புதன்கிழமை 16 ஜனவரி 2019

16. வாசமுள்ள மலர்களும்  வாசமில்லா மலர்களும்

By கே.எஸ். இளமதி.| Published: 12th September 2018 10:00 AM

 

சென்ற வாரக் கட்டுரையில் சிவனே கதி என்று மதியால் சரணைடைந்தால் விதிகள் என் செய்யும்? என்றேன்.

கடவுளிடம் சரணாகதியாக வேண்டும் என்றால் என்ன அர்த்தம். நீங்கள் என்ன கடவுளுக்கு ஏஜெண்டா? உங்களுக்கு இதனால் கமிஷன் கிடைக்குமா, எதற்காக கடவுளுக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்? என்று கேட்டார் எனதருமை நாத்திக நண்பர்!

வியாபாரத்தில் தூதுவன் தரகன் எனப்படுவான். அவன் பொருளை எப்படியேனும் விற்று விட வேண்டும் என்று போராடுவான். பொருளை விற்றால் அவனுக்குக் கமிஷன் கிடைக்கும். அந்தக் கமிஷனுக்காக பொய் சொல்லிப் பொருளை விற்கச் செய்து விடுவான்.

பணத்திற்கான எதிர்பார்ப்பு இருந்தால் எப்படியும் பணம் பண்ணி விட வேண்டும் என்ற நோக்கம் வந்து விடும்.

பொருளுக்காக வாழ்பவன் தரகன்.

அருளுக்காக வாழ்பவன் ஆச்சாரியன். ஆசிரியன், அவன்தான் குரு.

பணம் புறவியல் இன்பங்களுக்கு வகை செய்யும்.

அருள் அகவியல் இன்பங்களுக்கு வகை செய்யும்.

உடலியல் இன்பங்கள் அனைத்தும் பணத்தால்தான் கிடைக்கும். ஐம்புலன் இன்பங்களை  அனுபவிக்கச் செலவு செய்தாக வேண்டும். திரைப்படத்திற்குப் போவது கண்களால் பார்த்து இன்புற. டிஜிட்டல் சவுண்டு சிஸ்டத்தில் அதிரடியான பாடல்கள் செவிகளால் கேட்டு இன்புற. பிரியாணியை  வாசம் பிடிப்பது மூக்கு இன்புற. வாங்கிச் சுவைப்பது வாய் இன்புற. சிவப்பு விளக்குப் பகுதி எங்கே என்று தேடிக் கொண்டு அலைவது உடல் இன்புற.

வாசமுள்ள பூக்கள் உண்டு.

வாசமில்லாத பூக்களும் உண்டு.

அழகில்லாத வாசனைப் பூக்கள் உண்டு.

வாசனை இல்லாத அழகிய பூக்களும் உண்டு.

மல்லிகைப் பூ அழகும் வாசனையும் உள்ள பூ.

ஆனால் என் நண்பர் ஒருவர் வந்தார்.

என்னிடம் வித்தியாசமான குணம் இருக்கிறது. என் மனைவி சூடியிருக்கும் மல்லிகைப் பூவில் கொஞ்சம் கூட வாசம் இல்லை. போதையும் இல்லை. ஆனால் எதிர் வீட்டுப் பெண்மணி வைத்திருக்கும் பூவில் மட்டும் வாசம் அள்ளிக் கொண்டு போகிறதே அது ஏன் என்று கேட்டார்.

உங்கள் மனைவி வைத்திருப்பது காட்டு மல்லியாக இருக்கும். அதில் வாசனை இருக்காது. சோதித்து விட்டு வந்து சொல்லுங்கள் என்று அனுப்பினேன்.

மறுநாள்  வந்தவர், சோதித்து விட்டேன் அதில் வாசனையே இல்லை, காட்டுமல்லிதான் என்றார்.

அப்படி என்றால் பூக்காரி மேல்தான்  தப்பு. அவளிடம் உண்மையான மல்லிகைப் பூ கொண்டு வா, இல்லாவிட்டால் பூவே வேண்டாம் என்று சொல்லி விடுங்கள் என்றேன்.

மறுநாள் பூக்காரி சண்டைக்கே வந்துவிட்டாளாம்!

சோதித்துப் பார்த்த  மனைவி  உங்களுக்கு மூக்கடைத்திருக்கும், அதனால்தான் வாசனை தெரியவில்லை. வாசனையுள்ள நல்ல மல்லி இந்த மல்லி என்று சொல்கிறாள், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

சரி, நாளை நான் சொல்வதைச் செய்வீர்களா? என்றேன்.

சரி என்றார் அவர்.

எதிர்வீட்டுக்காரப் பெண்மணியின் கணவரிடம் நீங்கள் வாங்கிய மல்லிகைப் பூவைக் கொண்டு போய்க் கொடுத்து அதில் வாசனை  வருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள் என்றார்.

