம் ‘ரெஃப்ரீ’ என்று சொல்லப்படும் நடுவர் நீண்ட விசில் கொடுத்தார்.

ஏன் போகிறீர்கள். வாழ்க்கையில் நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்தால் வெற்றிகரமாக அமையும். கெட்டதைத் தேர்ந்தெடுத்தால் கெட்டுப் போய் நாசமாகிவிடும்!

மைதானத்துக்கு நடுவர் ரெஃப்ரீ’. மனதுக்கு ரெஃப்ரீ’ அறிவு!

அறிவுதான் நீ தப்பானதை நினைக்கிறாய். நீ நல்லதை  நினைக்கிறாய் என்று மனதுக்கு அறிவுறுத்தும். யாரோ தப்பாக விளையாண்டிருக்கிறார்கள். அதனால்தான் விசில் அடித்திருக்கிறார் ரெஃப்ரி என்றேன்.

பிறகுதான் மீண்டும் விளையாட்டைப் பார்க்க முன்வந்தார் புஷ்பராஜ்.

விளையாட்டு இறுதிக் கட்டத்தை நோக்கி மும்முரமாகப் போய்க் கொண்டிருந்தது. உச்ச கட்டத்தில் ஒரு அணி அதிகப் பந்துகளைப் போட்டு வெற்றி பெற்றது.

நடுவர் மிக உரத்த விசிலை எழுப்பி விளையாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். பயங்கரக் கரகோசத்துடன் விளையாட்டும் முடிவடைந்தது.

ஒரு அணி வென்றது!

ஒரு அணி தோற்றது!

இரு அணியினரும் விளையாட்டு மைதானத்திற்கு நடுவாக வந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கை குலுக்கிக்கொண்டனர். சிரித்துப் பேசியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

பாருங்கள் புஷ்பராஜ், இருவரும் பகைவர்கள் போல விளையாண்டார்கள். ஆனால் நண்பர்களாகி ஒன்றாக நடக்கிறார்கள்.  உண்மையில் இவர்கள்  நண்பர்கள்தான். மனிதனுக்கு எண்ணங்களும் வினைகளும் ஒன்றுதான். அவை நல்லதாகவும் கெட்டதாகவும் பிரிந்து செயல்பட்டு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

முன்வினைகள் நல்ல எண்ணங்களையும் நல்விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

அதே முன்வினைகள்தான் தீய எண்ணங்களையும் தீயவிளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

தீமைகளைத் தீமை என்று உணர்ந்து நன்மைகளை மட்டும் உறுதியோடு பற்றிக்கொண்டு தீமைகளை எதிர்த்து நின்றால் வாழ்க்கை வளம் நலமாக அமையும்.

ஆனால் மனம் தீமைகளை நன்மைகளாகவும், நன்மைகளைத் தீமைகளாகவும் கருதுவதால்தான் மனிதனுக்குச் சோதனைகள் உண்டாகின்றன. எது நல்லது எது தீயது என்று புரியாமல் குழப்பத்தின் எல்லைக்கே போய்விடுகிறான்.

விளைவுகளை அறிந்து விளையாட்டை நடத்தினால் வினைகளிடமிருந்து  தப்பிக்கலாம்.

புரியவில்லையே என்றார் புஷ்பராஜ்.

மனதில் ஏற்படும் நல்ல கெட்ட எண்ணங்களின் போராட்டம் மனிதனை நல்லவனாக மாற்றிடத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எதிரணிகளை எதிரிகளாகப் பாவிப்பது விளையாட்டுக்களுக்கு அவசியம். 

தீய எண்ணங்களை வேண்டாதவைகளாகப் பார்ப்பதும் வாழ்க்கைக்கு அவசியம்.

சும்மா இருப்பவனைச் சீண்டி விடுவோர் இல்லையா? ரோஷம் வந்துவிட்டால் எத்தனை பெரிய கோழையும் வீரனாகிவிடுவான் பாருங்கள்.

அந்தச் சீண்டுதலை ஏற்படுத்துவதுதான் தீமைகளின் தத்துவம்.

அதனால்தான் எதிரிகளை ஒரு வகையில் குருவாகச் சொன்னார்கள் முன்னோர்கள். எதிரி இல்லாதவன் முன்னேற்றமில்லாதவன்.

தீமைக்கு  நன்மை எப்படிப்பட்டது என்பதைப் புரிய வைக்கவேண்டும். நன்மைக்குக் தீமை எத்தனைக் கொடியது என்பதையும் புரிய வைத்தாக வேண்டும். அதுதுõன் அறிவின் வேலை.

