சனிக்கிழமை 23 மார்ச் 2019

36. குடும்பத்தில் சீரியல் பாதிப்பா?

By கே.எஸ். இளமதி.| Published: 30th January 2019 10:00 AM

 

அறிவைச் சிந்திக்க விடாமல் “நான் எனது” என்ற ஆணவம்  பூட்டியுள்ளது வரை சென்ற வாரம் பார்த்தோம்.

பிடிக்காத கணவன்  - மனைவி

நிச்சயமாக எல்லாக் கணவனுக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் மனைவியைப் பிடிக்காது. அது போல எல்லா மனைவிக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் கணவனைப் பிடிக்காது. இதைத் தவிர்க்கவும் முடியாது. இருவருக்குமே பிடித்தமான வாழ்க்கை எவருக்குமே கிடைக்காது, ராமன் சீதையைத் தவிர.

வாழ்க்கை வெறுக்கும் போதுதான் ஆன்மிகம் விளையும் என்கிறது வேதங்கள். இது பலவருடங்களுக்கு முந்தைய உண்மைக் கதை. எங்கள் உறவுக்காரப் பெண் பரிமளா மிகவும் அழகாக இருப்பாள். ஒரே பையன் என்று நிறைய நகை போட்டுக் கட்டிக் கொடுத்தனர் தர்மலிங்கம் தாயம்மா தம்பதியினர். முதன்முறையாகத் தாய்வீட்டுக்குக் கணவனோடு திரும்பினாள் பரிமளா. மகள் சந்தோஷமாக வருகிறாளா என்பதை வாசலில்  நின்று “வைத்த கண் வாங்காமல்” வாய் பிளந்து நின்றனர் பெற்றோர். 

வரும் போதே முகத்தைக் கைக் குட்டையால் பொத்திக் கொண்டே வந்தாள் மகள். கணவனை விட்டுச் சில அடிகள் முன்னால் ஓடிவந்தவள்,  பெற்றோரைக் கூட நலம் விசாரிக்காமல் ஓடிப் போய்த்  தனது அறைக்குள் நுழைந்து கதவைப் பூட்டிக் கொண்டாள்! உள்ளே இருந்த “வாஷ் பேஷினி”ல்  மூக்கைச் சிந்திச் சிந்தி அழும் சத்தம் கேட்டுப் பெற்றோர் இடி விழுந்தாற்போல் ஆகிவிட்டனர்!

ஆள் அழகா இருக்கான்னு பார்த்துக் குடுத்தீங்கள்ல? இவளுக்கு  அவனைப் பிடிக்கலை. அதான் காரணம் என்று கிசுகிசுத்தாள் தாயம்மாள்.

மாப்பிள்ளைக்கு ஒப்புக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு இருவரும் வீட்டுக்குள் ஓடினர். மாப்பிள்ளையோ “ஈஸி சேரில்” போய் ராஜா போலச் சாய்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஆட்டினான். “குரு சிஷ்யன்” படத்தில் இன்ஸ்பெக்டர் வினு சக்கரவர்த்தி ரஜினி, பிரபுவைப் பார்த்து என் வீட்டுல வந்து எனக்கு முன்னாலேயே தெனாவட்டா உட்கார்ந்து  கால் மேல கால் போட்டு அதை ஆட்டிக்கிட்டு இருப்பீங்களா? என்று கேட்பார். அப்படித்தான் இருந்தது. தாயம்மா படபடப்போடு  மகளின் அறைக் கதவைத் தட்டினாள்.

என்னம்மா அவசரம்..என் கஷ்டம் தெரியாமத் தட்டறியே என்றபடி மீண்டும் மீண்டும் மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள் பரிமளா. பொறுமை இழந்த தர்மலிங்கம்  மூலையில் வைக்கப்பட்டிருந்த உலக்கையை எடுத்து மாப்பிள்ளை தலையில் ஒரே போடாகப் போட்டுவிடலாமா என்று நினைத்தார். தர்மலிங்கத்துக்குச் சின்னக் கோபம் வந்தால் கூடக் கிடைப்பதை எடுத்து வீசக் கூடியவர்! இதுவரை பத்தாயிரம் தடவையாவது தன் மீது  “ஏவுகணை”களை வீசியிருப்பார் என்று தாயம்மாளுக்குத் தெரியும்! தன்øனையே உலக்கையால் அடிக்க வந்தவராயிற்றே!