ஓ. தாராளமாக. கேட்டுவிட்டால் போகிறது என்று சொல்லிவிட்டுப் போனார்.

மறுநாள் வந்தார்.

நான் எதிர்வீட்டுக்காரரிடமே போய்க் கேட்டுப் பார்த்துவிட்டேன்.  மல்லிகைப்பூ வாசனையாகத்தான் இருக்கிறது என்று சொல்கிறார். எல்லாருக்கும் வாசனை வரும் என் வீட்டு மல்லி எனக்கு மட்டும் வாசனை வராமல்  இருக்கிறதே, நீங்கள்தான் விளக்க வேண்டும் என்றார்.

உண்மை தெரிந்து போயிற்று. வாசனைக் கோளாறு பூவில் இல்லை. உங்கள் புத்தியில்தான் இருக்கிறது என்றேன்.

அவர் என்ன சொல்கிறீர்கள் என்று குழம்பினார்.

என் வீட்டுச் சாம்பார் மணக்கவில்லை; எதிர்வீட்டுச் சாம்பார்தான் மணக்கிறது என்றால் அந்தச் சாம்பாரைச் சாப்பிட ஆசை வந்துள்ளது என்று பொருள். அதுபோல, என் மனைவி சூடிய மல்லி மணக்கவில்லை. எதிர்வீட்டுக்காரியின் மல்லிகைதான் மணக்கிறது என்றால் அவள் மீது ஆசை வந்துள்ளது என்று அர்த்தம் என்றேன்.

இப்படிச் சொன்னதும் அந்த நண்பர் ஒப்புக்கொள்வது போல் ஈ...என்று பல்லைக் காட்டினார்.

உங்கள் மனைவியின்  மல்லி உங்களுக்கு மணக்கவில்லை. எதிர்வீட்டுக்காரருக்கு மணக்கிறது. உங்கள் மல்லிதான் மணக்கவில்லையே, பேசாமல் அவருக்கே  அந்த மல்லியைக் கொடுத்து விட வேண்டியதுதானே, புரியவில்லையா? என்றதும் அவரது சிரிப்பு போன மாயம் தெரியவில்லை!

ஆலோசனை கேட்டால் தெரியாது என்று சொல்ல வேண்டும். அதற்காக இப்படியா அசிங்கமான ஆலோசனை  சொல்வது என்றார்.

அசிங்கமான ஆலோசனை கேட்டது நீங்கள்தானே.  ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடியும். உங்கள் மல்லியை  கொடுக்கத் தயார் என்றால் அடுத்த வீட்டு மல்லியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? என்றதும் திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

ஆசைக்கு வெட்கமில்லை.

அது மட்டுமல்ல ஆசை பயம் அறியாது. அது மானம் மரியாதை சூடு சொரணை எதையும் அறியாது.

இப்படி ஆசை வயப்பட்டு அசிங்கப்பட்டவர்கள் சரித்திரம் ஏராளம்.

நம்ம வீட்டுச் சாம்பாரில் போட்ட பருப்பும், வெங்காயமும், தக்காளியும்தானே எதிர்வீட்டுச் சாம்பாரிலும் கொதிக்கிறது.

வாசம் பிடிக்கும் மூக்கை அறுத்தால் சரியாகிப் போகும் என்று  புலம்பும் பெண்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.

அந்தக்காலத்தில் பிரச்னைகளை முன்னிட்டு ‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என்றார்கள்.

இன்றைக்கு கணவன்மார்கனை முன்னிட்டு ‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என்கிறார்கள்.

இன்றைக்குப் பெரும்பாலான ஆண்கள் ‘மாற்றான் தோட்டத்து மல்லி’க்குத்தான் ஆசைப்படுகிறார்கள்.

‘மாற்றான் தோட்டத்து மரத்திற்குத்தான் வலிமை’ இருக்கிறது என்று போனால் என்ன ஆவது?

ஐம்புலன் இன்பங்களில் பொல்லாத இன்பம் இந்த மெய் இன்பம் என்பதைச் சொல்வதற்காக இந்த விஷயத்தைச் சொல்ல நேரிட்டது.

மனிதன் ஐம்புலன் இன்பங்களை ஒடுக்க வேண்டுமா? பின்னர் எதற்காக அவை படைக்கப்பட்டன என்று கேட்பார்கள்.

பசி வருவதும் சாப்பிடுவதும் இயற்கை.

அது போல ஐம்புலன் இன்பங்களையும் நுகர வேண்டியது இயற்கை.

பிறகு ஏன் அவற்றை தடுக்கிறார்கள்?

தடுக்கவில்லை தடுக்கவும் முடியாது. ஆனால் கட்டுப்பாட்டோடு இருங்கள் என்றுதான் சொன்னார்கள்.

