செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

30. வேள்விச் சாம்பல்

By கே.எஸ். இளமதி.| Published: 19th December 2018 10:00 AM

                     

'தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும், தர்மம் வெல்லும்'.அந்தத் தர்மம்தான் இன்று என்னை ஆண்டுகொண்டிருக்கிறது! என்று பார்த்தோம்.

அதர்மத்தால் அடியேன் சூரையாடப்பட்டேன். 

ஊரில் குடியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுச் சென்னை வந்தேன். கடை வைத்திருந்தோர் அதனைப் பறிக்கும் நோக்குடன் வாடகைப் பணம்  தராமல் இழுத்தடித்தார்கள். லட்சக்கணக்கில் செலவழித்து மீண்டும் கட்டித் தர வேண்டும். இல்லாவிட்டால் மழை நீரால் கடைப்பொருட்கள் கெடுகின்றன என்று வழக்குத் தொடருவோம், நஷ்ட ஈட்டையும் கட்ட நேரிடும் என்று மிரட்டினார்கள்.

வேறுவழியின்றி வீட்டை அவர்களுக்கே விற்கச் சம்மதித்தேன். 

அவர்கள் என்னை மிரட்டவில்லை. என்னைப் படைத்தவனைத்தான் மிரட்டியிருக்கிறார்கள் என்பதைப் பின்னர் கண்டுகொண்டேன்.

அந்த சமயம் எனது நெருக்கமான நண்பர் ஒருவர் சொன்னார். 

சொந்த வீட்டை விற்காதே. பிரித்துப் பிரித்து நான்கைந்து கடைகளும் வீடுகளுமாகக் கட்டி வாடகைக்கு விட்டால் கால்களை ஆட்டிக்கொண்டே தின்னலாம் என்றார்.

சொல்லும் போதே கால்களை ஆட்டிக் கொண்டிருந்தார்!

யாருக்கு ஆலோசனை சொன்னாரோ!

பிறகு? என்றேன்.

பகல் தூக்கம் போடலாம். இரவுத் தூக்கத்தை விடச் சுகமானது. எல்லோருக்கும் கிடைக்காது. எவருக்கும் பயப்படத் தேவையில்லை. இந்த மாதிரி வாழ்க்கை எவருக்குக் கிடைக்கும் என்றார்.

நான் ஆகாயத்தையே பார்த்தேன்.

என்ன மேலே பார்க்கிறாய் என்றார் நண்பர்.

நான் இதற்கா பிறந்தேன் இறைவா என்று கேட்கிறேன் என்றேன்.

அதற்காகத்தான் ஊருக்கு நடுவே அற்புதமான சொந்த வீட்டைக் கொடுத்திருக்கிறான் ஆண்டவன், அவனிடமே போய் இப்படிக் கேட்டால் கோபிக்கமாட்டானா? என்றார்.

உட்கார்ந்து தின்றால் என்ன கிடைக்கும்? என்றேன்.

அதைவிட வேறு என்ன வேண்டும், அருமை தெரியாதவனே? அவனவன் வீடு வாசல் இல்லாமல் அடுத்தவனிடம் போய்க் கைகட்டி அடிமை வேலை பார்க்கிறான். நிறைய வாடகை வருவதால் நகை நட்டுக்களுடன் பொண்ணு கிடைக்கும். கல்யாணம் பண்ணிக்கொண்டு பிள்ளை குட்டிகளோடு ஜாலியாக இருக்கலாமே என்றார்.

அதெல்லாம் சரி. இறையனுபவம் கிடைக்குமா? 

உலகம் தெரியாத குறைமதி நீ. காசு பணம்தான்டா கடவுள்.  பணம் இல்லாவிட்டால் எவனுமே மதிக்க மாட்டான். கடவுளே கூட மதிக்கமாட்டான்டா என்றார்.

நான் யோசித்தேன்.

நண்பன் எழுந்து சென்று தனது கைகளால் 'முழம் போட்டு' எனது வீட்டை அளந்து பார்த்து, எத்தனை வீடுகள், எத்தனைக் கடைகள் வரும், அதில் எவ்வளவு வாடகைகள் வரும் என்று  குத்து மதிப்பாகச் சொன்னபோது எனக்குத் தலை சுற்றியது!

அன்றைக்குக் குடும்பம் நடத்த மாதம் ஐயாயிரம் ரூபாய் இருந்தால் போதும். 

இருபதாயிரம் ரூபாய் வாடகை  வரும் என்று கணக்குச் சொன்னார்.

அவ்வளவு  பணத்தையும் என்ன செய்வது?

வட்டிக்கு விடலாமே! 

வட்டிப் பணத்தை வாங்கி என்ன செய்வது?.

அப்போது ஏப்பம் விட்டார்.