நிலைமை விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்த தாயம்மா “கோளாறாக”ப் போய் உலக்கையை எடுத்தாள், மறைத்து வைப்பதற்காக! பாய்ந்து வந்த தர்மலிங்கம், மனைவியிடமிருந்து உலக்கையைப் பிடுங்கி, பொம்பளைங்க ஜெயிலுக்குப் போகக் கூடாது தாயம்மா. நானே  இவனைப் போட்டுத் தள்ளிட்டு உள்ள போயிடறேன் விடு என்றார். அவசரப்படாதீங்க. என்ன நடந்துச்சுன்னு விசாரிக்க வேண்டாமா. என்னமோ பண்ணிட்டான்.  அவ அழுது பார்த்ததே இல்லீங்களே,  அந்த மாமியாக் கிழவிதான்  கொடுமைப்படுத்தியிருப்பா. போதும் இவனோட வாழ்ந்தது, இனிமே இவ அவங்கூடப் போக வேண்டாங்க  என்றாள் தாயம்மா. மாப்பிள்ளை மெல்ல எழுந்து வந்தார்.

என்ன அத்தையும் மாமாவும் உலக்கையும் கையுமா நிக்கறீங்களே, எனக்காக மாவு இடிக்கப் போறீங்களா. பரிமளா சொல்லியிருக்கா. என்னமோ உலக்கையாலயே இடிச்சுப் புட்டு பண்ணுவீங்களாமே,  சூடா அள்ளி வாயில போட்டா “ஸ்மூத்தாப்” போய் தொண்டைக்குள்ள  இறங்கிடுமாமே! என்றார் இளித்தபடியே. வந்ததுல இருந்து அவ அழுதுட்டு இருக்கா, உனக்குப் புட்டு ஒரு கேடா, அதுவும் சூடா? இரு இரு உன் மண்டையப் பொளந்து “மாவிளக்கு” ஏத்தறோம் என்று முணுமுணுத்தாள் தாயம்மா. அறையிலிருந்து வெளிப்பட்ட பரிமளாவின் மூக்கு முகமெல்லாம் அழுது அழுது வீங்கியிருந்தது.

என்னம்மா ஆச்சு உனக்கு? எதா இருந்தாலும் தைரியமாகச் சொல்லும்மா, நாங்க இருக்கோம் என்றபடி உலக்கையால் தரையை “டங் டங்..” என்று தட்டினார் தர்மலிங்கம். அப்பாவும் அம்மாவும் எதுக்கு இப்போ உலக்கையும் கையுமா நிற்கறீங்க? ஓ.. அவருக்காகப் “புட்டரிசி” இடிக்கப் போறீங்களா? என்ன அவசரம், ராத்திரி வரும்போது தெரியாதா? போங்க, போய் முதல்ல  உலக்கையை வச்சிட்டு வந்து, அவருக்கு “ஸ்வீட் காரம்” குடுங்க என்றபடி சமையல் அறைக்குப் பாய்ந்தாள் பரிமனா. உலக்கையைக் கீழே போட்டுவிட்டுப் பின்னாலேயே ஓடினர் பெற்றோர்.

உண்மையைச் சொல்லுடீ ஏன்டீ அழுதே. மாமியாக்காரி கொடுமை பண்றாளா? இவன் “சங்காத்தமே இனிமே வேணான்டீ. பேசாம  இங்கேயே இருந்துடுடீ. பதில் சொல்ல முடியாமல் திணறினாள் பரிமளா. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய  தங்கையும் தம்பியும்  வந்துவிட்டதால் தப்பித்தான். தம்பியும் தங்கையும் பரிமளாவைக் கட்டிக்கொண்டனர்.

நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியில இருங்க ப்ளீஸ். அப்பா அம்மாகிட்டக் கொஞ்சம் தனியாப் பேசணும்,  நீங்களும்தான் என்று கணவனையும் முறைத்து அனுப்பிக் கதவைத் தாளிட்டாள் பரிமளா. சொல்லித் தொலைடீ  மனசு படபடக்குது. தலை சுத்தறது என்றாள் தாயம்மா. நான் “அழுது வடிறதுக்கு” இதுதாம்மா காரணம் என்று தனது உள்ளங்கையைத் திறந்து காட்டினாள் பரிமளா. அடிப்பாவீ மகளே என்னடீ இதெல்லாம்?

பரிமளாவின் பட்டுப் போன்ற உள்ளங்கையில் இருந்த அலுமினியக் குப்பியைக் கண்டு அதிர்ந்து போனார்கள் பெற்றோர். சயனைடுதானேடீ இது? தீவிரவாதிகள்தானே  இதை எப்பவுமே கையில வச்சிருப்பாங்க? நீ எதுக்குடீ   வச்சிட்டு இருக்கே? ஓ..ஆறு மணி சீரியல்ல புருஷனுக்குப் பால்ல  கலந்து குடுப்பாளே. அதுக்காகவா? அந்த “கண்றாவியப்” பண்ணுறதுக்கு இங்க எதுக்குடி இழுத்துட்டு வந்தே. அங்கேய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே,  யாருக்கும் சந்தேகம் வராதுல்ல? மீறித் தெரிஞ்சுப் போச்சுன்னா “பெத்த மகன் பொண்டாட்டி பக்கமா மாறிட்டான்”ங்கற ஆத்திரத்துல  ஆத்தாளே “வச்சிக் குடுத்துட்டான்”னு  பிளேட்டை மாத்திடலாமே பரிமளா. மாமியாளையும் உள்ள தள்ளிட்டு மகராசியா நெஞ்சை நிமிர்த்திட்டு வந்திருக்கலாமே என்றாள் தாயம்மா.

இந்த சீரியல் பத்து வருஷத்துக்கு முன்னால வந்திருந்தா இந்தக் கொடுமையப் பார்க்க நான் இருந்திருக்க மாட்டேன் பரிமாளா என்ற தர்மலிங்கம், ஏழு மணி சீரியல்ல “உலக்கையால”யே புருஷனைப் போட்டுத் தள்ளுவா, அதுக்கு இது எவ்வளவோ தேவலை, சத்தமில்லாம ஜோலிய முடிச்சிடலாம்..ஆனா அதுக்கு நீ தேர்ந்தெடுத்த இடந்தான் சரியில்லைம்மா என்று நொந்து கொண்டார். இதுவும் கூட நல்லதுதாங்க. எந்தத் தாய் தகப்பனும் தன் வீட்டுல வச்சி தன் மகளுக்குத் தாலி அறுக்கற காரியத்தைச் செய்யமாட்டாங்க. அதனால நாமலே பண்ணினாக் கூட நம்ம மேல எந்தச் சந்தேகமும் வராதுங்க  என்றாள் தாயம்மா. அப்போ புட்டு மாவுலயே கலந்து விட்டுடலாமே, மாப்பிள்ளையும் விரும்பிச் சாப்புடுவாரு பாரு... என்றார் தர்மலிங்கம்.