குடி தண்ணீர் குளத்தில் கிடக்கிறது. அள்ளிப் பருகச் சொன்னார்கள். உயிரைப் பணயம் வைத்து உள்ளே விழுந்து மூழ்கி அருந்தக் கூடாது என்றுதான் எச்சரித்தார்கள். அதைப் புரிந்து கொண்டால் ஐம்புலன் இன்பங்களை அளவோடுத் துய்த்து ஆனந்தமாக வாழலாம்!

*

தனக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்று பார்ப்பவன் வியாபாரி.

பிறருக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று பார்ப்பவன் தவயோகி.

தவயோகிகள்தான் குருவாக முடியும். குரு என்பவன் யார்? இருளை ஓட்டி ஒளிதரும் விளக்குப்போல அறியாமைகளை ஓட்டி அறிவைத் தருபவன் குரு.

குரு பார்க்கக் கோடி புண்ணியம்.

சிவனையே குருவாகக் கொண்டு வாழ்ந்த சித்தர் பெருமக்கள் உண்டு. அவர்கள் நேரடியாக சிவனைக் குருவாகக் கொண்டவர்கள்.  சனகர், சதானந்தர், சனாநந்தர், சனத் குமாரர் ஆகியோர் ஆவர்.

இவர்களிடம்தான்  சிவன் அனைத்து வேதங்களையும் உபதேசித்தார் என்பார்கள். அவர்கள் வழித்தோன்றலில் வந்தவர்கள்தான் மற்ற  சித்தர்கள் என்பார்கள்.

ஆன்மீகத்தில் மனிதன் இறைவனை அடைவதற்குக் குருவின் தயவு வேண்டும் என்பார்கள். குருவைத் தேடு அலைய வேண்டும் என்கிறார்கள் நம் அருளாளர்கள்.

குரு பார்த்தால் எப்படிக் கோடி புண்ணியம் கிடைக்க முடியும்.

சில விஷயங்களைப் புரிய வைக்கச் சில உதாரணங்களைச் சொல்லியாக வேண்டும்.

‘கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும ஓர் கடுகாம்’ என்றார் பாரதிதாசன்.

காதலி ஓரக் கண்ணால் பார்த்து விட்டால் காளைக்கு மகாசக்தி ஏற்பட்டுவிடுவதால் மலை கூட அவனுக்குக் கடுகு போலத்  தெரியுமாம்.

காதலியின் கடைக் கண்வீச்சு அவ்வளவு  சக்தி உண்டு!

உண்மையைச் சொல்வதில் தப்பில்லை.

நான் கிராமத்தில் இருந்த போது நண்பர்களோடு அதிகாலை இருட்டோடு ஆற்றில் சென்று நீராடி வருவது வழக்கம். நான் விரும்பிய, என்னை விரும்பிய  பெண்ணின் வீடு வழியில் இருந்தது. அவள் அதிகாலை இருட்டில் வீட்டு வாசலில் குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருப்பாள்.

இருட்டுக்குள் நாங்கள் போவதை அவளால் பார்க்க முடியாது. ஆனாலும் அவளைப் பார்த்து விட்டுப் போகும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்ல வேண்டுமே.

சொர்க்கத்தில் பிரவேசிப்பது போல இருக்கும்.

ஆகாயம் என்னைப் பார்த்து ஆசீர்வாதம்  செய்வது போலிருக்கும்.

மேகக் கூட்டங்கள் என்னை வரவேற்று மாலை சூடச் சுழ்ந்து வருவது போலிருக்கும்.

சாலையில் போய் வருவோர் ஒவ்வொரு வரும் தேவலோக மனிதர்களாகத் தெரிந்தனர்.

வாகனங்கள் ஒவ்வொன்றும் ஏழு குதிரைகள் பூட்டிய நாராயணன் ரதங்கள் போலத் தோன்றின.

பறவைகள் என் சந்தோஷத்தைப் பிரதிபலிப்பதாகக் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.

எதிரே தெரியும் மலைகள் யாவும் எனக்கென்று கொட்டிக் கிடக்கும் தங்க, வைர, வைடூரிய, பவள, ரத்தின, கோமேத நகைகளின் குவியலாகத் தெரிந்தன!

கால்கள் பூமியை விட்டு மிதப்பது போல இருந்தன. பார்ப்போரை எல்லாம் கட்டித் தழுவி இன்புற்று, குவிந்து கிடக்கும் தங்க வைரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்து இன்புற வேண்டும் என்று தோன்றும்.

தேவர்களுக்குப் பசி தூக்கம் கிடையாது. எனக்கும் பசி தூக்கம் கிடையாது. கூட வந்த நண்பர்கள் நடைபிணங்களாகத் தெரிந்தார்கள் அப்போது. காரணம் காதல் அனுபவங்கள் அவர்களுக்குக் கிடையாது.

