திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

15 . ஏலம் போகும்  காதல்

By கே.எஸ். இளமதி.| Published: 05th September 2018 10:00 AM

                          

சென்ற வாரத்தில் பனை மரத்தடியில் உட்கார்ந்து பால் அருந்தினால் மது குடிப்பதாக பழி சொல்வார்கள் என்பதைப் பற்றிப் பார்தோம்.

அதை விடப் பெரும் சோதனை ஒன்று வந்தது என்று கூறியிருந்தேன் அல்லவா?

வினைகள் நம்மை வருத்தும் போது அப்படியே தலைவணங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்டது. இதற்கு உபதேசம் படிப்பினை என்றெல்லாம் ஏதுமில்லை. சம்பவங்கள் மூலமாக தனக்குத் தானேக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சின்ன வயதிலிருந்து கஷ்டப்படுபவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். காரணம் கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

எனது நண்பன் நடராஜன் சின்ன வயதிலிருந்து மிகவும் கஷ்டப்படுபவன். எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ள மாடடான். அன்றைக்கு அப்போதைக்கு மட்டும் பசிக்கு உணவு தேடினால் போதும் என்று இயல்பாக இருப்பவன்.

தன்னால் பிறருக்குத் துன்பம் வரக் கூடாது என்று கருதுவது பெரிதல்ல. பிறரால் தனக்குச் சிரமம் வரும்போது அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் பெரிய குணம்!

அந்தக் குணம் எல்லாருக்கும் வராது. சின்ன வயதிலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு  மட்டுமே வரும். அதற்கு எடுத்துக்காட்டுத்தான் என்  பள்ளிக்காலத்து  நண்பன் நடராஜன்.

என்னால் அவனுக்கு வரக் கூடாத சோதனை ஒன்று வந்தது. அதற்காக அவன் ஒரு சிறிதளவு கூட அலட்டிக் கொள்ளவில்லை. வருவது எல்லாமே வினைப் பயன் என்பதில் அவனுக்கு முழு உடன்பாடு உண்டு.

இன்றைக்கு நான் ஆத்திகன்.

அன்றைக்கு பரம நாத்திகன்.

மற்றவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளைப் பற்றிச் சொல்லும் போது பெரிதாகவே எடுத்துக் கொள்ள மாட்டான்.

சரி விடு இளமதி, அவனவன் பண்ணினதை அவனவன் அனுபவிக்கிறான் என்று வெகு சாதாரணமாகச் சொல்லும்போது ஓங்கிக்  கன்னத்தில் அறையலாம் போலத் தோன்றும்.

 

உனக்கு மனச் சாட்சியே இல்லையா நண்பா? என்று கேட்பேன்.

என்ன மனச்சாட்சி இருந்தாலும் நடக்கறது நடந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது இளமதி. இன்னிக்கு நமக்கு சம்பந்தமே இல்லாத  சோதனை வரும். உடனே 'ஆ..ஊ..!'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது. வர வேண்டியதுதான் வந்திருக்கு. வந்துட்டுப் போகட்டும்னுப் பேசாம  இருந்துடணும்’ என்பான்.

அப்படி ஒரு சோதனை  வந்தது. அதாவது என்னால் அவனுக்கு வந்தது.

அதே சோதனை அவனால் எனக்கு வந்திருந்தால், நான் அவன் மீதுக் கோபப்பட்டிருப்பேன்.

என்னால் அவனுக்கு வந்தச் சோதனையைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக இருந்த கோலம்தான் இன்றும் எனக்கு  வியப்பைத் தருகிறது. அவனை எண்ணும் போது மகாத்மா காந்தியின் சத்திய சோதனை நினைவுக்கு வருகிறது.

*

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது-

எனது மதுரைத் தமக்கை தன் கணவருடன் கோபித்துக் கொண்டு அவர் இல்லாத போது எங்கள்  கிராமத்துக்கு வந்து விட்டார்.

கணவரிடம் சொல்லாமல் வந்தது தப்பு, உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள் என்று கூறி என் சதோதிரியை என்னுடன்  மதுரைக்கு அனுப்பி வைத்தார் எங்கள் தகப்பனார் .  இரவு நேரமாகிவிட்டதால் நான் துணைக்காக என்  நண்பன் நடராஜனையும் மதுரைக்கு உடன் அழைத்தேன். மறுப்பேதும் சொல்லாமல் கிளம்பி விட்டான்.