போங்க நீங்க போய் முதல்ல அரிசியக் குத்துங்க. அதுக்குள்ள நான் எப்படிக் கலக்குறதுன்னு  இவளுக்குச் சொல்லிக் குடுத்துட்டு வர்றேன்.  முந்தா நாள் சீரியல்ல  அதத்தான் அழகழகாச் சொல்லித் தர்றான் என்று தர்மலிங்கத்தை உலக்கையோடு தள்ளிவிட்டாள் தாயம்மா. இருடீ  அவசரப்படாதே.  என்ன நடந்துச்சுன்னே தெரியாமப் பண்ணி ஏடாகூடமா மாட்டிக்கக் கூடாது தாயம்மா. மாப்பிள்ளை செத்துட்டாருன்னா முதல்ல வயற்றத்தான் அறுப்பான்.  அப்பறமா கூண்டோட நாம  கம்பி எண்ண வேண்டியதுதான்!  “நைட் சீரியல்”ல அதைத்தானே காட்டறான். மாமியா மருமகளுக்குப் பால்லயே கலந்துடுவா. விட்டானா போலீசு? விடலையே வயத்தைக் கிழிச்சு மாமியாளை உண்டு இல்லேன்னு பண்ணிட்டானே. நான் கூட அந்தப் போலீசைப் “பாராட்டிக் கடிதம்”அனுப்புச்சேனே! உனக்குத்தான் தெரியுமே. ஆமாம் ..ஆமாம் என்று  தலையாட்டினாள்  தாயம்மா. அப்பாவும் அம்மாவும்  சீரியலாப் பார்க்கறீங்கன்னு  தெரியுது. பொதிகையில ‘டீசென்ட்டா” கோர்ட்டுலயே போய் “டைவர்ஸ்” வாங்கறதைக் காட்டறான். அதெல்லாம் உங்க கண்ணுக்குப் படலையா? அதையெல்லாம் எவன் பார்ப்பான் பரிமளா,  காலம் மாறிடுச்சு. இப்போல்லாம்  “வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு” ன்னு “ஓப்பனா”க் காட்டறான். இருந்தாலும் நியாயம்னு ஒண்ணு இருக்குல்ல?  முதல்ல முறைப்படி மாப்பிள்ளை கிட்டக் கேட்போம். சயனைடும் கையுமா இருக்கற அளவுக்கு அவளை  என்னப் பண்ணினீங்கன்னு  விசாரிப்போம்.. அவன் வாயில இருந்து என்ன வர்றதுன்னு கேட்டுட்டு அப்பறமா முடிவெடுப்போம், என்ன நான்  சொல்றது என்றார் தர்மலிங்கம். அதான் படிச்சவர்ங்கறது என்றாள் தாயம்மா.

“தாரை வார்த்”த கைகளால் மகளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றனர் பெற்றோர். கைகளை வெடுக்கென்று பிடுங்கினாள் பரிமளா. என்னன்னு தெரியாமப் பேசாதீங்கம்மா, அப்பா இங்க பாருங்க என்று சொல்லி உள்ளங்கையிலிருந்த அலுமினியக் குப்பியைத்  திறந்து காட்டினாள் . அதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்!

என்னடி இதெல்லாம்?

“மூக்குப் பொடிப்பா!”

மூக்குப் பொடியா அடச் சீ! என்ன கண்றாவிடி இது?

அவருக்குச்  சிகரெட் பழக்கம் இருக்கா, குடிப்பழக்கம் இருக்கா, பொண்ணுங்க சகவாசம் இருக்காண்ணு கண்ணுல “விளக்கெண்ணைய” ஊத்திட்டுப் பார்த்தீங்கள்ல?  ஆனா சின்ன வயசிலருந்தே “மூக்குப் பொடி”ப் பழக்கம் இருந்ததைக் கண்டுபிடிச்சீங்களா? ரெண்டு நாளைக்கு முன்னாலதான் எனக்கே தெரிஞ்சது.

அடிப்பாவி, அதுக்கா வரும்போதே அழுது வடிஞ்சே?

ஆமாம், ஆனா அது அழுகை இல்லை. .நானும்  அதைப் பழகிட்டேன். ஐ ஆம் சாரிப்பா, சாரிம்மா என்னை மன்னிச்சிடுங்க.

அடச் சீ.. தள்ளி நில்லுடீ!

கொஞ்சமா விரல்ல தொட்டு மூக்குல வைச்சு உறிஞ்சிப் பாரும்மா...சும்மா ஜுர்.ர்..ர்..னு உச்சந்தலைக்குக் காரம் ஏறும். அடடா. அதெல்லாம் சொல்லித் தெரியாது. அப்படித்தான் நானும் பழகிட்டேன்ம்மா. ஆனா “ரியலி இட் ஈஸ் சூப்பர்! ஊருல அவனவன் என்னன்னமோ  பண்றான். இவரு என்னமோ பொடிதானே போடறாரு.. இது ஒரு “சில்லி” மேட்டர்!