அவரது சுவாசத்தில் முதல் நாள் அருந்தியே மதுவின் நெடி வந்தது. 

எதையோ சொல்ல வந்தவர் மென்று விழுங்கினார்.

உலகத்தை அனுபவிக்க எத்தனையோ மார்க்கம் இருக்கிறது.  உன்னிடம் சில யோசனைகளைச் சொன்னால் கோபிப்பாய் என்றார்.

சும்மா சொல்லும் என்றேன்.

ஜாலியாக 'டூர்' போகலாம் என்றார்.

அவர் மதுவருந்துபவர்.  அவ்வப்போது வேசிப் பிரவேசமுண்டு. அதற்கு மேல் கேரளா, குமுளிக்குச் சென்று “காபரே நடன”ங்களைக்  கண்டு வரும் வழக்கமும் உண்டு!

அவரும் வாடகை வாங்கி உண்பவர்.

'உன் நண்பன் யார் என்று சொல். நீ யார்' என்று சொல்கிறேன் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. 

குந்தியின் கட்சி

துணிந்து வீட்டை விற்றுவிட்டுச் சென்னை க்குப் புலம் பெயர்ந்தேன்.

கொண்டு வந்த பணத்தைக் சென்னைக் கும்பல் நம்பிக்கையளித்து சூரையாடிவிட்டது. நடுரோட்டுக்கு வந்த பிறகுதான் உண்மை தெரிந்தது.

என்னைப் பற்றியத் தேடுதலும் ஆரம்பித்தது.

'நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையான் ஆளப்படும்' என்ற குறள் நெறியில் நடை பயின்றேன்.

மனிதன் மேம்படுவதற்குக் கஷ்டப்பட்டாக வேண்டும். 

மனிதன் மானிதனாவதற்கு மிகுந்த கஷ்டப்பட்டாக வேண்டும். 

நன்றாகச் சம்பாதித்து சுகபோகமாக வாழ்வதே சிறப்பு. அதை விட்டுவிட்டு 'மாமனிதன்' ஆகிறேன் பேர்வழி  என்று பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் என்பார்கள்.

மாமனிதன் ஆனவனே  நிம்மதியும் சந்தோஷமும் அடைகிறான். அவனே உலகை வென்று இறைநிலை பெற்று, பிறவாப் பெறுநிலை பெறுகிறான்!

சுகபோகங்களை வரிந்து கட்டிக்கொண்டு வாங்குவோர் நோய் நொடிகளையும் வரிந்து கட்டிக்கொண்டு வாங்கி முடிக்கிறார்கள்!

குந்தி தேவியிடம் என்ன  வரம் வேண்டும் என்று கடவுள் கேட்டபோது, தொடர்ந்து கஷ்டங்களையேக் கொடு என்றாளாம்.

எதற்காக என்று கேட்டாராம் கடவுள்.

கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தால்தான் உன் நினைவிலேயே இருக்க முடியும். உன்னை என்னுள் வைத்துக் கொண்டிருப்பதை  விட உயர்ந்த வரம் வேறு என்ன இருக்க  முடியும் என்றாளாம்.  

எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் “கட்சி மாறி”னேன்.

குந்தியின் கட்சிக்கு நானும் தாவினேன்!

வெயில் மழையைக் கண்டால் வெளிவரத் தயங்குவோர் சொந் த வீட்டுக்காரர்களாகவே இருப்பார்கள். பருவ மாறுபாடுகளின் வேதனைகளைத் தாங்கமாட்டார்கள்.  நினைத்தால் லீவு போடுவார்கள். தட்டிக் கேட்டால் வேலையையே வேண்டாம் என்று விட்டு விடுவார்கள், வாடகைதான் வருகிறதே!

எத்தனை மழை பொழிந்தாலும்,  வெயலடித்தாலும் வேலைக்குப் போனால்தான் பசியாறும் என்ற நிலையில் இயற்கையின் பருவ மாற்றங்களைளத் துச்சமாக நினைத்து இரவு பகல் பாராமல் பாடுபடச் செல்பவோர் உண்டு!

நானும் அவர்களில் ஒருவனாக வேலைக்குப் போக ஆரம்பித்தேன். அப்போதுதான் வாழ்க்கையின் உண்மைகளை உய்த்து உணர ஆரம்பித்தேன்.

காலம் கடந்தது-

வீட்டைக் குறைந்த விலைக்கு  அடித்து வாங்கியவர்கள் அடித்து விரட்டாத குறையாக  ஓடிவிட்டனர் என்று கேள்விபட்டேன். வேறு யாருக்கோ விட்டுவிட்டனர் என்றனார்.
 
'தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும். தர்மம் வெல்லும்,' வென்றது.

