திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

26. காகத்தின் வாரிசு குயில்

By கே.எஸ். இளமதி.| Published: 21st November 2018 10:00 AM

கண்மூடித்தனமான பக்தியால் கடவுளின் கண்களையே மூடிவிடக் கூடாது. 'இமைப் பொழுதும் நீங்காத' இறைவன் இமைக்காமல் நம்மைக் காப்பவன் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று சென்ற வாரம் பார்த்தோம்.

கடவுளைப் புறக்கண்களால் தேடிக் கொண்டே இருந்துவிட்டு அகக் கண்களால் காணாமலேயே போய்ச் சேர்ந்தவர்கள் கோடி கோடி.

இறைவனைத் தேடுவது எது என்ற உணர்வு இருந்தால் அதுவே நம்மை ஞானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.

தேடுவதை தேடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

திருவண்ணாமலை ரமணாச்ரமத்திற்குச் செல்ல வேண்டும்.

அவர் 'நான் எனது' சார்ந்த அனைத்து உறவுகளையும் ஆணிவேரோடு விலக்கி விட்டுத்தான்  அங்கு வந்து அமர்ந்திருக்கிறார்.

இந்த உலகம் எனதில்லை, பெற்றோர் எனதில்லை,  உற்றார் உறவினர் எனதில்லை,  உடன் பிறந்தோர் எனதில்லை, பள்ளி எனதில்லை, கல்வி எனதில்லை, பணி எனதில்லை, மனைவி/கணவன் மக்கள் எனதில்லை, உடல் எனதில்லை, உள்ளமும் எனதில்லை, ஆசை நிராசைகள் எனதில்லை,  வாழ்க்கை எனதில்லை, அனுபவங்கள்  எனதில்லை.. ..எனதில்லை.. .. என்று எல்லாவற்றையுமே விலக்கிக் கொண்டு வாருங்கள்.

எல்லாம் விலகியும் கூட 'விலக்க முடியாத' எல்லை ஒன்று வரும்!

அந்த எல்லையை விலக்க முடியாது. அதுதான் அந்த 'எனதாகிய நான்'. அல்லது 'நானாகிய எனது'.

இவை எல்லாவற்றையும் நீக்கிய நிலையே முழுமையான நிர்வாணம் ஆகும்.

இந்த நிர்வாணம் ஒருவகை மனோநிலை. அதாவது மோனம் அல்லது மூச்சோடாத் தவம். சுவாசம் இழையோடுவதே தெரியாத நிலையில் நிட்டையில் போய் நிலைத்துவிடும் உயர்நிலை!

மனம் சலித்துப் போவது எல்லோருக்குமே பொதுவான இயல்பு.

மிகப் பெரிய நெருக்கடிகள் வந்து நம்மை அசைய விடாமல் பீடித்திருக்கும் போது நமக்குத் துணை இந்த நிர்வாண மனோநிலைதான்!

அது போன்ற தருணங்களில் எதுவுமே வேண்டாம் என்று உங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு இருந்து பாருங்கள்.

தனி அறையில் போய்க் கண்களை மூடிக் கொண்டு பேசாமல் உட்கார்ந்து விடுங்கள்.

எதுவுமே வேண்டாம்... வேண்டாம்..வேண்டாம்.. வேண்டாம்.. என்று நினைவால் உதறித் தள்ளிக் கொண்டே வாருங்கள்.

உங்கள் எதிரிலும் நினைவிலும் இருக்கும் உயிரினங்கள் மற்றும் பொருட்களை எல்லாம் “வேண்டவே வேண்டாம்” என்று ஒட்டுமொத்தமாக விலக்கித் தள்ளிவிடுங்கள்.

ஆட்டிப் படைக்கும் கவலைகளை, கவலைப்படும் மனதை, கவலைகளைத் தோற்றுவிக்கும் எண்ணங்களை, எண்ணங்களுக்கு மூலமானச் சம்பவங்களை, சம்பவங்களுக்கு மூலமான பிறப்பை, பிறப்புக்கு மூலமான பிறப்பை, பிறப்பைத் தந்த பெற்றோரை, பெற்றோரைத் தந்தப் பெற்றாரை .. என்று எல்லாவற்றையும்  தள்ளிக் கொண்டே சென்று கொண்டிருங்கள்.

கவலைகளுக்குச் சாட்சியே இந்தப் பிறவிதான்!  இதற்குக் காரணமான 'நான் எனது' என்ற உணர்வுகளையும் விட்டுத் தள்ளுங்கள்.

அனைத்துக்கும் ஆதாரமான இந்த உயிரையும் வேண்டாம் என்று துணிந்து விட்டுத் தள்ளுங்கள்.