ஆனா “சில்லிப் பொடி” மாதிரி எரியுமேடீ!

பழகிட்டா சரியாயிடும்மா. பட், சளி கொட்டிட்டே இருக்கும். மூக்குச் சுத்தமாகுமே. மூக்கைக் கழுவிட்டு வரலாம்னுதான் உள்ள போய் கதவைப் பூட்டினேன்.. அதுக்குள்ள “ஆர்ப்பாட்டம் பண்ணிட்டீங்களே, “சீரியலா”ப் பார்த்துக் கெட்டுப் போயிட்டீங்க ரெண்டு பேரும் என்றாள் பரிமளா.

வேறென்னமா பண்ணச் சொல்றே? நீ இல்லாம ரொம்பப் போரடிக்குதே என்றார் தாயம்மா.

ஆமாம் ஆமாம்..என்று தலையாட்டினார் தர்மலிங்கம்.

அதன் பிறகு நடந்ததைக் கேட்டால் நம்ப மாட்டீர்கள்!

அந்த மூக்குப் பொடிப் பழக்கம் அப்படியே மாமனார், மாமியார், மைத்துனன், மைத்துனி என்று அனைவரையும் தொற்றிக் கொண்டது! மாப்பிள்ளை எல்லோருக்கும் பிடித்துப்போனதுதான் காரணம்! மாப்பிள்ளை வசதியானவர், நல்லாக் குடிப்பவர் என்றால் மாமனார் வீட்டாரும் “கம்பெனி” கொடுக்கும் நாகரீகம் வந்துவிட்டது! அசைவத்தையே அறியாத குடும்பத்தினர் மருமகனுக்காக  அசைவத்துக்கு மாறியுள்ளனர்! மனதுக்குப் “பிடித்துவிட்டால்” கெட்ட பழக்கமானாலும் அது நல்ல பழக்கமே!

அதே சமயம்-

மனதுக்குப் பிடிக்கவில்லை என்றால் அவன் என்னதான் நல்லவனாக இருந்தாலும் மனைவிக்குப் பிடிக்காது. மாப்பிள்ளை யோக்கியமானவர். கோயில் குளம் என்று சுற்றக் கூடியவர். ஆனால் மனைவிக்கு அவரைப் பிடிக்கவில்லை! வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தாய் வீட்டுக்குப் போய்விட்டாள்! அதைவிடக் கொடுமை! நாகரீகமானவன், ஆணழகன், வீடு வாசல் சொத்து ப்பத்துக்கள் ஏராளம். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்காதவன்! மனைவியின் காலைக் கூட அமுக்கி விடும் தொண்டுள்ளம் படைத்தவன். அப்படிப்பட்டவனை உதறிவிட்டு விட்டு எவனோ ஒரு “தறுதலை”யோடு ஓடிவிட்டாள் மனைவி!

இப்படியுமா?

ஆம். எப்படியும்  இருக்கும். எப்படியும் வரும் வினைகள். எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதற்குத்தான் இறை ஞானம் வேண்டும்! கணவன் மனைவிக்குத் துரோகம் செய்வதோ, மனைவி கணவனுக்குத் துரோகம் செய்வதோ “கண்ணுக்குத் தெரியாத” வினைகளின் விளையாட்டு. நன்றாகக் கவனியுங்கள். வினைகளைப் பொறுத்தவரை இவை எல்லாம் ஒரு விளையாட்டே. இதைப் புரிந்து கொண்டவனுக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டு!

மேனாட்டுக் கலாச்சாரம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு!

(ஞானம் விரியும்)

Tags : Yoga Wisdom ஞானம் Gnana yoga ஞான யோகம் gnana ஞான மார்க்கம்

More from the section

38. சரணாகதி
37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?
35. கள்ளக் காதலி
34 . காதல் திருமணங்கள்
33. அழகின்மையின் அழகு!