சனிக்கிழமை 23 மார்ச் 2019

35. கள்ளக் காதலி

By கே.எஸ். இளமதி.| Published: 23rd January 2019 10:00 AM

 

எல்லோரது எண்ணங்களும், சொற்களும், செயல்களும் அனுபவங்களுக்காகவே உருவாகின்றன!

அனுபவங்கள் அனைத்தும் அடுத்தவர்களுக்குப் பாடங்களாக  அமைகின்றன! இதுதான் இயற்கை நமக்கு வகுத்தளித்த விதி! என்பது வரை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

அனுபவங்கள் பாடமாக அமையவில்லை என்றால் மனுதர்மமே இல்லை. மனுதர்மம் இல்லை என்றால் மனிதனே இல்லையே! 

அனுபவம் என்ற உரைகல்லில் உரசிப் பார்க்கும் போதுதான் உண்மைப் பொருள் தெரிகிறது.

எங்கள் கிராமத்தில் ஒரு பெண். நிறைய நகைகள் போட்டுக் கட்டிக் கொடுத்தார்கள்.

கணவர் ஒரு காய்கறி வியாபாரி.

தோட்டந் துறவுகளில் காய்களை வாங்கி வந்து ஒரு பேட்டைக்குள் குவித்து வைத்து வடநாடுகளுக்கு லாரி லாரியாக அனுப்பும் வியாபாரி. 

திடீரென்று காய்கறிகள் விலை சரிந்து விட்ட காரணத்தால் போட்ட மூலதனங்கள் எல்லாம்  போண்டியாயிற்று. நஷ்டத்தின் பிடியில் இருந்தவர் கடனைத் அடைப்பதற்காக மனைவியின் நகைகளை வாங்கி அடகு வைத்தார். 

வைத்த நகைகள் யாவும் ஒருநாள் அடகில் மூழ்கிப்போய் ஏலத்தில் கூவப்பட்டது.

அன்று முதல் மனைவி கணவனுக்கு எதிரியாகிவிட்டார்.

எங்க அப்பா ஆசை ஆசையாகப் போட்ட அத்தனை பவுன் நகைகளும் போச்சே  போச்சே என்று அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். 

கணவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

நீ சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. எனக்குத் தேவை நகை. அத்தனை நகையும் வந்தாக வேண்டும் என்று கணவனோடு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய் உட்கார்ந்து கொண்டார். 

அன்று உட்கார்ந்தவள்தான். பிள்ளைகள் வளர்ந்து படித்து பெரியவர்களாகி விட்டார்கள். கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூத்த மகன் வீட்டில் இருந்து வருகிறார். 

கணவனோ இளைய மகன் வீட்டில் இருக்கிறார்.

அந்தப் பெண்மணி சரியான நகைப் பைத்தியம். கணவனை விட நகை பெரிது என்று கருதினார்.

எனது நகையை  என்னிடம் கொண்டு வந்து வைத்து விட்டு மறுவேலையைப் பார் என்று கணவனுக்கு கட்டளைப் போட்டார். 

அந்தப் பெண்மணியினது வெறுப்புக்குப் பின்னணியில் வேறு காரணம் ஒன்று இருந்தாக வேண்டும் என்று யூகித்தேன்.

மிகவும் நெருக்கமானவர்களிடம் விசாரித்த போதுதான் உண்மை தெரிய வந்தது.

இது அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த உண்மைக் கதை இது.

*
குழந்தைகள் மழலைப் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் நடந்தது இது.

அந்தப் பெண்மணியின் கணவர் ஒரு பெண் பித்தர். 

இது 40 ஆண்டுகளுக்கு முந்தையக் காலம்.

அப்போதெல்லாம் பெண் கணவனைக் கண்டால் எழுந்து கைகட்டி நிற்க வேண்டும்.  சொல்லும் வேலைகளை அடிமைபோலச் செய்தாகவேண்டும். நில் என்றால் நின்று, “படு” என்றால் படுத்து,  உட்கார வேண்டும்!

இதை ஆண்கள் ஏகபோக உரிமையாக எடுத்துக் கொண்டு வரம்பு மீறினார்கள்  

அப்படித்தான் மனைவி இருக்க “மாற்றாளி”டம் மனதைப் பறி கொடுத்தார் அந்தக் கணவர். 