இன்றைக்குள்ள நண்பர்களாயிருந்தால் நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம். நாளைக்கு வேலைக்குப் போகணும். வர முடியாதப்பா என்று சொல்லி விடுவார்கள். ஆனால் நடராஜன் சொன்னவுடன் புறப்பட்டு விட்டான், நட்புக்காக!

மதுரை வீட்டில் சகோதரியைக் கொண்டு போய் விட்டபோது அவரது கணவன் பயங்கரக் கோபத்தோடு கத்தினார். நீ 'சப்போர்ட்’ பண்ணுறேங்கற தைரியத்துலதான்டா உங்க அக்கா ஊருக்குத் தைரியமா வந்துட்டா, எல்லாம் உன்னாலதாண்டா  என்று  என்னைக் குற்றம் சாட்டிப் பேசினார்.

அவர் தீப்பிழம்பாக என்னை முறைத்துக் கொண்டேயிருந்ததால் நண்பனுடன் ஊருக்குக் கிளம்பிவிட்டேன். சகோதரி வீட்டுக்கு எப்போது போனாலும் ஜாலியாகத் தங்கி மதுரையைச் சுற்றிவிட்டுத்தான் திரும்புவது வழக்கம்.

அன்று இரவாகிவிட்டதால் நானும் நண்பனும் மத்தியப் பேருந்து நிலையத்திற்கு நடந்தே வந்து கொண்டிருந்தோம். கால்கள் வலியெடுத்ததால் வழியில்  ஒரு திண்ணையில் போய்க் களைப்போடு  படுத்துவிட்டோம்.

நள்ளிரவில் ரிக்‌ஷாவில் வந்த ஒரு போலீஸ்காரர் எங்கள் இருரையும் எழுப்பி போலீஸ் ஸ்டேசனுக்குக் கூட்டிச் சென்று விட்டார். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அப்போதெல்லாம் 'சந்தேகக் கேஸ்’ வழக்கத்தல் இருந்ததால், நிறைய பொதுமக்கள் பிடிபடுவது வழக்கம்.

அப்போதும் கூட நண்பன் நடராஜன் அரைத் தூக்கத்தில்தான் ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தான், போலீஸ்காரர் கூட்டிச் செல்லும் 'சீரியஸ்னஸ்’ஸைக் கூட அவன்  உணரவேயில்லை!

ஸ்டேசேனில் கைகளைக் கட்டி நின்ற போது நடராஜனிடம் என்னடா கொஞ்சம் கூட கவலையில்லாம நிற்கறியே. நமக்கு எவ்வளவு பெரிய சோதனை வந்திருக்கு தெரியுமா? என்று கேட்டேன்.

விடுடா என்ன வந்தாலும் அனுபவிச்சுத்தான் ஆகணும் என்று எனக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னபோது எனக்கு வந்தக் கோபம் இருக்கிறதே!

பின்னர் அந்த போலீஸ்காரர் ஒரு 'லாக்-அப்’ அறையைத் திறந்து விட்டு காலை வரை இங்கேயே இருங்கடா, கோர்ட்டுக்குப் போகணும் என்று சொல்லி உள்ளே  வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விட்டார்.

அந்தச் சின்னஞ்சிறு அறைக்குள் ஒரு வயதான குற்றவாளி அழுக்கான ஆடைகளுடன் வாயில் எச்சில் ஒழுக உறங்கிக் கொண்டிருநதார். அவர் மேலிருந்து குமட்டும் நாற்றம் வேறு!

'என்னால் உனக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் பாருடா நடராஜா, என்னை மன்னிச்சுடுடா. என்னால உனக்கு ஏண்டா  கஷ்டம்... சாரிடா..’ என்று மறுகினேன்.

'விடு இளமதி, என்ன வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான். எல்லாம் விதி.  பேசாமப் படு. விடியட்டும் பார்த்துக்கலாம். நடக்கறது நடக்கட்டும். நம்மகிட்ட என்ன இருக்கு?’ என்று சொன்னபடியே அந்த நாற்றம் பிடித்த மனிதனுக்கு அருகே கொட்டாவி விட்டபடியேப் படுத்து நன்றாகத் தூங்கிப் போய்விட்டான்!