காலை இருட்டில் அவள் என்னைக் காணாத போதே இத்தனை ஆனந்தம் என்றால்-கதிரவன் வந்த பிறகு அவள் கடைக்கண் காட்டிச் சிரித்து விட்டால் நான் என்ன ஆகியிருப்பேன்!

எல்லாம் நன்மைக்கே!

ஆட்டுக்கு  வாலை அளந்து வைத்தான்  இறைவன்.

காதலி அப்படி என்னைப் பார்த்திருந்தால் சத்தியமாக அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை! அதனால்தான் கடவுளே பார்த்து அவளை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தான்!

குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்றார்ளே, அதை விளக்கத்தான் கடைக்கண் பார்வையைச் சொல்ல நேரிட்டது.

அந்தக் காதலியை மணம் முடித்திருந்தால் கசப்படைந்து விடுவாள். சண்டை சச்சரவுகள் வந்து எங்களைத் துண்டாடிவிடும்.

கடைக் கண் வீசிய கண்களை நோண்டினால் என்ன என்று  அப்போது தோன்றும்.

என்னைக் கட்டிய பாவத்திற்காகக் கண்ணீர் விட்டு அழுவாள் காதல் மனைவி.

அழு அழு நன்றாக அழு, என்னைக் குரு பார்த்திருந்தால் கோடி புண்ணியம் கிடைத்திருக்கும். உன்னைப் போய்ப் பார்த்த காரணத்தால் கோடிப் பாவங்கள் வந்து சேர்ந்து விட்டன என்று இடித்துரைத்து இருப்பேன்.

அழகியின் கடைக்கண் பார்வை எத்தனை ஆபத்தானது என்ற உண்மை கல்யாணம் ஆனபிறகுதான் தெரியும்.

‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!’

எல்லாவிதமான  செல்வங்களும், கல்வியையும், சோர்ந்து போகாத மனமும், தெய்வீகமான உருவத்தையும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களையும்,  இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும்  தரும்  அழகியப் பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே! என்ற  அந்தாதி  தெரியாமல் எவளோ ஒருத்தியின் கடைக் கண்ணுக்குப் பழியாகிவிட்டேனே என்று கோயிலுக்குப் போய்ப் புலம்ப வைத்துவிடும்!

எல்லாம் நன்மைக்கே.  காதல் திருமணம் எனக்குக் கைகூட வில்லை. காதலிக்காத மனைவியே சமயங்களில் கசப்பாகத் தெரிகிறாள் என்றால் காதலித்த மனைவி எத்தனை  கசப்பாக தெரிந்திருப்பாள்! 

அநேகமாக எல்லா ஆண்களுக்குமே தங்கள் மனைவி மீது வெறுப்பாகத்தான் இருக்கிறார்கள். அதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

வெள்ளத்தனையது மலர் நீட்டம்!

விரும்பிய அளவுக்கு வெறுப்பு!

இதுதான் வாழ்க்கையின் உயிர்ப்பு.

இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் உலகம் ஒரு மாயை.

இதில் நாம் அனுபவிக்கும் அனைத்துமே ஒருநாளைக்குக் கசந்து போகும்.

பார்த்தது கசக்கும், கேட்டது கசக்கும், நுகர்ந்தது கசக்கும், சுவைத்தது கசக்கும், புணர்ந்ததும் கசந்து விடும்!

ஐம்புலன் இன்பங்கள் அனைத்துமே ஒருநாள் ‘கசக்காமல்’ நம்மை விட்டுப் போகாது.

பணம் பணம் என்று அலைந்தவன் எல்லாத் தொல்லைகளும் இதனால்தானே  வந்தது என்று  ஒருநாள் அந்தப் பணத்தையேக் கசக்கி எரிவான்!

ஆனால்-

குரு பார்த்து விட்டால் கிடைக்கும் இன்பமோ காலங்காலமாய் இனித்துக் கொண்டே இருக்கும். மங்காது மறையாது, கசக்காது, சலிக்காது!

உயிர்த்துளி  உள்ள கடைசிக் கணம் வரை இனித்துககொண்டே இருக்கும். திகட்டவே திகட்டத தித்திப்பு அது!

அப்படிப்பட்ட  குருவின் பார்வை எப்போது, எப்படிக் கிடைக்கும்?

(ஞானம் பெருகும்)

Tags : gnana yoga yoga meditation jasmine ஞான யோகம் யோகா தியானம் மலர்

More from the section

33. அழகின்மையின் அழகு!
32 .பெண்ணழகி ஆணழகன்
31. சிங்காரச் சென்னையா சிங்காரிச் சென்னையா?
30. வேள்விச் சாம்பல்
29. பாலிடிக்ஸ்