முடிவுகளின் முடிவில் 'முடியாத ஒன்று' இருக்கும்! அதை உங்களால் முடிவுக்குக் கொண்டு வர முடியாது. 

அதுவே முடிவில்லாத முடிவு!

அதற்கு மேல் வேண்டாம் என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்ற  ஏகாந்த வெளியில் மிதப்பீர்கள்!

அதிலேயே உங்களை லயிக்கச் செய்து விடுங்கள்.

அதிலேயே உங்களைக் கரைத்துக்கொண்டு விடுங்கள்.

ஒருவகையில்-, அதிலேயே தீர்ந்து போய்விடுங்கள். இத்தகையத் தொடர் எண்ணத்தால், தொடர் கற்பனையால் இருந்தும் இல்லாமல் போய்விடுங்கள்!

தீர்ந்து போன கவலைகளுக்குள்ளிருந்து  தீர்வளிக்கும் புதிய எண்ணம் ஒன்று அதன் பின்னதாக  உதயமாகும். அதை உங்களால் விலக்க முடியாது. அதுவே உங்களுக்கான அந்தரங்க அனுபவம், அதுவே உங்களுக்கான பிரத்யேக அனுபவம், அதுவே உங்களுக்கான  ஆத்மார்த்தமான அரும்பரிசு!

அந்த நிலை முற்றிலும் அன்பு வெளியாக இருப்பதை உணர்வீர்கள்!

உயிரின் இயல்பை உணர்ந்துவிட்டால் அதுவே அன்பு.

அன்பை வேண்டாம் என்றால் அது நம்மை விட்டுப் போய்விடுமா?

உயிரை வேண்டாம் என்றால் அதுவும் நம்மை விட்டுப் போய்விடுமா?

அன்பும் உயிரும் வேறுவேறல்ல. இரண்டும் ஒன்றே .இரண்டும் நிலையாக  நிலைத்திருக்கும் பொருள்.

அன்பும் உயிரும் படைக்கப்பட்டவை அல்ல.

இருந்து கொண்டிருப்பவை.

ஆதி அந்தம் இல்லாத அருட்பெருஞ்ஜோதி!

அதைத்தான் 'என்று நீ.. அன்று நான்!' என்றார் திருநாவுக்கரசர்.

பரம்பொருள் என்றும் இருப்பது.

உயிர் பரம்பொருளோடு இருப்பது.

ஆன்மா உயிரோடு இருப்பது.

ஆன்மாவும் உயிரைப் போலவே அழியாத பொருள்.

'என்று நீ..அன்று நான்'  என்ற அடை மொழி ஆன்மாவுக்கும் பொருந்தும்.

ஆதியிலிருந்து உள்ள அழியாப் பொருளே இறைப் பொருள்.

எனவே இறைவன் என்ற உயிர்ப்பொருளோடுதான் நீங்கள் பொருந்தியிருக்கிறீர்கள்!

பொருத்தியது நீங்கள் அல்ல, இறைவன்!

அந்த இறைவனை அறிந்து கொண்டவர்களே அழியாத நிலை பெறுகிறார்கள்.

இறைவனை அறியாதவர்கள் அறியும் வரை சோதிக்கப்படுகிறார்கள்.

சோதிக்கப்பட்டும் கூட இறைவனை இல்லை என்போரே  அழிந்து போகிறார்கள்!

வினைகளின் பொருட்டு உயிர் உடலைக் கொடுத்து உங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் இறைவன்.

அதனால்தான்  'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞானத் தங்கமே' என்று பாடினார் ஒரு சித்தர்.

உங்கள் அனைத்து இன்ப துன்ப அனுபவங்களிலும் இறைவன் இருக்கிறான்.

உங்கள் அறியாமை என்ற ஆணவத்தால் இன்ப துன்பங்களில் சிக்கி இறைவனை மறந்துவிடுகிறீர்கள்.  இறைவனை மறப்பதால்தான் இன்ப துன்பங்களுக்கே இறையாகி அழிவைத் தேடுகிறீர்கள்.

தன்னைப் பற்றிச் சிந்திக்கவே அறிவு தரப்பட்டுள்ளது.

அந்த அறிவைக் கொண்டு உடலையும் உயிரையும் உள்ளத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஏன் பிறந்தோம், எப்படிப் பிறந்தோம், எதற்காகப் பிறந்தோம் என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்பவனே  தன்னை அறிகிறான்.

தன்னை அறிபவனே இறைவனை அறிகிறான்.

இறைவனை அறிபவனே இறைவனாகிறான்.

தகப்பனும் தாயும் சேரும்போது உருவாகிறோம்.

உடலும் உடலும் சேர உயிர்ப் பொருளே காரணமாக உள்ளது.

இரண்டு உயிர் உடல்களின் சேர்க்கையால் இன்னொரு உயிராகப் பிறந்து வந்துள்ளோம்.