எனக்குப் பொறாமையாக இருந்தது. அவனைப் போல என்னால் படுத்துக் கொள்ள முடியவில்லையே!

என் மனம் புழுங்கியது. குமுறியது.

சகோதரியிடம் சண்டையிட்ட அத்தானைக் கோபிப்பதா? கோபிக்க வைத்த சகோதரியைக் கோபிப்பதா, ஊருக்கு  சகோதரி சொல்லாமல் வந்ததைக் கோபிப்பதா? வந்த மகளை வந்த கையோடு ஊருக்கு அனுப்பிய என் தகப்பனாரைத்தான் கோபிப்பதா? மைத்துனனைத் தங்கச் சொல்லாமல் அனுப்பிய அத்தானைக் கோபிப்பதா, வழியில் திண்ணையில் போய்ப்படுத்த என்னை நானே கோபித்துக் கொள்வதா? என்று மனம் குமுறிக் கொண்டே உட்கார்ந்து கிடந்தேன். எப்படி அந்த அறைக்குள் தூக்கம் வரும்?

எனக்கு அலர்ஜியாக இருந்த கரப்பான் பூச்சிகள் வேறு அந்த நேரத்தில் இரவு நேரக் காவலர்கள் போல 'லாக்-அப்’புக்குள்ளேயே தலை காட்டின!

சமையலறையில் கரப்பான் பூச்சியைக் கண்டால் வீட்டை விட்டே ஓடிப் போய் தெருவில் நின்று கொள்வது வழக்கம். கரப்பான் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டால் 'வீடே பறக்க ஆரம்பித்துவிடும்!’ அக்கா தங்கச்சித் தம்பி அத்தனை பேருக்கும் கரப்பான் பூச்சி என்றால் ஆகாது!

இப்போது கரப்பான் பூச்சி பறக்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்?

ஸ்டேஷனே சூரையாடப்பட்டிருக்குமோ?

கவலைப்பட்டபடியே கொட்டக் கொட்டக் கண்விழித்துக்கொண்டு உட்கார்ந்து கிடந்தேன். 

தூக்கத்தில் தனது வலது காலைத் தூக்கி என் மடிமீது போட்டான் நடராஜன்.

எனக்கு அந்தக் காலைப் பிடித்து ஒடித்து விடலாம் போலிருந்தது.  கவலையில்லாமல் தூங்குகிறானே பாவி என்று அந்த வலது காலைத் தூக்கிக் கீழே போட்டேன்.

மற்ற நான்கு சபைகளிலும் இடது காலைத் தூக்கி பொருளைக் கொடுக்கும் சிவன் மதுரையில் மட்டும் வலது காலைத் தூக்கி அருளைக் கொடுக்கிறானே! வரும் எதையும் ஏற்றுக் கொள். எல்லாம் அனுபவித்துக் கடந்து போகின்ற விஷயங்கள் என்று அவன் அறிவுறுத்திய உண்மை அப்போது தெரியவில்லையே! தெரிந்திருந்தால் அப்போதே நண்பன் நடராஜனின் வலது காலைத் தொட்டுக் கும்பிட்டிருப்பேனே!

மறுநாள் வீட்டிற்குத் தகவல் சொன்னபிறகு ஆட்கள் வந்தார்கள். வந்தவர்களை ஸ்டேசனுக்கு பேப்பர் பேனா, மை பாட்டில் வாங்கிக் கொடுக்கச் சொன்னார்கள். வாங்கிக் கொடுத்துவிட்டு நண்பன் நடராஜனுடன் விடுதலையானேன்.

என் தகப்பனார் வசதியான மாப்பிள்ளை என்று என்  சகோதரியை மணமுடித்து வைத்தார். என் சகோதரிக்குப்  பிடிக்கவில்லை.

செல்வந்தர்கள்  செல்வந்தர்கள் வீட்டிலேயே சம்பந்தம் வைத்துக் கொள்வதை விரும்புகிறார்கள். செல்லமாக வளர்ந்த பிள்ளைகள் 'ஆணவம் அகம்பாவத்தோடு’ இருப்பார்கள். 