விளையாட்டுப் போட்டிகளில் நடுவர் (ரெஃப்ரீ) இருப்பதால் துணிந்து விளையாடுவார்கள். விளையாட்டு வேகத்திலோ, அறியாமையிலோ, அல்லது உள்ளுக்குள் உண்மையான பகை உணர்வு கொண்டவர்களோ தப்பாக விளையாடியிருக்கக் கூடும். அதனைக் கூர்ந்து கண்ணுற்றுக் கண்டுபிடித்து தீர்ப்பளிப்பது நடுவரின் கடமை.

நன்மை தீமைகளுக்கான விளையாட்டுக்களில் நமக்கு நடுநாயகமாக நின்று ஆதரித்து வழிகாட்டுவது நம் அறிவாகும். அதுவே ஞானம்!

அதனால்தான் அறிவைத் துணையாகக் கொண்டனர் நம் முன்னோர்கள். அறிவு இறுதிவரை நம்மைப் பாதுகாக்கும் ஆயுதம்.

போர்களில் கேடயம் வைத்துக்கொண்டுச் சண்டையிடுவார்கள். எதிராளியின் வாள் நம் கேடயத்தைத்தான் தாக்கும். கேடயம் நம்மைத் தாக்க விடாது. அப்படி நம்மைக் தற்காத்துக் கையாளுவது நம்முடைய அறிவாகும்.

திருச்செந்தூரில் ‘சூரசம்ஹார’ விழா நடக்கிறது. கந்தர் சஷ்டியில் நடக்கும் விழாவில் சூரன் இறைவனை எதிர்த்து வரும்போது அவனை தனது வாள் கொண்டுத் தாக்கி வீழ்த்துவார் முருகன். அவன் மீண்டும் மீண்டும் எழுந்து பல்வேறு வடிவங்களில் போராடி வருவான். அத்தனையிலும் முருகனின் வேல் அவனைச் சளைக்காமல் பதம் பார்த்து வீழ்த்தும்!

இறுதியில் சரணாகதியாகும் சூரன் முருகனின் தாழ்பணிந்து அவனுக்குச் சேவலும் மயிலுமாக மாறிச் சேவை புரிவான்!

தீயவர்களும் நல்லவர்களிடம் ஒரு நாள் சரணடைந்தே தீர்வார்கள் என்ற தத்துவம்தான் அதில் மறைந்திருக்கிறது என்றதும் துணிவுடன் நிமிர்ந்து நின்றார் புஷ்பராஜ்.

சூரபதுமன் எந்த ஊர்க்காரன்? என்றார் புஷ்பராஜ்.

ஏன்?

அவன் பாருங்கள் எத்தனை மோசமானவன், அவன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்.

அவன் ஊர் இந்த ஊர்தான் என்றதும் துள்ளிக்கொண்டு போய்த் தள்ளி நின்றார் புஷ்பராஜ்.

பயந்துவிட்டீர்களா?

ஆமாம். அந்தப் பயங்கரவாதியின் ஊருக்குள் நின்றுகொண்டு இத்தனை சத்தம்போட்டு அவனது வீழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறீர்களே என்றார் புஷ்பராஜ்.

இந்த ஊர் மட்டுமல்ல, மனிதன் வாழும் எந்த ஊரும் சூரபதுமன் வாழும் ஊர்தான்! எல்லா ஊர்களிலும் அவன் உண்டு.

சூரபதுமன் முருகனால் கொல்லப்பட்டுவிட்டான் என்பதுதானே கதை?

இல்லை, அவன் மாமரமாகிப் பிளக்கப்பட்டு முருகனுக்குச் சேவலும் மயிலுமாக மாறிச் சேவை செய்துகொண்டிருக்கிறான்.

அந்தச் சூரபதுமன் இன்றும் ‘ஆணவம்’ என்ற அறியாமையாக, ‘அகம்பாவம்’ என்ற  இருள் வடிவாக நம் ஒவ்வொருக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனைப் போரிட்டு வென்ற ‘அறிவுச் சுடர்’ என்ற முருகக் கடவுளும் நமக்குள்ளேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த முருகன் இருக்க பயம் ஏன் புஷ்பராஜ்? என்றேன்.

‘யாமிருக்கப் பயம் ஏன்?’ என்று இருவருமே ஒரு சேரச் சொன்னபோது இருவருக்குள்ளிருந்தும் இறைவன் முருகன் பேசுவதை உணர்ந்தோம்!

(ஞானம் பெருகும்)

Tags : Gnana yoga ஞான யோகம் மறைபொருள்

More from the section

38. சரணாகதி
37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?
36. குடும்பத்தில் சீரியல் பாதிப்பா?
35. கள்ளக் காதலி
34 . காதல் திருமணங்கள்