எனக்கு யோசனை சொன்ன  நண்பரும் “கால்களை ஆட்டிக்கொண்டே” தின்ற காரணத்தால் கடனாளியாகி வீட்டையே விற்றுவிட்டார் என்றும் கேள்வி!

அனுபவத்தைவிடப் பெரிய சொத்து வேறில்லை!

சுகபோகத்தால் சொத்துக்களும் ஆரோக்கியமும் சேர்ந்தே அழியும்.

கஷ்ட நஷ்டங்களால்தான் மனிதன் மாமனிதனாக மாற முடியும். 

நோய்களைக் கண்டு அஞ்சுகிறான் மனிதன்.

நோய்கள் “முன்வினை” வாழ்க்கை முறையால் வருகிறது.

நோய்கள் ஆசைகளால் மட்டும்தான் வருகிறதா என்றார் அக்பர்.

ஆசைகளைத் துறந்து வாழும் ஞானிகளுக்கும் நோய்கள் வரும். அதுவும் முன்வினைத் தொடர்ச்சிதான்.

மகரிஷி ரமணருக்கும் புற்றுநோய் வந்ததே!

அப்புற்று நோய்க்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மயக்க மருந்தைக் கொடுக்க முன்வந்தனர் மருத்துவர்கள். அதை அவர் மறுத்துவிட்டார். 

'உடல் எனது இல்லை, கை கால்களும் எனது இல்லை. இந்தச் (தனக்கு) சொந்தமில்லாத  ஜடத்துக்கு நடக்கும் சிசிக்சைக்கு மயக்க மருந்து எதற்கு? ' என்று கேட்டாராம். 

நகத்தை வெட்டும்போது கொஞ்சம் ஒட்ட வெட்டி விட்டாலே என்ன பாடுபடுகிறோம். ஆனால் ரமணர்?

கத்தியால் கட்டியை அகற்றும்போது மருத்துவர்களோடு மருத்துவராகச் சேர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தாராம்!

இது யாரால் முடியும்?

உடற் பற்றை நீக்கிக் கொண்டதால் ஏற்பட்ட  மனோபாலம்,  பண பலத்தால் வருமா?

யோசிக்க வேண்டும்.

சீமான்களுக்கும்  அறுவைச் சிசிக்சை நடக்கிறது.

மயக்க மருந்து இல்லாமல் தொட விடுவார்களா?

இப்போது சொல்லுங்கள்.

உலகில் எது பெரியது, பண பலமா? மன பலமா?

முதுகில் வந்த கட்டி

அரும்பாக்கம் 'வெஸ்ட் காலேஜ் ரோடு' வீட்டு உரிமையாளரின் சகோதரி பெயர் கண்மணியம்மாள். அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில்  ஒரு கட்டி தோன்றியது. அது மிகப் பெரியதாக உருவாகிப் படுக்கவே முடியாமல் அல்லல்பட்டார்.

மருத்துவர்களிடம் காட்டியபோது அதனை  'உயிர்க்கொல்லி நோய்' என்று கூறி உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும், அல்லது உயிர்க்கே ஆபத்தாகிவிடும் என்றார்கள். 

அவர் எங்கள் யோகா குடும்பத்தின் மீது மிகுந்த பக்தி வைத்திருந்தவர். இப்பிரச்னையால் அவர் துன்புறுகிறார் என்று கேள்விப்பட்ட போது அவருக்கு நம்மால் உதவ முடியவில்லையே என்று வருந்தினேன்.

உறுதியான நல்ல எண்ணத்õõடு எதைச் செய்தாலும் அது வெற்றியாகவே முடியும்!

மதுரையில் ஞானசம்பந்தர் மடப்பள்ளிச் சாம்பலை எடுத்துத்தானே மன்னனுக்குப் பூசி வெப்பு நோயைக் குணமாக்கினார்!

நான் அன்றாடம் 'அக்னி ஹோத்ரா' செய்யும் வழக்கமுடையவன். 

எந்த உபாதைகளுக்கும் வெண்ணீற்றுச் சாம்பலையே பிரயோகிப்பவன்.

'அக்னி ஹோத்ரா' சாம்பலில் அதிமருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளன என்ற உண்மை  அடியேனுக்குத் தெரியும்.

சுத்தமான  பசுஞ்சாணத்தில் நெருப்பு மூட்டி, முனை உடையாதச் சிவப்பு அரிசிகளை, சுத்தமானப் பசு நெய்யில் துவைத்து, நெருப்பில் இட்டு வளர்ப்பதே “அக்னி ஹோத்ரா”வாகும். 