பௌதீகம் படிக்கும் போது கற்றுக் கொண்ட விசை பற்றிய பாடம் நினைவுக்கு வருகிறது.

குறிப்பிட்ட வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் ஒரு பொருள் நிற்கும் பொருளோடு மோதும் போது தான் மோதிய விசையை அப்படியே  எதிர் விசையாகத் திரும்பப் பெறும்.

அப்போது இன்னொரு விஷயமும் தெரிய வந்தது. சாலைகளில் மரங்களில் போதும் வாகனங்கள் மோதிய வேகத்திற்கு எதிர் விசையோடு தூக்கி எரியப்பட்டுத் தலைகீழாகக் கிடப்பதைப் பார்த்திருக்கிறோம்.

மரம் அசையாமல் நின்றுகொண்டிருந்த பொருள்.

ஆனால் அதே வேகத்தோடு எதிரே வந்து கொண்டிருக்கும் இன்னொரு வாகனத்தோடு போய் நேருக்கு நேர் மோதினால் என்னாகும்! அதனால்தான் அந்த வாகனங்கள்  தூக்கி எரியப்பட்டு எங்கெங்கோ போய்க் கிடக்கின்றன!

பணக்கார வீட்டுப் பெண் கோபத்தைக் காட்டினால் பணக்கார வீட்டு மாப்பிள்ளை பதிலுக்கு அதே வேகத்தில் கோபத்தைக் காட்டுவான்.

விளைவு என்னாகும்?

எத்தனையோ பணக்கார வீட்டுத் தம்பதிகளைப் பார்த்துவிட்டேன். விரல் விட்டு எண்ணக் கூட வாய்ப்பில்லை, சேர்ந்து வாழ!

ஆனால் கோர்ட்டுகளில் அவர்களது விவகாரத்துக் கட்டுக்கள் குவிந்து கொண்டு வருகின்றன.

'வாய்தா’ எனப்படும் ஒத்தி வைப்புகள் வாழ் நாட்களை வீணாக்குவதைத்தான் பார்க்கிறேன். பிரிந்தவர்கள் கூடிவிட மாட்டார்களா என்று வாய்ப்பளிக்கவே வாய்தாக்கள்.

காலம் மாறக் கூடியது.

பகைவர்களை நண்பர்களோ மாற்றக் கூடியது. அதனால்தான் வாய்தா போடுகிறார்கள்.

தம்பதிகளிடையே 'நீயா நானா’ என்ற போட்டி வருவதற்குப் பெற்றோரே காரணம்.

நூற்றுக்கணக்கான பவுன்களைப் போட்டு பெண்ணைக்  கட்டிக் கொடுப்பார்கள்.

அவற்றை எல்லாம்  அவன்  சீந்தக் கூட மாட்டான்.  தன்  சொற்படிதான் மனைவி  கேட்க வேண்டும் என்று அதிகாரம் செலுத்துவான்.

இத்தனை பவுன் நகைகளைப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். நான் எதற்காக  உனக்கு அடிமையாக வேண்டும் வேண்டும்? என்று எதிர்த்து நிற்பாள் பணக்கார மனைவி.

விளைவு? காரும் காரும் மோதுவது போல, பணமும் பணமும் மோதினால் பயங்கரமான விளைவுகள் நேரிடும்.

பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிறான்.

போட்டிக்கு ஒரு பணக்காரன் தோன்றுவான்.

அவர்களுக்குள்ளே நீயா நானா போட்டி வந்தால் எப்படிப் பகைமை வளருமோ,  அதே போல பணக்காரத் தம்பதிகளுக்குள்ளும் பகைமை வளரும்.

பணக்காரன் தன்  மகனுக்கு ஏழைப் பெண்ணை கட்டி வைத்தால் நல்லது  என்று ஏன்  நினைப்பதில்லை?

பணக்காரன் தன் மகளுக்கு ஏழைப் பையனைக் கட்டி வைத்தால் நல்லது என்று ஏன் நினைப்பதில்லை?

காரணம் அந்தஸ்த்து.