கருவில் உருவான உண்மை நமக்கே தெரியாத ரகசியம்.

கருவுக்குக் காரணமான உங்கள் தாய்க்கோ உங்கள் தகப்பனுக்கோ உங்களைப் பற்றி ஏதும் தெரியாது.

நீங்கள் பிறந்ததும், பெற்றோர் உங்களைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுட்டதும் எதனால்?

உங்கள் மீது கொண்ட அன்பினால்.

உங்களைப் போற்றிப் போற்றி வளர்ப்பது எதனால்? அதே அன்பினால்.

அப்படிப்பட்ட நீங்கள் தோன்றக் காரணம் எது?

பெற்றோருக்கு உண்டான காமம்.

அக்காமத்தின் பின்னணி?

காதல்.

அக்காதலின் பின்னணி?

அன்பு.

அவ்வன்பின் பின்னணி?

ஆதிபகவன்!

எனவே ஆதிபகவனான இறையருளாலேயே பிறந்திருக்கிறீர்கள்.

அறிவுள்ள மனிதன் மட்டுமல்ல, உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுமே  துன்புறுகின்றன.

அறிவு இல்லாத காரணத்தினால் எதற்காக  துன்புறுகிறோம் என்று அறியாமலே அவை  துன்புறுகின்றன.

துன்பம் வரும்போது பிற உயிரினங்களைப் பார்த்துப் பொறாமைப்படலாம்.

அதெல்லாம் பொய்.

அறிவு உள்ள காரணத்தால் ஒருவருக்கு ஒருவர் உறவு பூண்டு குடும்பமாக வாழ்கிறோம். ஒருவருக்கு ஒருவர் உதவுகிறோம். பாடுபடுகிறோம். பொருள் ஈட்டி சுகபோகமாக வாழ்கிறோம்.

வெயில், மழைப் பனிக் காற்றில் வீடுகளுக்குள் முடங்கிக்கொள்கிறோம்.

நோய்கள் வந்தால் குணமாக்கிக் கொள்கிறோம்.

உயிர் வாழும் காலத்தில் “இவ்வுலக”த்தின் மீது அன்பு காட்டி, உயிர் பிரியும் காலத்தில் “அவ்வுலக”த்தின் மீது அன்பு காட்டுகிறோம்.

இந்த அனுபவங்கள் பிற உயிரினங்களுக்கு இல்லையே!

வலிய மிருகங்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் அஞ்சியஞ்சிப்  பாய்ந்தோடும் அவலங்கள் நமக்கு உண்டா?

புயல் வருகிறது என்றால் எத்தனைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்? எத்தனையெத்தனை மீட்புப் படைகள்?

பறவை விலங்குகளுக்கு மட்டும் அந்தப் பாதிப்புகள் இல்லையா?  அவற்றுக்குப் பாதிப்பு வந்தால் அவை எங்கு போய் ஒளிந்துகொள்ளும்? அதை யோசித்துப் பார்த்திருப்பீர்களா?

எனவே, அத்தனை உயிரினங்களுமே பிறந்து அல்லல்படுகின்றன.

அல்லல்களுக்குக் காரணம் அதனதன் கர்மாக்களே தவிர வேறில்லை!

அதனால்தான் “வேண்டேன் வேண்டேன் .. பிறவி வேண்டேன்” என்றார்கள் பெரியோர்கள்.

உயிர் உங்கள் உயிராக இருக்கலாம்.

ஆனால் அது உங்களுக்கு வழங்கப்பட்ட உயிர்.

ஒரு காரணத்திற்காக வழங்கப்பட்ட உயிர்.

வழங்கப்பட்ட உயிரை வழங்கிய உயிர் எது?

உயிரையே வேண்டாம் என்று சொல்ல வைத்த உயிர் எது?

எப்போது எப்படிப்பட்ட சோதனைகள் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது!

எல்லோருக்கும் பிடித்தது குயிலோசை.

குயிலை விட மேலான ஓசை வேண்டுமென்றால் அடர்ந்து இருண்ட 'அமேஸான்' காடுகளுக்குத்தான் செல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாயிருந்தவை நம் நாடுகள்.

காடுகளுக்குள் வீடுகளைக் கட்டிக்கொண்டு மனித நாகரீகம் தலைதூக்கியது.

கட்டடங்கள் வளர்ந்தாலும் விட்டுப் பிரிய மனமில்லாமல் நம் மரங்களோடு பொருந்தி இன்றைக்கும் குரல் எழுப்பும் குயில்களை எண்ணிப் பார்த்தோமா? 

குயில், பச்சைக் கிளி, மாடப்புறா, மயில், மைனாக்களை நாம் மதிக்க வேண்டாமா?