சாணம்,நெய், அரிசி இம்மூன்றும் ஒன்று சேர்ந்து எரியும்போது வெளிப்படும் புகையில் அதீத மருத்துவக் குணங்கள் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

'போபால் விஷ வாயு' தாக்கத்தால் (1984-ஆம் ஆண்டு) ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து விழுந்த போது 'அக்னி ஹோத்ரா' செய்த இரண்டே குடும்பங்கள் மட்டும் உயிர் தப்பின என்பதை அறிந்திருப்பீர்கள்.

வேள்விப் புகையில்  உள்ள மருத்துவ குணம் நச்சுத் தன்மைகளை அகற்றும் வல்லமை உள்ளது.

காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றும்போது, சுவாசிப்போரின் உடல் நச்சுக்களை அகற்றாதா!

அச்சாம்பலை வாயில் போட்டுச் சுவைக்கலாம், உடலிலும் பூசிக் கொள்ளலாம். அத்தனையும் கண்கண்ட மருந்து.. மருந்து.. மருந்து!

அந்தச் சாம்பலைக் கொஞ்சம் எடுத்துக் காகிதத்தில் மடித்து, எனது மனைவியிடம் கொடுத்து கண்மணி அம்மாளின் கட்டியுள்ள முதுகில் பூசிவிட்டுவா என்று அனுப்பி வைத்தேன்.

மனைவியும் சென்று பூசிவிட்டு வந்தார்.

எதோ நம்மால் ஆனதை முயற்சிப்போமே  என்றுதான் அதனை மேற்கெண்டோம்.

என்ன ஆச்சரியம்!

அறுவைச் சிகிச்சையின் கத்திகளை  எதிர் நோக்கியிருந்த கட்டியானது வெட்டாமலே வெட்டி எடுத்தாற்போல  முற்றிலுமாய்க்  கரைந்துபோனது!

அந்த வேள்விச் சாம்பலைப் பூசிய பிறகுதான் கட்டி கரைந்து குணமானது என்று கூறி வீடு தேடி வந்து நன்றி சொல்லிவிட்டுச் சென்றார் கண்மணியம்மாள்!

என்ன முயற்சித்தாலும் குணமாகாத “கொடியக் கர்ம நோய்களும்” இருக்கலாம். 

அவற்றுக்கு எந்த முயற்சியும் எடுக்காமலேக் குணமாகும் இறையருள் இன்னொரு பக்கம் உண்டு! 

அந்த மர்மம் என்ன வென்று சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தெரியும்.

எனவே, நன்மை தீமை என்று சொல்லப்படும்போது  நல்லதை (கணிண்டிtடிதிஞு) முன் வைத்து, கெட்டதைப் (Nஞுஞ்ச்tடிதிஞு) பின் வைத்துக் கூறுகிறோம்.

'உடலுக்கு நோய் என்றும் - மனதுக்கு நோய் என்றும் சொல்லப்படுவதிலும் உடலாகிய நல்ல விஷயத்துக்கு நோயாகிய கெட்ட விஷயம் வருகிறது.

*

நோய் வந்த பிறகுதான் அவன் நோயாளி.

அதுவரை?
 
அவன் சுகவாசி.

'சுகம்' என்பதே முதலில்.

அப்புறம் வந்ததுதான் 'அசுககம்'! அதை மறந்துவிடாதீர்கள்.

சௌகரியம்தான் முன்னது. 

அசௌகரியம் பின்னது.

வெற்றி முன்னது.

தோல்வி பின்னது.

வெற்றி மறைமுகமாக இருக்கிறது. 

அதற்கு முயலும்போது தோல்வி வெளிப்படுகிறது. 

தோல்வியால்தான் வெற்றியானது வளர்க்கப்படுகிறது.

தோல்விகள்தான்  வெற்றிகளுக்கான படிக்கட்டுகள்  என்றால் சுகத்திற்கு அசுகங்கள்தானே ஆதாரமாக இருக்க முடியும்!

இந்தக்  கண்ணோட்டத்தில்  எல்லா நிறை குறைகளையும் நோட்டமிட்டுப் பாருங்கள்.

அப்படிப் பார்த்தால் மனிதன் உடல், மனம் சார்ந்த எப்படிப்பட்ட நோய்களையும் குணமாக்கிக் கொள்ள முடியும் என்ற மாபெரும் உண்மையை உணரலாம். 

ஆனால் அந்த உண்மையை உணர இறைஞானம் வேண்டும்.

இறை பக்தியல்ல-

அது எல்லோரிடமும் இருப்பது.

இறைஞானம் என்பது பக்திக்கும் அப்பாற்பட்ட உயர்நிலை!

(ஞானம் பெருகும்)

Tags : gnana yoga yoga yoga for health nalam சாம்பல் ஞானயோகம் நோய்

More from the section

38. சரணாகதி
37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?
36. குடும்பத்தில் சீரியல் பாதிப்பா?
35. கள்ளக் காதலி
34 . காதல் திருமணங்கள்