தன்னுடைய வசதிக்குத் தான் போய் ஒரு ஏழை வீட்டில் சம்பந்தம் வைத்துக்கொண்டால்  இழுக்கு என்று கருதுகிறார்கள். அதனால் பிள்ளைகளைப் பறி கொடுக்கிறார்கள் .

அவர்கள் விவாகரத்துப் பெற்ற பிறகாவது ஏழைப் பையனையோ, ஏழைப் பெண்ணையோ மறுமணம் செய்து வைத்தால் என்ன?

ஆனால் அதன்பிறகுகூட வேறு பணக்காரர்கள் வீட்டில் போய்த்தான் மறுமணம் செய்து வைப்பார்கள்.

அங்கும்  வம்பு வழக்குத்தான்!

'ஸ்டேட்டஸ்’ எனப்படும் ஆணவம் அகம்பாவத்திற்குத் தங்கள் பிள்ளைகள் வாழ்வைக் கடைசி வரைப் பழியாக்கிவிடுவார்கள்!

பையனுக்கு அழகான சிவப்பான பணக்காரப் பெண்ணாக முடிக்க வேண்டும் என்ற கணக்கு வைத்துள்ளார்கள்; பெண்ணுக்கு படித்த அழகான சிவப்பான பணக்காரப் பையனாக முடித்து வைக்க வேண்டும் என்ற கணக்கு வைத்திருக்கிறார்கள்.

பொருந்தாத் துணைகளைப்  பொருத்தி வைத்து போராட்டக் களமாக வாழ்வை மாற்றும் இவர்களை  முட்டாள்கள் என்றால் சரிதானே?

அதனால்தான் காதலைத் தெய்வீகமானது என்பார்கள்.

உண்மைக் காதல் ஒருக்காலும் அழகு பார்த்து வராது. அழகான பெண்ணைப்  பார்க்கும்போது முதலில் தோன்றுவது காமம்தான். அதை மையமாகக் கொண்டு அவளிடம் போய் வழிவதும் சுற்றிச் சுற்றி வருவதும் அவளையே பின் தொடர்வதும் 'அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரண தேவி’ என்று வசனம் பேசி மணம் முடிப்பார்கள்.

பிறகுதான் அடைந்தது  மகா தேவியும் அல்ல மரண தேவியும் அல்ல - ஒரு நரக தேவி என்ற உண்மை புரியும்!

யோக்கியமான பையனாக இருப்பான். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பான். அவனை அழகிகள் கண்களுக்குத் தெரியாது.

ஏலம் விடுவதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எவன் நல்ல வசதியும், நல்ல அழகும் நல்ல நிறமும், நல்ல சம்பளமும் வாங்குகிறானோ, அவனே தனது காதலனாக வர வேண்டும் என்று காத்திருப்பாள்.  அப்படிப்பட்டவர்களைக் கடைக்கண் வீசிக் காலடியில் விழ வைத்து விடுவாள்.

காவியக் காதல் அல்ல- காரியக் காதல் இது.

கண்களை மூடிக் கொண்டு பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டேன் என்று ஒரு நாள் அழுது புரளுவாள்.

இதெல்லாம் கூட அவர்கள் அனுபவித்தாக வேண்டும் என்ற முன்வினைதான் காரணம்.

'அப்படி என்றால் வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தே ஆக வேண்டுமா, நல்ல கதியே இல்லையா?’ என்று கேட்டார்  ஒரு நண்பர்.

சிவனே கதி என்று மதியால் சரணைடைந்தால் விதிகள் என்  செய்யும்? என்றேன்.

கடவுளிடம் சரணாகதியாக வேண்டும் என்றால் என்ன அர்த்தம். நீங்கள் என்ன   கடவுளுக்கு ஏஜெண்டா? உங்களுக்கு இதனால் கமிஷன் கிடைக்குமா, எதற்காக கடவுளுக்காக வக்காளத்து வாங்குகிறீர்கள்?’ என்று கேட்டார் அந்த நாத்திக நண்பர்!

 

(ஞானம் பெருகும்)

Tags : ஞான யோகம் gnana yogam

More from the section

34 . காதல் திருமணங்கள்
33. அழகின்மையின் அழகு!
32 .பெண்ணழகி ஆணழகன்
31. சிங்காரச் சென்னையா சிங்காரிச் சென்னையா?
30. வேள்விச் சாம்பல்