ஆசைநாயகியை வீட்டிற்கே கூட்டி வந்துவிட்டார்!

சொந்தக்காரப் பொண்ணுதான். அவங்க குடும்பத்துல கொஞ்சம் குழப்பம்.  அதனால புத்திமதி சொல்லக் கூட்டிட்டு வந்திருக்கேன் என்றார் கணவர்.

மனைவியும் அதை நம்பி “ஐயோ பாவம் பரிதாபமா இருக்கு..நல்லாப் புத்திமதி சொல்லுங்க.. என்றாள். “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்ற தாய் வீட்டு உபதேசங்களைச் சரியாகக் கடைப்பிடிப்பவள். 

அந்தப் பெண்ணுக்குச் சில ரகசிய ஆலோசனைகள் சொல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாற்றிக் கொண்டார் கணவர்.

சில மணி நேர “ஆலோசனைக”ளுக்குப் பிறகு  வந்தவள் புறப்பட்டுப் போனாள்.

அதற்குப் பிறகு கணவன் மனைவியிடம் எப்போதும் இல்லாமல் “குழை குழை“ என்று குழைந்தான்.

நாய் எப்போதுமே குழையும்.

இவன் இப்போது மட்டும் “குழை”கிறானே என்று யோசித்தாள் மனைவி.

*
ஒருநாள் இரவு-

மிகவும் தாமதமான நேரத்தில் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டார் கணவர். “நண்டும் சுண்டைக்காயு”மாக இரண்டு பிள்ளைகளை முன் அறையில் போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள் அப்பாவி மனைவி. 

அடி முட்டாள் மனைவியை விட “அடிமை மனைவி அமைவதுதான் பாக்கியம்.

முட்டாள் ஒருநாள் விழித்துக் கொள்வாள். அடிமை ஒரு போதும் விழித்துக் கொள்ளமாட்டாள்!

“...அவளுக்கும் கணவனுக்கும் ஏதோ பிரச்னையாம். அவளால இப்ப வீட்டுக்குப் போக முடியாதாம்.  இன்னிக்கு ஒருநாள் மட்டும் இங்கதான் இருப்பா. பாவம்.. நீ போய் மெத்தையில பெட்சீட் விரிச்சு வை, தூங்கட்டும் என்றார் கணவர்.

“எள் என்றால் எண்ணெயாக” நிற்கும் மனைவியாயிற்றே!

“இதோ நிமிஷத்துல..”என்று சொல்லிப் புத்தம் புது பெட்சீட்டோடு, தலையணைகளையும்  தட்டிக் கொண்டே வந்து போட்டாள். 

கணவனுக்கும் தோழிக்கும் சுவை பட இரவு உணவுகளை செய்து கொடுத்து விட்டு பிள்ளைகளின் பக்கத்தில் போய்ப் படுத்துக் கொண்டாள்.

கணவன் வருவான் வருவான்.. .. என்று காத்திருந்தாள்.

மணி இரவு பத்து ஆயிற்று ..பதினொன்று ஆயிற்று .. பனிரெண்டும் ஆயிற்று.

“வைகுண்ட ஏகாதசி”க்கும், “மாசி மகாசிவராத்திரி”க்கும் விடிய விடியக் கண் விழிப்பார்கள், கடவுளுக்காக.

இவள் கணவனுக்காக கண் விழித்தாள். உறங்கியும் உறங்காமலும் பார்த்திருந்தாள் . 

எட்டி எட்டிப் பார்த்தாள். கணவனும் அந்தப் பெண்ணும் வாய் சலிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சிவராத்திரியும் வைகுண்ட ஏகாதசியும்  எப்படியும் ஒரு சமயம் ஆளைக் கவிழ்த்திவிடும்! 

“வீட்டுச் சிவராத்திரி”யாச்சே, தூங்கி விடக்கூடாது என்று மனைவி எவ்வளவோ முயன்று பார்த்தாள். இமைகளை யாரோ பலவந்தமாகப் பிடித்து இழுப்பதைப் போல உணர்ந்தாள். மீற முடியவில்லை.