அதிகாலையும் உச்சிப் பொழுதிலும் மறைந்திருந்து குரல் கொடுக்கும் குயில்களை மதிக்கிறோம்.  கரகரப்பான குரல் எழுப்பும் காகத்தைக் கண்டால் மட்டும் விரட்டியடிக்கிறோம்.

குயிலோசைக்கு மாறானது காகத்தின் ஓசை.

ஆனால் அவ்வளவு அழகான ஓசைக்குச் சொந்தமான குயிலோ காகத்தின் கூட்டில்தான் சென்று முட்டையிடுகிறது!

அது தெரியுமா உங்களுக்கு?

காகங்கள் அவற்றைத் தமது முட்டை என்றே கருதி அடைகாக்குமாம்!

குயில் குஞ்சுகளைத் தனது குஞ்சு என்று கருதியே ஊட்டி ஊட்டி வளர்க்குமாம்.

குயிலின் வெள்ளை  'அலகை'  கண்டுவிட்ட காகம்

குயில் குஞ்சைக் கொத்திக் கொத்தியேக் கூட்டைவிட்டு வெளியே தள்ளிவிடுமாம்!

இதைத்தான் இந்தப் பாடலில் சொல்கிறார் திருமூலர்.

'குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!'

இதன் உண்மைப் பொருளை உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்.

காக்கைக் கூட்டில்தான் குயில் பிறக்கிறது.

காகத்தின் கூட்டில் குயில்கள் பிறப்பது போலத்தான் பெற்றோர் வயிற்றில் வந்து நாம் பிறக்கிறோம்.

வெள்ளைக்கும் கருப்புக்கும் ஆகாது.

காகத்தின் கருப்பான அலகிடம்தான் வெள்ளை  அலகு கொண்ட குயில் தோன்றுகிறது.

வெள்ளைக்கு மூலம் கருப்பு.

கருப்புக்கு மூலம் வெள்ளை.

இன்பத்தின் மூலம் துன்பம்.

துன்பத்தின் மூலம் இன்பம்.

மயக்கும் குயிலோசையின் பிறப்போ நாரசமாய் கரையும் காகத்தின் கூட்டில்!

பிடித்த விஷயங்கள் பிடிக்காத விஷயத்தில் தோன்றுகின்றன.

கணவனுக்கு மனைவி சொந்தமில்லை.

மனைவிக்குக் கணவன் சொந்தமில்லை.

அண்ணனுக்குத் தம்பியும்,  தம்பிக்கு அண்ணனும், அக்காவுக்குத் தங்கையும்  தங்கைக்கு அக்காவும் சொந்தமில்லை.

நேரடி உறவுகளே சொந்தமில்லை என்று ஆன பிறகு இடையில் வந்த சொந்தங்கள் மட்டும் எப்படிச் சொந்தங்களாக முடியும்?

பின்னர் எதற்குத்தான் பிறந்தோம்?

ஏதோ ஒரு அனுபவத்திற்காகப் பிறந்தோம்.

எந்த அனுபவத்திற்காகப் பிறந்தோம்?

கற்றுக் கொள்ளும் அனுபவத்திற்காகப் பிறந்தோம்.

எதைக் கற்றுக் கொள்ளப் பிறந்தோம்?

அனுபவத்தைக் கற்றுக் கொள்ளப் பிறந்தோம்.

அனுபவம் எதைக் கற்றுத் தரும்?

எது அவசியமோ அதைக் கற்றுத் தரும்.

எது நமக்கு அவசியம்?

உண்மைப் பொருளை அறிவது.

உண்மைப் பொருள் என்பது  என்ன?

நாம் அறியாமல் இருப்பது.

அறிந்துவிட்டால் ?

நம்மை வருத்திய துன்பங்கள் யாவும் நம்மை விட்டுப் போய்விடும்!

இதைப் புரிந்து கொண்டால் துன்பத்தையும் ஒப்புக்கொள்ளும் மனப் பக்குவம் வந்துவிடும்!

துன்பத்தை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் வினைகளை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் வந்துவிடும்.

வினைகளை ஒப்புக் கொண்டால்தான் அதிலிருந்து விடுபட முடியும்.

அதிலிருந்து விடுபட்டால்தான் பிறவாதப் பெருநிலைக்குப் போக முடியும்!

ஆனால் மனிதன் இதைச் செய்வானா?

(ஞானம் பெருகும்)

Tags : gnana yogam yoga God Kuyil குயில் காக்கை ஞான யோகம் இறைவன்

More from the section

34 . காதல் திருமணங்கள்
33. அழகின்மையின் அழகு!
32 .பெண்ணழகி ஆணழகன்
31. சிங்காரச் சென்னையா சிங்காரிச் சென்னையா?
30. வேள்விச் சாம்பல்