மெல்லக் கண்ணயர்ந்து போனாள் மனைவி. 

பூனை போல எட்டிப் பார்த்தான் கணவன். மனைவி தூங்குவதைக் கண்டு குஷியோடு  கதவைத் தாளிட்டுக் கொண்டான்!

விடிய விடிய “எத்தனை முறை பேசினார்”களோ தெரியாது, அத்தனை களைப்புக்களும் ஒன்று கூடி அசையமாட்டாமல் கிடந்தார்கள் ஜோடிகள். 

வீட்டு வாசலைத் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு வந்த மனைவி, யோசித்தாள்.

அப்போதுதுõன்  உறைத்தது!  

தான் மோசம் போய்விட்டோம் என்று இடிந்து போனாள்.. 

கோவலனைக் கொன்று விட்டான் பாண்டியன் என்று தெரிந்த பிறகுதான் கையில் சிலம்போடு மதுரைக்கு தலைவிரி கோலமாக வந்தாள் கண்ணகி. 

கணவனை வென்றுவிட்டாள் வந்தவள் என்று தெரிந்த பிறகுதான் வாசல் பெருக்கும் விளக்குமாற்றோடு கதவைத் தட்டினாள் ஓங்கி!

“தடால் தடால்” என்று கதவு தட்டப்பட்டதால் பதறிப் போய்க் “கதவைத் திறந்த கணவனுக்கு ஒரே அதிர்ச்சி!

மனைவி கையில் பெருக்கமாறோடு நின்றுகொண்டிருக்கிறாள்.

மனைவிக்கோ இரட்டிப்பு அதிர்ச்சி!

கணவனும் விருந்தாளிப் பெண்ணும்  “ஆள் பாதி ஆடை பாதியாக இருக்கிறார்கள். லுங்கியால் முக்காடு போட்டுக் கொள்ள முயன்றான் கணவன், முடியவில்லை. அவளோ படுக்கையின் மறுபக்கம்  “அடித்துப் போட்டது போல” அசையக் கூட முடியாமல்  கிடந்தாள், மூடியும் மூடாமல்!

விளக்கு மாற்றோடு விலாசித் தள்ள வந்தவளைக் அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாற்றினான் கணவன்.

கதவைத் திறந்து கொண்டு குனிந்த தலை நிமிராத “பத்தரைமாற்றுத்” தங்கமாக விருந்தாளிப் பெண் வெளியேறினாள்.

என்னங்க இது? என்று கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

ஒண்ணுமில்ல தங்கம். பேசிக்கிட்டே இருந்தமா அப்படியே அவ ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் படுத்துத் தூங்கிட்டோம்.  பயங்கர” டயர்ட்டுனஸ்ஸ்.ஸ்....வெறொன்னும் இல்லை செல்லம் என்றான்.

அப்படியே தூங்கினா ஆடைகள் எதுக்கு அப்படிக் கிடக்கணும்? என்றாள்.

அது கூடத் தெரியாமத் தூங்குறாள்னா எவ்வளவு களைப்பா இருந்திருப்பா, பத்து நாளா அவளுக்குத் தூக்கமே இல்லையாம். நம்ம வீட்டுலதான் வந்து நிம்மதியாத் தூங்குறாளாம்  என்றான்.

எப்பச் சொன்னா? தூங்கறதுக்கு முன்னாலயா, பின்னாலயா? அவ இன்னும் எழுந்திருக்கவே இல்லையே, எழுந்திரிக்கற மாதிரியும் தெரியலையே? என்றாள் ஓரக் கண்ணால் பார்த்தபடி.
*

“கட்டுச் சோற்றை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்பாள். கட்டின  புருஷனை விட்டுக் குடுக்க மாட்டா நம்ம பொம்பளை”ன்று ஒரு பழமொழி இருக்கு.

கண்ணால வேறு பார்த்துட்டா. அதனால இப்போச் சண்டைக்கு நிக்கறா! “சாது மிரண்டால் காடு கொள்ளாது”.” பத்தினி மிரண்டாலும் வீடு கொள்ளாது”!!

அவனால் ஆசையை விட முடியாது.

அதனால் தோழியின் வீட்டுக்கே போக ஆரம்பித்தான் கணவன்.

ஒண்ணு அவளோட புருஷன் இடம் தரணும்.

இல்லேண்ணா இவனோட பொண்டாட்டி இடம் தரணும்.

இரண்டு பேருமே இடம் தரலைன்னா ரோட்டுக்கா போக முடியும்?

அதனால்  கணவனும் தோழியும் மதுரைக்கே போய் விடுதியிலேய தங்க ஆரம்பித்துவிட்டார்கள்!

*

தாய் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தாள்.  பிள்ளைகளைப் அவளது பெற்றோரே வளர்த்தார்கள்.

ஆம்பளைங்கன்னா அப்படி இப்படித்தாம்மா இருப்பாங்க.. போனது போகட்டும். õப்பிள்ளைக்கும் வயசாயிடுச்சு. இப்போத் திருந்தியிருப்பாரு. போய் அவரோடயே இரும்மா, பிள்ளைகள் வேற பெரிசாயிடுச்சு..என்று பெற்றோர் சொல்லிப் பார்த்தார்கள். சொந்த பந்தங்களை வைத்துப் பேசிப் பார்த்தார்கள்.

கணவனின் கள்ளக் காதலைப் பற்றி எப்படிச் சொல்வாள்? அதனால் கோபத்தை வேறு விதமாகக் காட்டினாள் . எனக்கு  அவர் வேண்டாம்.  அவரோட வாழவே மாட்டேன். கடவுளே வந்து சொன்னாலும் கேட்க மாட்டேன். ஆனா எங்கப்பா போட்ட அத்தனை பவுன் நகைகளும் “குண்டுமணி” கூடக் குறையாமக் எனக்கு வந்தாகணும் என்று  கர்ஜித்தாள்.

அவன் என்ன செய்வான்?

கோர்ட்டுகளே வாய்தா போட்டுக் காலத்தை ஓட்டும்போது அவன் செய்ய மாட்டானா?

தொழிலில்  நஷ்டமாயிடுச்சு.. கொஞ்சம் கொஞ்சமா நகைகளைத் திருப்பித் தந்துடறேன்னு  சொல்லிச் சொல்லியே இழுத்தடித்தான்.

அவளும் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

இருந்தாள்..

இருக்கிறாள்

இருந்து கொண்டே இருக்கிறாள் இன்றும், மதுரையில்!

அந்தக் கணவன் மீது ஏற்பட்ட வெறுப்புத்தான் இன்று வரைத் தணியாத “தனலாக “தனக்குள்ளே கனன்று கொண்டிருப்பதாகக் கூறுகிறாள் அந்தப் பெண்மணி.

இருவருக்கும் பற்கள் போய் கன்னங்களில் குழி விழுந்துவிட்டன. 

கிழவன் கிழவியாகிவிட்டார்கள்.

ஆனாலும் தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள்.

கணவன் செய்த துரோகம் நகை வடிவில் மாறி அவளை வாட்டி வதைக்கிறது.

நகைகள் வந்தால் நிம்மதியாகக் “கண் மூடுவேன்” என்று காத்திருக்கிறாள்.

காலம் அவர்களை இன்னும் சேர்த்து வைக்கவில்லை. 

இப்படியுமா வினைகள் இருக்கும்? என்று கேட்கலாம்.

எப்படியும் இருக்கும். ஆனால் விட்டுக் கொடுத்தலும்  மன்னித்தலும் மறத்தலும், இறைபக்தியும் இருந்தால் வினைகள் கூட யோசிக்கும்!

தீவினைகளை நல்வினைகளாகப் மாற்றும் அறிவுதான் நம்மிடம் கைவசம் உள்ளதே!

அந்த அறிவைச் சிந்திக்கவிடாமல் “நான் எனது” என்ற ஆணவம் நம்மைச் சிறைக்குள் போட்டுப் பூட்டி வைத்துள்ளதே! 

(ஞானம் பெருகும்)

Tags : gnana yogam ஞான யோகம்

More from the section

38. சரணாகதி
37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?
36. குடும்பத்தில் சீரியல் பாதிப்பா?
34 . காதல் திருமணங்கள்
33. அழகின்மையின் அழகு!